தமிழக அரசியல்

தமிழ்நாட்டில் தெலுங்கர்; குட்டையைக் குழப்பிய ராதாரவி ?!

Share

பல காலங்களில் பலர் கிளப்பிய தமிழ்நாட்டில் தெலுங்கர் பிரச்னையை நடிகர் ராதாரவி இப்போது கிளப்பி இருக்கிறார்.

அவர் தந்தை எம் ஆர் ராதாவுக்கு திராவிட இயக்க தலைவர்கள் சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்பது ஒரு காரணம். மற்றொன்று சீமான் போன்ற சிலர் தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசுவோருக்கு அரசியல் அதிகாரம் ஏன் என்று கேள்வி எழுப்புவது.

எம் ஆர் ராதா திராவிட இயக்க தலைவர்களிலேயே ஒருவரான எம்ஜிஆரை சுட்டு சிறை தண்டனை பெற்றவர். எனவே அங்கீகாரம் தருவதில் திராவிட இயக்க தலைவர்களுக்கு தயக்கம் இருப்பதில் காரணம் இருக்கிறது. ஆனால் ராதாரவி அவரை காந்தியை கொன்ற கோட்சே உடன் ஒப்பிட்டிருக்க வேண்டாம். கோட்சே வுக்கு சிலை வைத்தால் நாங்களும் ராதாவுக்கு வைப்போம் என்கிறார். தேவையில்லாத சரியில்லாத உவமை. தன் தந்தையை ரவி இப்படி கொச்சைப் படுத்தியிருக்க வேண்டாம். அடுத்து சீமானின் பிரச்சாரம் எடுபடவில்லை என்பதோடு இப்போது அவர் தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டுவிட்டதாகத் தான் தெரிகிறது.

பெரியாரை எவனாவது தெலுங்கன் என்று உரிமை கொண்டாடினால் அவனை விட அடி முட்டாள் எவனும் இருக்க முடியாது.

சாதி மத ஒழிப்புக்காகவே தன் வாழ்நாளை செலவிட்ட ஒரு மகத்தான மனிதனை, மனித இனத்துக்கே அறியாமையில் இருந்து விடுதலை பெற்றுத் தர உழைத்த ஒரு உத்தமனை பாராட்ட மனமில்லை என்றாலும் இகழ எவருக்கும் உரிமையில்லை.      தெலுங்கு குடும்பத்தில் பிறந்தது ஒரு இயற்கை நிகழ்வு. அவ்வளவுதான். தன் வாழ்நாளில்தான் தெலுங்கன் என்ற உணர்வோடு வாழ்ந்தார் என்றோ தமிழ் தமிழர் உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றோ யாராவது நிரூபிக்க முடியுமா?

ஒரு வகையில் ராதா ரவி நாணயமானவர் தான்.

என் தாய்மொழி தெலுங்கு  எனவே நான் தெலுங்கன். இது ஒரு நாணயமான ஒப்புதல். வீட்டில் தெலுங்கு பேசுவேன். ஆனால் வெளியில் நான் தமிழன் என்று சொல்லிக் கொள்வேன் என்றெல்லாம் போலியாக உரிமை கோரவில்லை ராதாரவி. தெலுங்கராக குற்றமா என்ன?

அதற்கான அவசியமும் அவருக்கு  இல்லை. ஏனென்றால் எம் ஆர் ராதா திராவிட இயக்க முன்னோடி. நடிகவேள் என்ற பட்டம் பெற்றவர். ராதா இல்லாத சினிமா இல்லை என்ற அளவுக்கு தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். அவரை தெலுங்கர் என்றே பலருக்கு தெரியாது. அவர் அப்படி வாழ்ந்ததாகவும் தெரியவில்லை.

