Home Blog Page 95

சபரிமலையில் பெண்களை  அனுமதிக்க தயார்! –கேரள அரசு!!!

ஐயப்பன் கோவிலில் 10   முதல் 50  வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது.

ஐயப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் பெண்கள் அவர் அருகே கூட செல்லக் கூடாது என்று பாரம்பரியமாக நிலவி வரும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து இந்த கட்டுப்பாட்டை கடைப் பிடித்து வருகிறார்கள்.

இதை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஒரு பொது நல வழக்கை  உச்சநீதி மன்றத்தில் தொடுத்தது.

ஆஜ்மீர் தர்காவில் பெண்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற தர்கா நிர்வாகம் விசாரணையின்போது பெண்களை அனுமதிக்க  தயார் என்று கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

முந்தைய இடது சாரி அரசு அனுமதிக்கலாம் என்று போட்ட அவிடவிட்டை சென்ற காங்கிரஸ் அரசு மறுதலித்து பாரம்பரியம் நிலைக்கட்டும் என்று மறு அவிடவிட்டு  போட்டது.   இப்போது இடது சாரி அரசு மீண்டும் பதவிக்கு வந்து  விட்டதால் தனது முந்தைய அரசின் நிலைப்பாடே இப்போதும் தொடர்கிறது என்று இடது சாரி அரசு கூறிவிட்டது.

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மத நம்பிக்கைகளில் நீதி மன்றம் உள்பட யாருமே கேள்வி கேட்க முடியாது என்று கூறுகிறது.  அதாவது அரசுக்கு இதில் கருத்துக் கூறும் உரிமையே இல்லை என்கிறது.

பரம்பரை அறங்காவலர் பந்தள அரச குடும்ப சார்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.

வழக்கின் அடுத்த விசாரணை  அடுத்த ஆண்டு பிப்ருவரி இருபதாம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.    அப்போது விரிவான விவாதங்களுக்கு  பிறகு இந்த சீர்திருத்தங்களை கொண்டு வருவதா வேண்டாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

பிரம்மசாரிகளாக இருப்பவர்கள் தாயை வணங்க கூடாதா?   தாய் பிரம்மச்சாரி மகனை ,  சகோதரி ஒரு பிரம்மச்சாரி சகோதரனை நெருங்க கூடாதா?    தெய்வத்துக்கு இந்த மனித உறவுகள் பொருந்துமா?

அந்த இறைவன் பெண்களுக்கு அருள் பாலிக்க மாட்டாரா?

இறைவன் ஐயப்பன் இவர்களது கட்டுப்பாடுகளுக்கும் முடிவுகளுக்கும் கட்டுப் பட்டவரா?     இறைவனை கட்டுப்படுத்தும் அதிகாரம் மனிதர்களுக்கு உண்டா?

மாத விலக்கு ஆகும் மூன்று நாட்களை கணக்கில்  கொண்டே பெண்களை விலக்கி  வைக்கும் வழக்கம் அமுலுக்கு வந்திருக்க வேண்டும்.

சில காலத்திற்கு  முன் வரை அந்த மூன்று நாட்களும் பெண்களை ஊருக்கு  வெளியே தனியே ஒரு கட்டிடத்தில்தங்க வைக்கப் பட்ட காட்டுமிராண்டிதனமான வழக்கம் சில  ஊர்களில் அமுலில் இருந்து வந்ததை மறக்க  முடியுமா?

தங்கள் வசதிக்கும் நலத்துக்கும் ஏற்ற வகையில் மனிதர்கள் இறைவனையும் இறை நம்பிக்கையையும் பயன் படுத்தி வந்திருக்கிறார்கள் .

அந்த வகையில்தான் ஐயப்பன் கோவிலில் பெண்களை ஒதுக்கி வைக்கும் வழக்கமும் வந்திருக்க வேண்டும்..

இதுவரையில் நீதிமன்றங்கள் தான் இந்து மதத்தில் திருத்தங்களை கொண்டு  வந்திருக்கின்றன.      தானாக முன்வந்து எந்த சமயமும் எந்த சீர்திருத்தத்தையும் கொண்டு வந்ததில்லை.

