தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நீதிபதிகள் ஆசிரியர்கள்?!

indian-judges
indian-judges

இரண்டு செய்திகள் மிகவும் கவலை தருபவை.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் பெருங்களத்தூர் கஸ்துரிபாய்காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது .

அது மட்டுமல்லாமல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களை அறிவிப்பு அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற இயலாதது தகுதி குறைவு என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு யார் காரணம்?

அடுத்து, தமிழகம் மற்றும் புதுவையில் காலியாக இருக்கும் 31 மாவட்ட நீதிபதிகள் பதவிக்கு 4120 பேர் தேர்வு எழுதியதில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதில் அதிர்ச்சி என்னவென்றால் இந்த தேர்வு எழுதியவர்களில் 450க்கும் மேற்பட்டோர் சார்பு நீதிபதிகளும் குற்றவியல் நீதிமன்ற நடுவர்களும் ஆவார்கள். மற்றவர்கள் வழக்கறிஞர்கள்.

முதல் நிலை தேர்வில் யாரும் தேறாததால் முதன்மை தேர்வுக்கு செல்ல யாரும் இல்லை. எனவே மீண்டும் முதல்நிலை தேர்வு நடத்தியாக வேண்டும்.

தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் சொன்னார்கள். மேலும் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப் படுவதும் ஒரு காரணம்.

2005 ஆண்டு மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கலந்து கொண்ட 3000ம் பேர்களில் முறையே 16 பேரும் 23 பேருமாக தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

வேறொரு கோணத்தில் பார்த்தால் தகுதி இல்லாதவர்கள்தான் நீதிபதிகளாக பணியாற்றுகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

நமது தேர்வு முறையில் மாற்றம் தேவை!