தமிழக அரசியல்

சாதி ரீதியில் இயங்குகின்றனவா பத்திரிகைகள்?

Share

கருணாஸ் மீது சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுகளில் ஒன்று பார்ப்பனர், நாடார் சாதி ஆதிக்கத்தில் பத்திரிகைகள் இருக்கின்றன என்பது. எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே இது இருப்பதில் என்ன தவறு என்றுதானே கேட்கவேண்டும்? யார் பத்திரிகை தொடங்குவதை யார்  எதிர்த்தார்கள்? சி. பா.ஆதித்தனார் உழைப்பால் உயர்ந்தவர். தினத்தந்தி ஆரம்பித்தபோது அது முதல் தமிழர் நாளிதழ். கூடவே நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கினார்.

நெடுங்காலமாக இருந்த பார்ப்பனர் ஆதிக்கத்தை ஊடகத்தில் இருந்து ஒதுக்கி வைத்து தமிழர்களுக்கும்  இடம் தேடிய முயற்சி அது. தினத்தந்தியை எல்லா தமிழ்ச் சாதிகளின் கொண்டாடின. நீதிக்கட்சி திராவிடர் கழகம் திமுக  போன்ற மக்கள் இயக்க செய்திகளை பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்த இந்து , தினமணி போன்ற பத்திரிகைகள் நான்காம் தர செய்திகளாக வெளியிட்டன.

அந்தக் காலகட்டத்தில் தமிழ் இன, மொழி  எழுச்சி செய்திகளை பரப்பியது தினத்தந்தி. எனவே அது எல்லா சாதிகளுக்குமான பத்திரிகை தான். உரிமையாளர் நாடார் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தார். இன்றைக்கும் தினத்தந்தி நம்பர் 1 இடத்தில் இருப்பதற்கு எல்லா சாதி தமிழர்களும்தான் காரணம். எல்லோருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் அது முதலிடத்தில் நீடிக்க முடியாது. பாரபட்சமின்றி எல்லா தரப்பு நியாயங்களையும் அது முன்னிறுத்துகிறது. தமிழர்களின் வாழ்வோடு இணைந்து விட்ட உறுப்பினர் தினத்தந்தி.

இன்றைக்கும் தினத்தந்தி மெருகு குறையாமல் தமிழர் உரிமைக்  குரலை ஒலிக்கும் வாகனமாக பயணம் செய்கிறது அதன் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. அதேபோல மாலை முரசு,  மாலை மலர், ராணி போன்ற பத்திரிகைகளும் எல்லா தரப்பினரையும் தான் வசீகரித்திருக்கிறது. அதன் நிறுவனர்  பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கு  முக்கியத்துவம் அளிப்பதினாலேயே அது  ஒரு சாதி பத்திரிகை ஆகிவிடாது. தினத்தந்தியின் செல்வாக்கை குறைக்க இந்து தமிழ் செய்தி வருகிறது. தினமலர் தோற்றுப்  போன இடம் அது. தினமணி வைத்தியநாதய்யர் ஆண்டாள் பற்றிய வைரமுத்து கட்டுரையை பிரசுரித்தற்காக சங்கர மடத்தில் சென்று  மன்னிப்பு கேட்பாரா இல்லையா? அன்றே நடுநிலை என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை தினமணி இழந்துவிட்டது.

எத்தனை பெரிய மக்கள் திரளாக  இருந்தாலும் அதை நான்கு வரி செய்தியாக போடுவது  இந்து பத்திரிகைவழக்கம். மகாத்மா காந்தி இறந்த செய்தியை இரண்டாம் பக்க செய்தியாக வெளியிட்ட பத்திரிகை அது. காரணம் சொன்னார்கள். அப்போது முதல் பக்கம் முழுதும் விளம்பரம் போட்டோம் என்று. அடப்பாவிகளா,  ஒரு தேசத்தின் தந்தை சுட்டுக் கொல்லப்  பட்ட செய்தியை விட உனக்கு விளம்பரம் முக்கியமாக போய் விட்டதா? கேட்க ஆளில்லை.

வேறு வழியில்லாமல்தான் இவைகளை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள். ஜல்லிக்கட்டை வரலாற்றின் கடந்த காலமாக கருதி மறந்து போக வேண்டியதுதான் என்று தலையங்கம் எழுதியது இந்து. பாரபட்சமாக செய்திகளை வெளியிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை அவர்களே சொல்லட்டும்! அதனால்தான் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை கொண்டு செல்ல கட்சி பத்திரிகைகள் நடத்துகிறார்கள் .

முரசொலி , நமது எம்ஜிஆர், நமது அம்மா, விடுதலை, தீக்கதிர் ,  இன்னும் எண்ணிலடங்கா கட்சிப் பத்திரிகைகளின் தேவை அதனால் தான். இன்று ஆங்கில பத்திரிகைகளில் இந்து, இந்தியன்  எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, எல்லாம் அவர்களால் நடத்தப்படுகின்றன. அவர்களோடு போட்டி போட்டு ஆங்கில பத்திரிகைகளை நடத்தி விட முடி முடியுமா?

தினத்தந்தி யின் DT next  ஆங்கில இதழ் முன்னேறவில்லையே. எனவேதான் பத்திரிகை தர்மம் கடைப்பிடிக்க அனைவரையும் வலியுறுத்துகிறோம் பத்திரிகை என்பது எல்லாருக்குமான பத்திரிகைகளாக உலா வர வேண்டும் அதை வலியுறுத்தும் சக்தி வாசகர்களுக்கு இருக்கவேண்டும். அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம்.

உரிமையாளரை வைத்து சாதி ரீதியாக குறை சொல்வது சமூக மோதல்களை வளர்க்கவே உதவும்.. கருணாஸ் பேச்சும் சரி  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடுக்கப்படும் ஒருசில  நாடார் சங்க நடவடிக்கைகளும் சரி அனைத்தும் இதைத்தான் நமக்கு போதிக்கின்றன. எல்லாரும் சேர்ந்து தமிழர் ஒற்றுமைக்கு உலை வைக்காதீர்கள்.

This website uses cookies.