உடன் கட்டை ஏறுதல்,   குழந்தை திருமணம் , பல தார மணம் போன்ற பல  தீமைகள்   பாரம்பரியம் சமய கோட்பாடு என்றெல்லாம் சொல்லி நியாயமாக்கப் பட முயற்சிக்கப் பட்ட போது  நீதிமன்றங்களால் அந்த தீமைகள்  தடுக்கப் பட்டன என்பதை மறக்க கூடாது.

இன்னமும் அந்த சக்திகள் சீர்திருத்தங்களை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.     அவர்களையெல்லாம் மீறித்தான் மாற்றங்கள் வந்தன.   இனியும் வரும்.

 

 

 

 

உச்ச நீதி மன்ற குட்டு பயம்- என் டி டி வி தடை நிறுத்தம்??!!

பதான்கொட் தாக்குதலை ஒளி  பரப்பிய    பிரச்னையில் என் டி டி வி யை ஒரு நாள் தடை செய்த பா ஜ க வின் மத்திய அரசு பல முனை விமர்சனங்கள்  தங்களுக்கு  எதிராக திரும்பியதை உணர்ந்து  உச்ச நீதி மன்றம் குட்டு வைப்பதற்கு முன்பே தானாகவே முன்வந்து தான் விதித்த தடையை நிறுத்தி வைத்து அறிவித்தது.

தடையை எதிர்த்து என் டி டி வி உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஜனவரி மாதம் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

எல்லா  ஊடகங்களும் வெளியிட்டதை தான் நாங்களும் வெளியிட்டோம் .   எங்கள் மீது மட்டும் ஏன்  தடை  என்ற என் டி டி வி யின் கேள்விக்கு பதிலேதும் இல்லை.

தானே குற்றம் சாட்டுபவர்  தானே தண்டணை அளிப்பவர் என்று மத்திய அரசு செயல் பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

வக்கீல்கள் மீது  நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் என்று இருப்பதை போல  பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க ப்ரெஸ் கவுன்சில் இருப்பதை போல ஒளிபரப்பு ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க நியுஸ் பிராட்காஸ்டிங் ஸ்டான்டர்ட்ஸ் அதாரிட்டி என்ற அமைப்பு இருக்கிறது.

அந்த அமைப்பிடம் மத்திய அரசு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்க  சொல்லி இருக்கலாம். .

மாறாக பல அமைச்சக அதிகாரிகளை கொண்ட அமைப்பு மூலம் அறிவிப்பு அனுப்புதல் ,   விளக்கம்கேட்டல்,    விசாரணை ,    முடிவெடுத்தல் என்ற அதிகாரங்களை  தானே  மேற்கொண்டதன்  மூலம் மத்திய அரசு  ஊடகங்களை அச்சுறுத்தும் வேலையை முடுக்கி விட்டுள்ளது என்றுதான் பொருள் கொள்ளப்படும்.

இந்திரா காந்தியின் அவசர நிலை காலத்தில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் பா ஜ க வின் தலைவர்கள் .       ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின் அதே சர்வாதிகாரம்தான் தங்களின் பதவியை நிலை நிறுத்தும் என்று நம்பத் தொடங்கி விட்டதுதான் பரிதாபம்.

அரசியல் சட்டம் உறுதியளித்திருக்கிற அடிப்படை உரிமைகளை பாதிக்கிற எந்த நடவடிக்கையில்  யார்  இறங்கினாலும் அது மக்களால் நிராகரிக்கப் படும்.

நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தும் போது கூட எல்லா தரப்பையும் கலந்து ஆலோசித்துதான் அந்த முடிவை எடுக்க வேண்டுமே தவிர ஆட்சி நிலைப்பதற்காக அடக்கு முறை உத்தியாக அந்த உரிமையை பயன் படுத்தினால் நிச்சயம் மக்களின்  எதிர்ப்பைத்தான் இந்த அரசு சந்திக்கவேண்டிவரும்.

