தமிழக அரசியல்

ஒபிஎஸ் ஐ நீங்க ஆம்பளைங்களா என்று ஏன் கேட்டார் குருமூர்த்தி?

Share

நான்தான் ஒபிஎஸ் ஐ ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் செய்ய சொன்னேன்.    அதனால்தான் இரண்டு அதிமுக பிரிவுகளும் ஒன்றாகின. ஒபிஎஸ் என்னை சந்தித்தபோது நீங்களெல்லாம் என்ன ஆம்பளைங்களா என்று கேட்டேன். என்று பேசியிருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் விழாவில்.

சசிகலா முதல்வர் பதவி ஏற்பதை தடுக்கும் எண்ணத்தில் மத்திய பாஜக ஆட்சியாளர்கள் திட்டமிட்டு செயல்பட்டார்கள்.

குருமூர்த்தி இப்படி பேசுவது புதிதல்ல. ஆர் கே நகர் தேர்தலில் தினகரன் வெக்ற்றி பெற்றபோது அதிமுகவினரை “a bunch of impotents” என்று வர்ணித்தார். அதிமுகவினரை பார்த்து  இப்படி விமர்சித்தால் அவர்களிடம் இருந்து கடுமையான எதிர்வினை வராது என்ற நம்பிக்கை குருமூர்த்திக்கு .

இப்போது ஒபிஎஸ் தன்னை சந்தித்த போதும் அப்படியே அழைத்ததாக கூறுகிறார். இப்போதும் ஒபிஎஸ் நேரடியாக மறுக்கவில்லை.

ஜெயக்குமார் ஒரு ஆம்பிளை மற்றவரை ஆம்பிளையா என்று கேட்க மாட்டார் என்கிறார். தரங்கெட்ட செயல் என்கிறார். செல்லூர் ராஜு குருமூர்த்தி ஒரு உதிர்ந்த சருகு என்கிறார். மூன்றாம் தர ஆள் என்கிறார்.

முதல்வர் வாய் திறக்கவில்லை.

ஒபிஎஸ் ஏன் குருமூர்த்தியை சந்திக்க வேண்டும்? பெரிய அரசியல் ஞானி என்பதாலா? பத்திரிகை ஆசிரியர் என்பதாலா? எப்போதும் அரசியல் ஆலோசனை சொல்பவர் என்பதாலா? எதுவும் இல்லை.!

மத்திய பாஜக  அரசில் செல்வாக்கு மிக்கவர். ரிசர்வ் வங்கியின் இயக்குனராக பாஜக அரசு நியமித்து அவரது முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது. அவரிடம் பேசினால் மத்திய பாஜகவிடம் பேசுவது போல. அந்த நிலையில்தான் குருமூர்த்தியிடம் சென்று ஒபிஎஸ் ஆலோசனை கேட்டு தர்மயுத்தம் -சமாதியில் தியானம் என்று கலகத்தை தொடங்கினார். 

எனவே குருமூர்த்தியிடம் ஆலோசனை என்பது பாஜகவிடம் அடங்கிப் போவதற்குத் தயார் என்பதன் அடையாளம். 

குருமூர்த்தி ஏன் இப்படி அதிமுகவை சீண்ட வேண்டும்.?

இரண்டு காரணங்களுக்காக. ஒன்று ரஜினியை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு எதிர்காலத்தில் பாஜக திட்டமிடும் வியூகங்களுக்கு தாளம் போட வேண்டும்.   

எனவே ரஜினி எனக்கு காவி சாயம் பூச வேண்டாம் என்பதெல்லாம் வேடம்.

அந்த ஸ்க்ரிப்டை எழுதியதும் பாஜகவாகத்தான் இருக்கும்.

மீண்டும் சசிகலாவை உள்ளே விட மாட்டோம் என்பதற்குத்தான் ஐந்தாண்டு கால உறுப்பினர் நிபந்தனையை புகுத்தி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது அதிமுக பொதுக்குழு.

மேயர் தேர்தலில் கேட்ட இடம் கொடுக்காமல் மறைமுக தேர்தலை புகுத்தி பாஜக வின் கோபத்துக்கு ஆளானது அதிமுக.

அதேபோல் இன்னமும் முழுவதும் பாஜகவின் திட்டங்களுக்கு தலை ஆட்டாமல் போக்குக் காட்டி வருகிறது எடப்பாடி அரசு. எனவேதான் குருமூர்த்தி மூலம் ஒரு மறைமுகமான எச்சரிக்கையை மத்திய அரசு விடுத்திருக்கிறது என்றுதான் தெரிகிறது.

பார்க்கலாம் அதிமுக பாஜகவின் பிடியில் அகப்படப் போகிறதா விடுபடப் போகிறதா என்பதை?

This website uses cookies.