தமிழக அரசியல்

போராட்டம் நடத்தினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்கிறார் ரஜினி??!!

Share

ஸ்டெர்லைட்  ஆலையை மூட சொல்லி நூறு நாள் போராட்டம் நடத்திய போது அரசும் ரஜினியும் கண்டு கொள்ளவில்லை.

நூறாவது நாள் முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என போராட்டம் நடத்தியபோது கூட அரசு விழித்துக் கொள்ளவில்லை.

பேச்சு வார்த்தை நடத்தவில்லை.

ஆனால் திட்டமிட்டு 13 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறது காவல் துறை.

இறந்தவர்களுக்கு நிவாரணம் அளித்து விட்டு துப்பாக்கி சூட்டையும் நியாயப் படுத்துகிறது எடப்பாடி  பழனிசாமியின்  அரசு.

எல்லாரும் கண்டித்து ஆன பிறகு அங்கே சென்ற ரஜினிகாந்த் ஒரு நடிகனாக அங்கே சென்றால் மக்கள் மகிழ்வார்கள் என்று  சொல்லி விட்டு திரும்பி வரும்போது அசட்டுத் தனமான கருத்துக்களை உதிர்த்து விட்டு கொஞ்ச நஞ்சம் இருந்த அனுதாபத்தையும் இழந்து நிற்கிறார்.

போலிசை அடித்த பிறகுதான் போலிஸ் சுட்டது.

போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டார்கள்.

இந்த விஷக் கிருமிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

போராட்டம் நடந்தால் இங்கு தொழில் வராது. வியாபாரிகள் வர மாட்டார்கள். வேலை வாய்ப்பு கிடைக்காது.

எல்லாத்துக்கும் போராட்டம் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகி விடும். ”

ரஜினி  ஒரு முட்டாள் என்றார் சு. சாமி.-   அது  உண்மைதானோ         என்ற சந்தேகம் பலருக்கும் வந்து விட்டது.

போராடாமல் எந்த உரிமை இதுவரை காக்கப் பட்டிருக்கிறது.?

தகுதியுள்ளது பிழைத்துக் கொள்ளும் என்பது டார்வின் விதி.  போராடாதது அழியும்.

நன்றாகக் கேட்டான் ஒருவன் ரஜினியை பார்த்து.  ‘ நீங்கள் யார்’ ?  ‘ நான் ரஜினிகாந்த் ‘ என்று சொல்ல வைத்தான்.  அவன் ஒரு ரஜினி ரசிகன்.

இத்தனை நாள் வராமல் இருந்ததை விட போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி சாடியது அவனை புண் படுத்தி இருக்க வேண்டும்.

யார் சமூக விரோதிகள் என்பதை காவல் துறையை கையில் வைத்திருப்பவர்கள் அல்லவா கண்டுபிடிக்க வேண்டும்.   அவர்கள் மீது நடவடிக்கை  எடுப்பதை யார் தடுத்தார்கள்.?

அடித்தவனை விட அடித்ததை நியாயப் படுத்துகிறவன் கொடுமையாளன்.

ரஜினி சொன்னதை பாஜக வரவேற்கிறது.  அதிமுக நாளேடு வரவேற்கிறது.   ஆக இருவருக்கும் யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள்.

மருத்துவர் ராமதாஸ் சொன்னதுபோல் நல்லவேளையாக சூழ்நிலை சிலரை அடையாளம் காட்டிவிடுகிறது.   அதற்காக காலத்திற்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

காலா படத்தில் வரும் பாட்டுக்களில் எல்லாம் போராட்டத்தை நியாயப் படுத்தி நல்ல பேர் வாங்க பார்க்கும் ரஜினி நிஜத்தில் அதற்கு எதிரானவர் என்பது முரண் தான்.

எம்ஜியாரையும்  விஎன்ஜானகியையும் ஜெயலலிதாவையும் முதல் அமைச்சர் ஆக விடாமல் தடுக்க தமிழர்களால் முடியவில்லை.    அந்த தகுதி அவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது.   அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போய் விட்டது.

இப்போதும் அந்த அவலம் நடந்து விடுமோ என்ற பயமும் எழுவதை தடுக்க முடியவில்லை.  ஏமாறுவது தமிழன் குணம் என்று எழுதியிருக்கிறதே ?

பத்திரிகையாளர்களிடம் எரிந்து விழுந்திருக்கிறார்.  ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய குணம் எதுவும் அவரிடம் இல்லை.

இறந்தவர்களை பார்த்து ஆறுதல் சொல்ல வந்தவர் அங்கிருந்தவர்களை பார்த்து கைகளை ஆட்டி உற்சாகப் படுத்துகிறார்.   கொண்டாடவா வந்திருக்கிறாய்?

முதலில் காவல் துறையின் அத்து மீறலை கண்டித்து பேட்டி  கொடுத்தவர் பின்பு எதனால் மாறிப் போனார்?    யார் போதனை செய்தார்கள்?

ரஜினி இயல்பில் வலது சாரி சிந்தனையாளர்.   சோ இருந்திருந்தால் எனக்கு ஆயிரம் யானை பலம் வந்திருக்கும் என்பவர் எப்படி இருப்பார்?    சோ வே அரசியலில் தீண்டத் தகாதவராக ஒதுக்கி  வைக்கப் பட்டவர்.  அவர் வழியில் இப்போது துக்ளக் நடத்தும் குருமூர்த்தி இவருக்கு ஆலோசகராக இருந்தால் இவரை யார்தான் காப்பாற்ற முடியும்?

காங்கிரசில் இருந்து கொண்டே ரஜினிக்கு கால் பிடிக்கும் கராத்தே தியாகராஜனை போன்றோர் சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.

காட்டிக் கொடுப்போர், வஞ்சகம் செய்வோர் , என்று எத்தனை துரோகங்கனை தமிழ் சமுதாயம் தாங்கும்?

This website uses cookies.