அப்போது இவர்களை பதவி யிலிருந்து தூக்கி எறிய மக்கள் தயங்க ஆட்டார்கள் என்பதை சர்வாதிகாரத்தை கையிலெடுக்க முயற்சிக்கும் ஆட்சியாளர்கள் உணரட்டும்.

 

 

 

மீனவர் பிரச்னையில் அரசியல் செய்யும் பா ஜ க – சிங்கள அரசுகள்??!!

இந்திய -இலங்கை     இருநாட்டு அமைச்சர்களும் பங்கு பெற்ற பேச்சு வார்த்தைக்குப் பின்னரும் தமிழக மீனவர் பிரச்னையில் எந்த உருப்படியான முடிவையும் எடுக்காமல் கலைந்திருகின்றனர் .

ஆறு மாதத்துக்கு ஒரு முறை சந்தித்து பேசுவது என்ற முடிவும் ஜனவரி மாதம் கொழும்புவில் நடக்கும் கூட்டத்தில் பிரச்னைகள் குறித்து மீண்டும் பேசுவது என்ற முடிவும் என்ன பிரச்னையை தீர்திருகிறது.

இலங்கை மீனவர்களை தமிழக மீனவர்களுக்கு எதிராக திருப்பி அரசியல் செய்கிறது சிங்கள அரசு .    அதற்கு துணை  போகிறது இந்திய அரசு.

கச்சத்தீவு பிரச்னையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை நடை முறை படுத்த முடியாத அல்லது முனையாத இந்திய அரசு என்ன உள் நோக்கத்தை கொண்டிருக்கிறது. ?

தமிழர்களின்  பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு அனுமதிக்கும் என்று ஒப்பந்தம் இருக்கிறதா இல்லையா?     ஏன் அதை அமுல் படுத்த வற்புறுத்த வில்லை?

ஆண்டுக்கு 80  நாட்களுக்கு  மட்டும்  மீன்பிடித்துக் கொள்ள உரிமை கேட்டு ஏன் இலங்கையிடம் மன்றாட வேண்டும்..  ?

கச்சதீவை இலங்கைக்கு  தாரை வார்த்தது பாராளுமன்ற ஒப்புதல் இல்லாததால் செல்லாது என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

தமிழக மீனவர்களின் 115   படகுகள் இலங்கை  அரசால் பறிமுதல் செய்யப் பட்டு கிடக்கின்றன.     அவைகளை  முதலில் மீட்டு விட்டு அல்லவா பேச்சு வார்த்தையில் பங்கு  பெற்றிருக்க வேண்டும்.      அதற்கு  இலங்கை மீனவர்கள் ஒப்புக் கொள்ளாததால் பெறமுடிய வில்லை என்றுத் நம் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.    முடிவெடுக்க வேண்டியது சிங்கள அரசா இலங்கை மீனவர்களா?

உரிமை என்பது அவன் கொடுத்து நாம்  பெற வேண்டியது அல்ல.   நமக்கு உரியதை நாம் எடுத்துக் கொள்வது.

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு நமது மீனவர்களுக்கு இந்திய அரசு உதவிகள் செய்வதற்கும் ஏராளமான நிபந்தனைகள்  விதிக்கப் படுகின்றன.

இலங்கை- இந்திய  கடற்பரப்பு பகுதிகளை நிர்ணயம் செய்வது கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்பதை பொறுத்தே !     ஏன் அந்தப் பிரச்னையை பேச மறுக்கிறீர்கள்??       தமிழர்களை கேட்காமல் இந்திரா செய்த ஒப்பந்தம் எப்படி தமிழர்களை கட்டுப்படுத்தும்.?

படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என்று நான்தான் பரிந்துரைத்தேன் என்ற    சுப்பிரமணியன் சுவாமி என்ற பா ஜ க  மேலிட உறுப்பினர் சொன்ன பிறகு இவர்கள் எப்படி படகுகளை மீட்பார்கள்?

