தமிழக அரசியல்

காடுவெட்டி குரு குடும்பம் பிளவுபட பாமக காரணமா? மருத்துவர் ராமதாஸ் விளக்கம் தர வேண்டாமா?

Share

மாவீரன் என காடுவெட்டி குருவை உச்சியில் தூக்கி வைத்து கொண்டாடினர் மருத்துவர் ராமதாஸ்.

வன்னியர் சங்க தலைவராக குரு பரிமளிக்க ராமதாஸ்தான் காரணம்.

ஜெயலலிதாவையே மோசமாக அர்ச்சித்த குரு அதன் காரணமாக சிறை வாசம் அனுபவித்தார். அவர் செய்த தியாகங்கள்தான் இன்று பாமக வை உயரத்தில் நிறுத்தி  இருக்கிறது.

அப்படி ஒரு சமுதாய சங்கத் தலைவராக இருந்தவரின் குடும்பம் ஒன்றாக இருப்பதையும் ஒற்றுமையாக இருப்பதையும் ராமதாஸ் உறுதி செய்ய வேண்டாமா?

குருவின் சகோதரி மகனை அவர் மகள் திருமணம் செய்து கொள்வதில் பாமக வுக்கு என்ன ஆட்சேபணை ?

குருவின் மனைவி சொர்ணலதா ஒரு பக்கமும் குருவின் மகன் கனல் அரசன் மகள் விருத்தாம்பிகை மாப்பிள்ள மனோஜ் கிரண் மறுபக்கமும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன் மாமா பெயரில் சுமார் ரூ300 கோடி வன்னியர் சங்க அறக்கட்டளை சொத்துக்கள் இருப்பதாகவும் அதை மாற்ற குடும்பத்தினர் ஒப்புதல் வேண்டும் என்பதால் தங்களுக்கு விருப்பமான ஒருவருக்கு விருத்தாம்பிகையை திருமணம் செய்து வைக்க பாமக-வினர் முயன்று கடத்தி செல்ல முயன்றதால் தாங்கள் அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் மனோஜ்குமார் பேட்டி கொடுத்திருக்கிறார்.

ஊருக்குள் வரக்கூடாது என்று குரு குடும்பத்தை மிரட்டி வைத்திருக்கிறார்கள் என்பது பாமக-வுக்கு தொடர்பில்லாத ஒன்றா?

நடப்பது குரு குடும்ப பிரச்னை மட்டும் என்றால் மற்றவர்களுக்கு இதில் எந்த கருத்தும் சொல்ல முகாந்திரம் இல்லை.

மாறாக அரசியலில் தூய்மையை வலியுறுத்தும் அரசியல்வாதிகளில் மருத்துவர் ராமதாஸ் முதன்மையானவர்.

தமிழகம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்னைகளிலும் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று அவரே பெருமைப்  பட்டுகொள்வார். அதில் உண்மையும் ஓரளவு இருக்கிறது.

இப்படி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் மருத்துவர் ராமதாஸ் யாருக்கு சிலை எழுப்பி தன் மரியாதையை வெளிக்காட்டினாரோ அவரது குடும்பத்தில் நிலவும் குழப்பங்களை தீர்த்து வைக்கும் கடமையும் உண்டு என்பதை மற்றவர்கள் சொல்லியா அவருக்கு  தெரிய வேண்டும்?

மருத்துவர் ராமதாஸ் காடுவெட்டி குரு குடும்பத்தின் குழப்பங்களை தீர்ப்பாரா?

This website uses cookies.