நீட் பயிற்சி மைய கொள்ளையர்கள் வளர மத்திய அரசு காரணம்?!

ban-neet
ban-neet

மருத்துவ படிப்பின் மீதான மோகம் மிகப் பெரிய மோசடிகளுக்கு வித்திடுகிறது.

சமுதாய அந்தஸ்துடன் நிலையான வருவாய் அளிக்கும் ஒரே படிப்பாக மருத்துவம் இருப்பதாக பெரும்பாலோர் கருதுவதால் இந்த இழி நிலை.

மருத்துவம் சமுதாய தொண்டு என்று யாரும் படிக்க வருவதில்லை.

அதனால்தான் பெற்றோரே பிள்ளைகளை முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முனைகிறார்கள்.

தகுதி பெற்றோர் மட்டுமே மருத்துவம்  படிக்க  வேண்டும் என்பதுதான் நீட்டின் நோக்கம் என்றால் நிர்வாக ஒதுக்கீட்டில் தகுதி பெற்றோர் மட்டும்தான் சேர்க்கப்படுகிறர்களா ? நீட்டின் நோக்கம் நிர்வாக ஒதுக்கீட்டில் நிறைவேறாது என்றால் எதற்கு நீட்? 

நீட் தேர்வே தேவையில்லை என்று போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நீட்தேர்வு கட்டாயம் என்று இருப்பதால் நீட் தேர்வை மையமாக வைத்து பயிற்சி மையங்கள் காளான்கள் போல பெருத்து விட்டன.

அத்தகைய பயிற்சி மையங்களுக்கு விதி முறைகள்  ஏதும் இல்லை.  அதனால்  அவர்கள் வைத்ததுதான் சட்டம்.   கேட்பதுதான் கட்டணம்.

நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி நிர்வாகம் சார்பில் நீட் பயிற்சி மையம் நடத்தப் பட்டு  வருகிறது.

வருமான வரி அதிகாரிகளுக்கு வந்த தகவல் அடிப்படையில் அவர்கள் சோதனை நடத்தியதில் ரூபாய் இருநூறு  கோடி அளவுக்கு வருமானம் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து முப்பது கோடி ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப் பட்டிருக்கிறது.

ரசீது வழங்காமல் பணம் வசூலிப்பது  அதிக கட்டணம் என்று முறைகேடாக சம்பாதித்த பணம் பல நூறு கோடிகளில் இருக்கும் எனத் தெரிகிறது.

அரசுக்கு வரி ஏய்ப்பு மட்டும்தான் பிரச்னை. அதை கட்டி விட்டால் எத்தகைய முறைகேட்டையும் அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதுதான் இன்றைய நிலை.

ஒரு தவறான திட்டத்தை மக்களிடம் திணித்தால் அவர்கள் அதை எதிர்த்துப் போராடுவதற்குப் பதில் அதில் தாங்கள் மட்டும் எப்படி பயனடையலாம் என்று முயற்சிப்பதே இத்தகைய முறைகேடுகளுக்கு காரணம்.

பயிற்சி மையத்தில் படிக்கும் அத்தனை பேருக்கும் இடம் கிடைத்து  விடப்  போவதில்லை. ஆனாலும் அலைகிறார்கள்.

ஒன்று நீட் பயிற்சி மையங்களுக்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும் அல்லது நீட்டையே ஒழிக்க வேண்டும். இதில் இரண்டாவதுதான் எளிதில் பிரச்னையை தீர்க்கக் கூடியது.