இரட்டை வேடம் போடுபவர்கள் பிரச்னையை  எப்படி தீர்ப்பார்கள்?

நம்பிக்கை வைக்கும்படி இரு நாட்டு அரசுகளும் நடந்து கொள்ள வில்லை .    காலம் கடத்துவது தான் உத்தி என்றால் அது பலிக்காது .

மீன் பிடித் தொழிலில் இருந்து தமிழக மீனவர்களை அப்புறப் படுத்துவதுதான் இலங்கை அரசின் இலக்கு.   அதற்குதான் இந்த உறுதியற்ற , இலக்கற்ற ,பற்றற்ற  பேச்சு வார்த்தைகள் பயன்படும்.

 

 

டெல்டா விவசாயிகள் பலியை தடுக்க தவறும் அரசு!!!

காவிரித் தண்ணீரும் வரவில்லை.   வடகிழக்கு பருவ மழையும் பொய்த்தது.   சும்மா இருக்க முடியாத டெல்டா விவசாயிகள் கடன் பட்டு விதைப்பு மூலம் சாகுபடி செய்த பயிர்கள் கருக தொடங்கியதை பார்க்க முடியாமல் உயிரை விட்டு வருகிறார்கள்.

இதுவரை நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர்.    திருத்துறைபூண்டி ரகுநாத புறத்தை சேர்ந்த கோவிந்தராஜ் , ஆதிச்சபுரம் அழகேசன் , கீழதிருபூந்துருத்தி வெள்ளையன் என்கிற ராஜேஷ் கண்ணன் வேதாரண்யம் ஆதனூர்   ரத்தினவேல்  என்று இந்த பட்டியல் முடியுமா எனத் தெரியவில்லை.

120  நாட்களுக்கு குறையாமல் தண்ணீர் தேவை இருக்கும்போது நாற்பது நாள் மட்டும் கிடைத்தால்  பயிர் எப்படி வளரும் ?    வட கிழக்கு பருவ மழை யை நம்பித்தான் விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டனர்.    அரசு முனைந்து காவிரி நீரைப் பெற்றுத்  தந்திருந்தால் பயிர் காப்பாற்றப் பட்டிருக்கும்.

இப்போது ஒவ்வொரு விவசாயியும்  ஏக்கருக்கு பதினைந்தாயிரம் ரூபாய் நட்டமடைந்திருக்கிறார்கள்.                 விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்திருக் கிறார்கள்.

93.47   டி எம் சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது     13.5 டி எம் சி நீர்தான் உள்ளது.    இன்னும் ஒரு வாரத்துக்கு வருமா எனபதே சந்தேகம்.

கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு இல்லையென்று  உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப் பட்டுவிட்ட நிலையில் அது வராது.    பருவ மழையும் பொய்த்து விட்டது .      நிலைமை என்ன ஆகும்?

நட்டம்  நிச்சயம் என்ற  நிலையில் முதல் போட்டவர்கள் என்ன செய்வார்கள்?

மாநில  அரசு எதையும் கண்டு கொள்கிற நிலையில் இல்லை.      என்னதான் தீர்வு?

கடன் தள்ளுபடி.    கிராம அடிப்படையில் இழப்பீடு  என்று ஏதாவது நிவாரணம் அறிவித்தால் விவசாயிகள் கொஞ்சம்   ஆறுதல் அடைவார்கள்.

அரசு கண்டு கொள்ளாது என்றால் விவசாயிகள் அரசை நிம்மதியாக ஆள விட மாட்டார்கள் .

விவசாயிகளை கண்ணீர் விட வைக்கும் அரசு எப்படி நிம்மதியாக ஆளும்?

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தடுத்த மூட நம்பிக்கை??!!

கேரள மாநிலம் முக்கம் கிராமத்தில் ஒரு கூட்டுறவு மருத்துவ மனையில் அபு பக்கர் என்பவரின் மனைவிக்கு  ஒரு மகன் பிறந்திருக்கிறான்

மருத்துவர்கள் உடனே தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தி இருக் கிறார்கள்.

