மூடநம்பிக்கை பில்லி, சூனிய ஒழிப்புச்சட்டம் இயற்ற வேண்டும் தமிழக அரசு ??!! மகாராஷ்ட்ர, கர்நாடக அரசுகளை தொடர்வோம் ??

Share

திராவிட இயக்கம் நிலைபெற்று விட்ட தமிழகத்தில் மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .

இந்தியாவிலேயே பீகார் ஜார்கண்ட் சத்தீஸ்கார் மாநிலங்களில்தான் பில்லி சூனிய ஒழிப்பு சட்டங்கள் இருந்தன.   ஆனால் அவைகள் வெற்றி பெற்றிருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய இயலாது.

ஆனால் மகாராஷ்டிரத்தில் நாத்திக சிந்தனையாளர் நரேந்திரா தபோல்கர் கொலை செய்யப்பட்ட பின்பு அந்த மாநில அரசு மகராஷ்டிரா பில்லிசூனியம் நரபலி தடுப்பு மற்றும் ஒழிப்புச்சட்டம் 2013  ( Maharaashtra Prevention and Eradication of Human Sacrifice and other Inhuman Evil and Aghori Practices and Black Magic Act 2013 )இயற்றியது.    சிவசேனாவும் பா ஜ க வும் கொண்டுவந்த பல திருத்தங்கள் ஏற்றுக்கொள்ள பட்டன.

அதே போல் கர்நாடகாவிலும் குல்புர்கி என்ற புகழ் பெற்ற நாத்திக சிந்தனையாளர் கொலை செய்யப் பட்ட பிறகு கர்நாடகா பில்லிசூனியம் நரபலி தடுப்பு மற்றும் ஒழிப்புச்சட்டம் தாக்கலாகி விவாதத்திற்குப் பின் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.    சில பல மாற்றங்களுடன் விரைவில் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் அதிகம்.

இந்தியா முழுவதும் நிறைவேற்றபட  வேண்டிய சட்டம் இது.

உடன்கட்டை  ஏறுவதையே சட்டம் கொண்டு வந்துதான் ஒழிக்க வேண்டி வந்தது .    இன்னமும் அதை போற்றுபவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

ஜோதிடத்தை பயிற்றுவிக்க பல்கலைகழக மானிய கமிஷன் நிதி ஒதுக்கியதை தடுக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டதே.

மத நம்பிக்கைகளை பாதுகாக்கும் இந்திய தண்டணை சட்டம் பிரிவு  295 A  வுக்கும் விஞ்ஞான  பார்வையை வளர்க்க வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் பிரிவு 51 A(h)  க்கும் உள்ள முரண்பாடு நீக்கப்  பட வேண்டும்.

எந்தெந்த செயல்கள் மூடநம்பிக்கைக்கு உட்பட்டவை தடுக்கப் பட வேண்டியவை என்பதை ஆராய்ந்து இறுதி செய்ய அனைத்து தரப்பினரையும் கொண்ட பரிந்துரைக்குழு ஒன்றை தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும்.

ஜெயலலிதா இந்துத்துவ தீவிர விசுவாசி.     ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் தலைவியாக கோலோச்சி வருகிறார்.   பக்திக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளை அறியாதவரல்ல அவர் .

கலைஞர் சொன்னால் அது உள்நோக்கம் கொண்டதாக விமர்சிக்கப்படலாம் .     எனவே இந்த சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வருவது வரவேற்கப்படும்.

நரேந்திர தபோல்கர் போல் குல்பர்கி போல் தமிழ்நாட்டில் யாரும்  பலியாக  அனுமதிக்கக்  கூடாது.

வருமுன் காப்போம்??!!

This website uses cookies.