தமிழக அரசியல்

பல்லாயிரம் கோடிக்கணக்கில் மதிப்புள்ள சிலைகளை பாதுகாக்காத இந்து அறநிலையத்துறை?

Share

தஞ்சைக்கு பக்கத்தில் அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோவிலில் சுமார் 30 பஞ்சலோக சிலைகள்  சுமார்   ரூ  700  கோடி மதிப்புள்ளவை.    அவைகள் ஒரு சாதாரண அறையில்   150  ருபாய் மதிப்புள்ள பூட்டு ஒன்றினால் பாதுகாக்கப் படுகின்றன.  70  வயது பாட்டி பாதுகாவலர்.   இந்த தகவல்கள் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட ஒரு வழக்கில்  தெரிவிக்கப் பட்டவை.

அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் விலை மதிப்பற்ற கதவுகளும் சிலைகளும் காணவில்லை என்று ரங்கராஜன் நரசிம்மன்  என்ற பக்தர் தெரிவிக்கிறார்.

அதேபோல் நாகை மாவட்டம் கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் ஆலயத்திலும்  பல கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றன என்று யானை   ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் நீதி மன்றத்தில்  தெரிவிக்கிறார் .

விசாரிக்கும் நீதிபதி திரு ஆர் மகாதேவன் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் ஒன்பது அங்குல திரிசூலத்தையும்  15 அங்குல  தண்டபாணி சிலையையும்  காணவில்லை என்ற பத்திரிகை செய்தியை குறிப்பிட்டு இந்து அறநிலையத்துறை தகுந்த முறையில் பாதுகாக்க முடியாவிட்டால் அதற்கென தனி துறையை உருவாக்க வேண்டியதுதான் என்று குறிப்பிட்டி ருக்கிறார்.    கோவிலில் உள்ள 164  சிலைகளில்   112  சிலைகள்  தொன்மை மதிப்பு மிக்கவை என்பதால் தனி அறையில் வைத்து பாதுகாக்கப் படுகின்றன.    இந்த சிலைகள் பற்றிய குறிப்புகள்  1954  ல் தான் ஆவணப் படுத்தப் பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.  இவைகள் இன்னும்கூட மதிப்பிடப் படவில்லை என்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கக் கூடியது.

இந்த சிலை காணாமல் போனதுகூட கணக்குத் தணிக்கையில் தான் தெரிய வந்திருக்கிறது.

ஆக கோவில்களை விலை மதிப்பற்ற சிலைகளையும் ஆபரணங்களையும் பதுக்கி வைக்கும் இடங்களாக கருதினார்களா?     எப்போது வேண்டுமானாலும்  நாமோ நமது வாரிசுகளோ எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்திருக்கலாம்.

கோவில் சிலைகளும் சொத்துக்களும் காணாமல் போவது ஒன்றும் புதிதல்ல.

ஆனால் இத்தனை புகார்களுக்குப் பிறகும் தக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப் படாததற்கு யார் காரணம்?

எல்லாவற்றையும் சி பி ஐ தான் விசாரிக்க வேண்டும் என்றால் மற்ற காவல் துறைகள் எதற்கு?

அறநிலையத் துறையிடம் தமிழகம் முழுதும் உள்ள கோவில் சிலைகள் பற்றிய முழு விபரங்களும் உள்ளனவா?   அவைகள் ஒன்றிணைக்கப் பட்டு தகுந்த முறையில் பாதுகாக்கப் படுகின்றனவா?

கோவை பயணியர் நகர் கோவிலில் மூன்று சிலைகள் திருடப் பட்டு காவல் துறையில்  புகார் செய்யப் பட்டிருக்கிறது.   வெறும்   30000 மதிப்புள்ள சிலைகள் அவை.   சிறிய உண்டியலை கூட திருடர்கள் விட்டு வைக்க வில்லை.

கோவில் சிலைகள் பாதுகாக்கப் பட தனி துறை  ஏற்படுத்தப் பட வேண்டும் .  அதுவும் கால தாமதம் இன்றி.

This website uses cookies.