அபு பக்கர் சித்திக் அதற்கு அனுமதி மறுத்தார்.   மதியம் இரண்டு மணிக்கு பிறந்த குழந்தைக்கு அது பிறந்த பின் அன்றைய ஐந்து பிரார்த்தனை அழைப்புகளும் முடியும் வரை குழந்தைக்கு பால் கொடுக்க கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்.

அதனால் குழந்தைக்கு அடுத்த நாள் மதியம்தான் தாய்ப் பால்  கொடுக்க முடிந்தது.

மருத்துவர் ஆலோசனைகளை நிராகரித்த அபு பக்கரின் மீது காவல் துறை புகார்  கொடுக்கப் பட்டு அவர் கைது செய்ய பட்டு விசாரணை  நடந்து வருகிறது.

இஸ்லாம் அப்படி சொல்கிறதா?

இல்லையென்றால் மூட நம்பிக்கை வைத்திருக்க மதம் ஒரு சாக்குதான்.

மத நம்பிக்கை அறிவை அடக்கி வைக்கலாமா ??!!

மணவாள மாமுனிகள் சன்னதியில் பிராமணர் அல்லாதோருக்கு அனுமதி மறுப்பு

காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள மணவாள மாமுனிகள் சந்நிதிக்குள் பிராமணர் அல்லாதோர் நுழைய அனுமதி மறுக்கப் பட்ட செய்தி நாங்கள் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோர்  கண்களை  திறக்க வேண்டும்.

இந்த பிரச்னை பல ஆண்டுகளாகவே நீடித்து வருவதாக சொல்கிறார்கள் .

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா நடை பெற உள்ள நிலையில் அவரது பிறந்த நாள் வழிபாடு இந்த சந்நிதியில் நடைபெற்றது.    அந்த வழிபாட்டை சமத்துவ வழிபாடாக நடத்த ராமானுஜ தாசர்கள் என்ற அமைப்பினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

அப்போது பிராமணர்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இத்தனைக்கும் தங்களை கோவிலுக்குள் அனுமதித்து நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் அவர்கள் காண்பித்தும் இறுதி வரை யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்க வில்லையாம்.

நீதிமன்ற தீர்ப்பை அவர்கள் மதிக்க வில்லை எண்பது  ஒருபுறம் இருக்கட்டும்.     ராமானுஜர் போதித்ததாக சொல்லப்படும் சமத்துவம் எங்கே போனது?

எந்த மதத்தையும் விட வைணவம்தான் இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்று கொண்டாடுகிறது என்று விளக்கம் சொல்கிறார்கள்.

ஆனால் நடைமுறையில்?

சமத்துவம் இல்லாத இடத்தில் ஏன் பக்தர்கள் போக வேண்டும்?   அப்படி சண்டை போட்டு உள்ளே போய் பார்த்தால்தான்  இறைவன் அருள் புரிவானா?

சமத்துவம் கேட்டுப் பெற வேண்டிய ஒன்றல்ல. எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.   முடியாவிட்டால் ஏன் அங்கே போக  வேண்டும்.?

ஆணவம் அவர்கள் அறிவை அழித்து விட்டது.     எவ்வளவு அவமானப் படுத்தினாலும் இவர்கள் தலை நிமிரவே மாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

அனுமதிமறுத்து அவர்கள் ராமானுஜரை அவமானப் படுத் தியிருக்கிறார்கள். .

தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது சரிதானா???!!

மத்திய பிரதேசம் ஒரு மர்மப் பிரதேசம்.

வியாபம் ஊழல் சம்பந்தப்பட்ட நாற்பது பேர் மிக மர்மமான முறையில் இறந்திருக் கிறார்கள்.    இதுவரை யார் அந்த சூத்திரதாரி  என்பது கண்டு  பிடிக்கப் படவேயில்லை.