திராவிட இயக்கம் என்பது பார்ப்பனர் அல்லாத இயக்கம். அதில் தமிழர், கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் எல்லாரும் பங்காளிகள் என்பதை புரிந்து கொண்டால் அந்த காலத்தில் ஏன் தமிழ் தெலுங்கர் பிரச்னை வரவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும். பொது எதிரியை வீழ்த்த நான்கு மாநிலத்தவரும் ஒருங்கிணைந்த காலம் அது.

இப்போது பிரிந்து விட்டோம். பிரிவினையின் எச்ச சொச்சங்கள இருக்கத்தான் செய்யும். கேரளாவில் தமிழர் மாவட்டங்கள் உள்ளன கர்நாடகத்தில் தமிழர் மாவட்டங்கள் உள்ளன. ஆந்திராவில் சித்தூர் போன்ற தமிழர் மாவட்டங்கள் உள்ளன. அதேபோல் தமிழகத்தில் தெலுங்கர்கள் மட்டுமா இருக்கிறார்கள்? கன்னடர்கள், இல்லையா? மலையாளிகள் இல்லையா?

வந்தாரை வாழ வைத்த தமிழகம் என்பதுதான் இந்நாட்டின் பெருமை.

தமிழ் நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என்பதில் ராதாரவிக்கு கருத்து வேறுபாடு இல்லை.

எங்களுக்கு உரிய பங்கும் மரியாதையும் இருந்தால் போதும் என்பதுதான் அவரது ஆதங்கமாக தெரிகிறது. அதுதான் இப்போது இருக்கிறதே? அதை சுட்டிக் காட்டி  பேசுவதால் எதை அவர் சாதிக்கப் போகிறார்.?

தெலுங்கர் இல்லாமல் அமைச்சரவை அமைக்க முடியாது என்கிறார். அதாவது நடப்பில் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். அதுதான் நடைமுறையில் இருக்கிறதே அதை சுட்டிக்காட்ட வேண்டிய  அவசியம் என்ன வந்தது?.

பொதுவாக தன்னை சமுதாய தலைவர்களாக காட்டிக் கொள்ள ஆசைப்படுபவர்கள் தான் இப்படியெல்லாம் பேசுவார்கள். அது சுய நலம். எல்லாருக்கும் புரிந்து அவர்களை கண்டுகொள்ள மாட்டர்கள் யாரும்.  இதுவும் நடைமுறைதான்.

அந்த லிஸ்டில் ராதாரவி சேரவேண்டிய அவசியம் வந்து விட்டதா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

இவர் சகோதரியே ராதிகாவே பச்சைத் தமிழர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு பிள்ளையை பெற்றுக் கொண்டிருக்கிறார். அந்த பிள்ளை தமிழரா தெலுங்கரா என்ற கேள்வியை எழுப்பி அந்தப் பிஞ்சின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமா?

இப்போது இருக்கும் சுமுக சூழ்நிலையை கெடுக்கும் விதத்தில் யார் பேசினாலும் செயல்பட்டாலும் அவர்கள் தமிழகத்தின் எதிரியாகவே பார்க்கப்படுவார். 

அநேகமாக அடுத்து ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கு சென்று விடுவார் என்பது உறுதியாக தெரிகிறது. அதிமுகவில்  இருந்து கொண்டே ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சொல்பவர் எப்படி அதிமுகவில் நீடிக்க முடியும்? அநேகமாக அவர்கள் இவரை விலக்கலாம். அல்லது ஒதுக்கி வைக்கலாம். அல்லது இவரே ரஜினியிடம் ஒட்டிக கொண்டு விடலாம்.

இப்படி எதையாவது சொல்லி தமிழர் – தெலுங்கர் பிரச்னையை கிளப்ப முயற்சிப்பவர்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதுடன் இதனால் தெலுங்கர் களுக்கு எந்த நன்மையையும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை. 

ஒரு சில சிந்திக்கத் தெரியாத பாமரத் தமிழர்கள் மத்தியில் வெறுப்பைத் தவிர. 

This website uses cookies.