தமிழக அரசியல்

நவோதயா பள்ளிகள் வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டியது அரசா நீதிமன்றமா?

Share

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க தடை இல்லா சான்றிதழ்கள்  எட்டு வாரத்தில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேண்டுமா வேண்டுமா என்பதை தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க  வேண்டுமா  அல்லது  உயர்நீதிமன்றம் முடிவு  செய்ய முடியுமா?

அண்ணா தந்த  இரு மொழி கொள்கை அமுலில் உள்ள ஒரு மாநிலத்தில் மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும்    வேலையில் ஏன் உயர் நீதி மன்றம் இறங்க வேண்டும்?

தேவை இல்லை என்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அரசு என்ன செய்யபோகிறது.?

மேன் முறையீடு செய்ய போகிறதா?    அல்லது பா ஜ க அரசுக்கு அஞ்சி நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டது  நாங்கள் என்ன செய்வோம் என்று நவோதயா பள்ளிகளுக்கு திறப்பு விழா நடத்த போகிறதா?

நடப்பது அ தி  மு க ஆட்சி அல்ல  பா ஜ க வின் நிழல் ஆட்சிதான் என்பது வெளிப்படை.       இதுவரையில் எந்த பிரச்னையிலும் மத்திய அரசை கண்டிக்கவோ எதிர்க்கவோ ஆள்பவர்கள் தயாராக இல்லை.

பா ஜ க வுடன் கூட்டணி வைத்தால் என்ன என்று ராஜேந்திர பாலாஜி கேட்கிறார்.     கூட்டணி பற்றி பேசுவோம் என்று பழனிசாமி சொல்கிறார்.    எல்லா பேரத்தையும் முடித்து விட்டார்கள்.    கட்சியை அடகு வைப்பது அவர்கள் உரிமை.    தமிழக மக்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க இவர்கள் யார்?

ஆறு வகை பள்ளிகள் இயங்குவதே ஒரு அவமானம்.      ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் அரசு பள்ளிகள் சமச்சீர்  பாட  திட்ட மெட்ரிக் பள்ளிகள் அல்லாத பாடத்திட்ட மெட்ரிக் பள்ளிகள்  சி பி எஸ் சி பள்ளிகள் சர்வதேச பள்ளிகள் என்று கல்வியில் தொடங்குகிறது பாரபட்சம்.     அதுவே  வாழ்வின் அனைத்து துறைகளிலும் தொடர்கிறது.

இந்தியா முழுவதும் மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகள் வந்து விட்டன என்பது உண்மைதான்.      காங்கிரஸ் கட்சி இதை வரவேற்று இருக்கிறது.  அவர்கள் மும்மொழி  கொள்கையை ஆதரிப்பவர்கள் தானே.

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் பாட திட்டம் இடம் பெறும் என்கிறார்கள்.     + 1 +2 வகுப்புகளில் விரும்பினால் படிக்கலாமாம் .    அதுவும் எந்த அளவு அமுல் படுத்தப் படும் என்பது தெளிவில்லை.

நீட் தேர்வில் செய்த மோசடியை நினைத்தால் இவர்கள் நம்மை ஏமாற்ற  எதையும் செய்வார்கள் என்ற அச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

இந்தியை திணிக்கும் முயற்சியாகவே இதை பார்க்க வேண்டும்.

தமிழக அரசு என்ன செய்ய போகிறது?     விலை போய் விட்டார்களா என்பதன் உரை கல்லாகவே  அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை பார்க்கப் படும்.

 

This website uses cookies.