போபால் மத்திய சிறையில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே எப்படி தீவிரவாத கைதிகள் தப்பினார்கள்.?     கடந்த பதினைந்து ஆண்டுகளில் இருபத்தி எட்டு முறை இது போன்ற சிறையிலிருந்து தப்பிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

சிறையிலிருந்து தப்பியவர்கள் ஒரு காவலரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியிருக்கிறார்கள் என்பது அவர்கள்  கொடியவர்கள் என்பதை நிரூபிக்கிறது.

ஆனால் அதற்குப் பின் வெளி வந்த காவல் அதிகாரிகளுக்கு இடையே ஆன உரையாடல் அது என்கவுண்டர் அல்ல கொலை என்பது போல தோற்றம்  தெரிகிறது.

ஐந்து  பேரையும்  அல்ல எல்லாரையும் கொல் .   தப்ப விட்டு விடாதே.   ஒருவனை மட்டும் விட்டு விடலாமே .  வேண்டாம் அது நல்லதல்ல.   அலைய வேண்டியிருக்கும். முடித்து விடு என்றெல்லாம் போகும் அந்த உரையாடல் தப்பியவர்களை பிடித்த பின் சுட்டுக் கொன்ற தாகத்தான் சொல்கிறது.    விடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்வை அதிகப் படுத்தி இருக் கின்றன.

நீதிமன்றத்தில் நிரூபிக்காமலேயே காவல் துறையே  தண்டனை  வழங்கி விடலாம் என்ற நடைமுறை அமுல் படுத்தப் பட்டால் நாட்டில் அராஜகம்தான் தாண்டவமாடும்.

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற முறை நாட்டில்  நிலவினால் அது காடாகத்தான் இருக்கும் நாடாக இருக்காது.

சிறைத்துறையை நிர்வகிப்பவர்கள் எவ்வளவு தான் தோன்றித்  தனமாக  செயல்படுகிறார்கள் என்பதற்கு போபால் சிறை சம்பவம் தக்க உதாரணம்.

அதுவும் பா ஜ க ஆளும் ம பி யில் கொல்லப்  பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்னும்போது சந்தேகம் இன்னும் அதிகமாகிறது.

விடை கண்டு நாட்டை அமைதிப் படுத்த வேண்டிய கடமை ஆள்வோருக்கே .

 

திப்பு ஜெயந்தியை பா ஜ க எதிர்ப்பது ஏன்?

நவம்பர் 10 ம் தேதியன்று திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

குடகு பகுதியை சேர்ந்த ஒருவர் அதை ஆட்சேபித்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட நீதிபதிகள் அரசிடம் மனுகொடுக்க சொல்லி மனுவை முடித்து வைத்தார்கள்.   அப்போது நீதிபதிகள் கேட்ட கேள்விதான்  பிரச்சனையானது.   ‘ திப்பு ஒரு  அரசர்தானே அதற்கு ஏன் அரசு விழா?’ என்றனர் நீதிபதிகள்.

முந்தைய ஆண்டுகளில் திப்பு ஜெயந்தியின் பொது ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு பேர் மாண்டு போனது வரலாறு.

திப்பு ஜெயந்தியை கொண்டாடி முஸ்லிம்களை வளைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்பது பா ஜ க வின் குற்றச்சாட்டு.

மைசூரின் புலி என்று அழைக்கப் பட்ட திப்பு சுல்தானின் வரலாறு பல போராட்டங்களை உள்ளடக்கியது. தந்தை ஹைதர் அலியை விட திப்பு புகழ் பெற காரணம் அவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட துதான்.   எனவே அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரராகவே பார்க்கப் படுகிறார்.

48   ஆண்டுகளே வாழ்ந்த திப்பு  1799 ல்  நான்காம்   ஆங்கிலோ-  மைசூர்   போரின்போது  போர்க்களத்திலே உயிரிழந்தார்..

தப்பி விட பிரெஞ்சு அதிகாரிகள் ஆலோசனை சொன்ன போது ‘ ஆயிரம் ஆண்டுகள் ஆடு போன்று வாழ்வதை விட ஒரு நாள் புலியாக வாழ்வதே சிறந்தது” என்று  சொன்னவர்.    செய்தும் காட்டியவர். .

கத்தியாலேயே புலியை கொன்றதால் புலி என்ற பெயர் நிலைத்தது. .

கிறிஸ்தவர்களை மதம் மாற்றினார் கொடுமைப் படுத்தினார். போரில் வெற்றி பெற்ற போதெல்லாம் கைதிகளை  இஸ்லாத்துக்கு மதம் மாற்றினார்.   கோவில்களை கொள்ளையடித்தார்.  பெர்சியனை அலுவல் மொழியாக வைத்திருந்தார்.  கொடுங்கோலன் .   என்றெல்லாம் விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள்.

எல்லா  மதங்களையும் சமமாக நடத்தினார்.  கிருஷ்ணாராவ் என்பவரை பொக்கிஷ அமைச்சராகவும் சாமைய அய்யங்கார் என்பவரை காவல்துறை அமைச்சராகவும் இன்னும் பல இந்துக்களை பொறுப்புள்ள பதவிகளில் வைத்திருந்தவர்.    இந்துக் கோவில்களுக்கு பல சனதுக்களை வழங்கி பூஜைகள் தொடர்ந்து நடக்க ஏற்பாடுகள் செய்தவர். .   என்றெல்லாம் அவரை போற்றி புகழ்பவர்களும் ஏராளம்.

கொடகு பகுதியில் படையெடுத்து அவர்களை வஞ்சனை மூலம் வென்று அடிமைபடுத்தி இஸ்லாத்துக்கு மாற்றினார் என்று வரலாறு சொல்கிறது.   அதனால் குடகு பகுதிகாரர்கள் திப்பு ஜெயந்தியை எதிர்க் கிறார்கள்.

எப்படியிருந்தாலும் நாம்  இங்கு ராஜராஜன் சதய விழாவை அரசு விழாவாக கொண்டாடுகிறோம் இல்லையா அதைப்போல் அங்கே திப்பு ஜெயந்தியை கொண்டாட அரசு முடிவு செய்தால் அதில் அரசியல் செய்யாமல் வரலாற்றை விவாதிப்பதுதான் முறை.    அதற்காக விழாவே நடத்தக் கூடாது என்றால் அவர் முஸ்லிம்  என்பதுதான் பிரச்னையா. ?

அவர் எங்கேயிருந்து வந்தவர் என்று விவாதித்தால் கைபர் கணவாயில் இருந்து யார் வந்தார்கள் என்ற கேள்வியும் எழுமே?

எதிர்ப்புகளை மீறி விழா நடத்துவதில்  கர்நாடகா அரசு உறுதியாக இருக்கிறது.

வரலாற்றின் பக்கங்களை சாதி  மத அடையாளங்களோடு ஒப்பிடாமல் வரலாறாகவே பார்ப்பதுதான் நாகரிக சமுதாயத்தின் அடையாளம்.

நடக்கட்டும் திப்பு ஜெயந்தி விழா  !!!!!

 

 

மௌலிவாக்கம் கட்டிடத்தோடு ஊழலும் புதைக்கப் பட்டு விடக் கூடாது ???!!!

சென்னை மௌலிவாக்கத்தில்   28.06.2014  அன்று       61   உயிர்களை காவு வாங்கிய          11  மாடி கட்டிட விபத்து அதுவரை தமிழகம் கண்டிராத ஊழலின் வெளிப்பாடு.

அப்ரூவல் தந்த சி எம் டி ஏ வில் நிகழ்ந்த ஊழல் தான் இந்த விபத்துக்கு காரணம் என்ற சந்தேகம்தான் எல்லார் மனதிலும் இருந்தது.   அங்கு நடந்த ஒவ்வொரு நகர்வும் ஆய்வு செய்யப் பட வேண்டியவை.

முடிந்த வரை உண்மை  வெளி  வராத வாறு அ தி மு க அரசு பார்த்துக் கொண்டது.    சி பி ஐ விசாரணைக்கு அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

தானே ஒரு கமிஷனை நியமித்து ,  அதன் அறிக்கையை வெளியிட மறுத்து,   பின் உயர் நீதி மன்றம் தலையிட்டு,,  அதனால் வெளியிட்டு , அதையும் விவாதிக்க மறுத்து ,    பக்கத்தில் இருந்த இன்னொரு பதினோரு மாடி கட்டிடத்தையும் இடிக்க மறுத்து,

பின் உச்ச நீதிமன்றம் தலையிட்டு     அதன் பின் ஒப்புக்கொண்டு ஒரு வழியாக நவம்பர் இரண்டாம்  தேதி முன்னிரவில் இடிக்கப் பட்டது.

இந்த நீதியை வாங்கிட வேண்டி எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட எத்தனை பேர் நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டி இருந்தது.

எத்தனை அநியாயங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் கோலோச்சி வருகின்றன.

கட்டிடம் இடிக்கப் பட்டு விட்டது.    அதனோடு சேர்ந்து நியாயமும் புதைக்கப் பட்டு விடக் கூடாது என்பதே நமது கவலை.

இத்தனை நடந்திருக்கிறதே, இதுவரை யார் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு தண்டிக்கப் பட்டிருக்கிறார்.?

அரசின் எல்லா ஆவணங்களையும் சரி பார்த்தே  கடனில்  வீடு வாங்கிய அப்பாவிகளின் கதி என்ன?

இதுதான் எல்லார் மனதிலும் தொக்கி நிற்கும் கேள்வி.

பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நியாயம் கிடைக்கும் என்று நம்பலாம்.    ஆனால் அதற்கும் அரசு துணை நிற்க வேண்டுமே?

வீடு வாங்கியவர்களுக்கு மனையில் இருக்கும் பிரிபடாத பங்கு உரிமை எந்த விதத்திலும் அவர்களின் இழப்பை ஈடு கட்டாது.

தவறு செய்தவர்கள்தான் அவர்களின் இழப்பை ஈடு கட்ட வேண்டும்.    அல்லது அவர்கள்  சார்பில் அரசு ஈடு கட்ட வேண்டும்.

அடுத்து இனி இவ்விதம் நிகழாதவாறு அனுமதி தரும் விதிகளில் கடுமை காட்ட வேண்டும்.

தமிழக அரசு இன்று இருக்கும் துயர நிலையில் இதெல்லாம் சாத்தியமா???

 

 

சாணியடி திருவிழா நீடிக்க வேண்டுமா?

ஈரோடு மாவட்டம் கும்டாபுரத்தில்   300 ஆண்டுகள் பழைமையான பீரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும்   தீபாவளிக்கு அடுத்த மூன்றாம் நாள் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக விநோதமாக சாணியடி திருவிழா நடந்து வருகிறது.

அதில் கலந்து கொள்பவர்கள் சாணியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் அள்ளி வீசிக்கொள்வார்களாம்.

அதில் கலந்து கொண்டவர்களின் புகைப்படத்தை தினத்தந்தி வெளியிட்டிருந்தது.

வேண்டுதல் நிறைவேறியது.   எனவே  நேர்த்திக் கடனாக இந்த நிகழ்வை நடத்துகிறோம் என்று பக்தர்கள் சொல்லலாம்.

அது எப்போது ஆரம்பிக்கப் பட்டது . ?    அதில் பொருள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யக் கூடவா பக்தர்கள் தயாராக இருக்ககூடாது.

அறிவுக்கு பொருந்தாத வழக்கங்களை பக்தி  என்ற பெயரால் அடிமைகளாக்கும் முயற்சியில் யாரோ இதை ஏன் புகுத்தியிருக்ககூடாது ?

பக்தர்கள் என்றால் சிந்திக்காமல் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவார்கள் என்பதுதான் இலக்கணமா?

பக்தர்கள் எனப்படுவோர் சிந்திக்கட்டும்.