பிக் பாஸ் 8: இளைஞர்களின் கனவு
பிக் பாஸ் 8: இளைஞர்களின் கனவு கன்னி முதல்.. குடும்ப பிரச்சனையால் பிரபலமான நடிகர் வரை! லீக்கான லிஸ்ட்
சிவன், ஏசு, அல்லா- எவரையும் சிரமப்படுத்தாத நம்பிக்கையாளர்கள்?
அவனன்றி அணுவும் அசையாது – இதுதான் எல்லா கடவுள் நம்பிக்கையாளர்களின் கருத்தும்.
மனித குலத்தின் அச்சம் பலவீனத்தின் வெளிப்பாடே கடவுள் என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கொள்கையை ஏற்கிறவர்கள் அதை மறுப்பார்கள்.
கடவுள் நம்பிக்கைக்கே ஒரு புது வடிவம் / பொருள் கொடுத்திருக்கிறது கொரொனா என்னும் கொடிய வைரஸ்.
இரண்டு லட்சம் பேருக்கு மேல் கொள்ளை கொண்ட கொரோனாவை அனுப்பியது யார் என்பதில் எந்த மதத்தவருக்கும் இடையில் எந்த தகராறும் இல்லை.
ஏனெனில் எவரும் எங்கள் கடவுள்தான் அனுப்பினார் என்று சொல்ல தயாராக இல்லை. எல்லா மதத்தவரும் மாண்டிருக்கிறார்களே !
கொரொனாவை ஒழிக்க யாகம் செய்கிறோம் , தொழுகை செய்கிறோம் , ஜெபிக்கிறோம் என்றால் கூட செய்யுங்கள் ஆனால் தனியாக வீட்டில் செய்யுங்கள் கோவிலிலோ சர்ச்சிலோ மசூதியிலோ கூட்டாக வேண்டாம் என்று சொல்கிற நிலையில்தான் அரசும் இருக்கிறது மக்களும் கட்டுப்படுகிறார்கள்.
முடியாது எங்கள் நம்பிக்கை பிரகாரம் நாங்கள் கூட்டாக வழிபாடு செய்வோம் என்று சொல்லக்கூட முடியாத நிலையில்தான் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
சொன்னால் சிறைக்குத்தான் போகவேண்டும்.
பிளேக், கால்ரா, அம்மை, சார்ஸ், ஸ்பானிஷ் ப்ளு என்று எத்தனையோ நோய்கள் வந்து போய் விட்டன. ஆனால் கடவுள்களும், மதங்களும், இன்னும் செல்வாக்குடன் தான் இருக்கின்றன என்பது உண்மைதான்.
ஆனால் இன்றைய நிலைமை வேறு. கொரொனா எல்லாவற்றையும் மாற்றி விட்டது. நாளையே கொரோனோ வைரசுக்கு அதில் இருந்தே மருந்து கண்டுபிடித்து விடுவார்கள். குணமானால் கூட இன்னும் பல ஆண்டுகளுக்கு அதன் தாக்கம் இருக்கும் என்கிறார்கள்.
அது மதம் சார்ந்த கடவுள் சித்தாந்தத்தை பலமாக அசைத்து விடும்.
இறுதியில் வெற்றி பெறப்போவது இயற்கைப் பேராற்றல் , அறம், கடவுள் . அது நம்மைக் காக்கும் வழி காட்டும்.
வள்ளல் பெருமானும் வள்ளுவரும் திருமூலரும் நமக்கு வழிகாட்டிகள்.
சாதி சமய சழக்குகளை ஒழித்தொழிப்போம் ! மதமற்ற ஓரிறை போற்றுவோம்.
மதங்கள் மாயட்டும். மனங்கள் மாறட்டும்.
மலர் தூவ லட்சக் கணக்கில் விரயம் செய்த விமானப்படை..
இவர்களுக்கு யார் இப்படியெல்லாம் சொல்லிக் கொடுப்பது என்று தெரியவில்லை. புதிது புதிதாக சிந்தித்து கொரொனா காலத்தில் வேடிக்கை காட்டுகிறார்கள்.
விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மருத்துவமனைகள் மீது பறந்து மலர்கள் தூவி நன்றி சொல்லி இருக்கின்றன.
யாருக்கு? மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ?
நன்றி சொல்ல வேறு வழி தெரியவில்லையா அதிகாரத்தில் உள்ளோருக்கு?
இன்னும் கொரொனா ஆபத்து நீங்காதது மட்டுமல்ல அனுதினமும் அதிகரித்துக் கொண்டே போகிறது .
எப்போது விடியும் என்று மக்கள் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வாழ்த்துச் சொல்லும் நேரம் இதுவா? அதுதான் மணி அடித்தாகி விட்டது. விளக்கு போட்டாகிவிட்டது. இன்னும் என்ன செய்ய வேண்டும்?
மாலை நேரத்தில் அவரவர் மொழியில் தாய் நாட்டை போற்றி முழக்கம் இடலாமா?
ஜெய் ஹிந்த்! பாரத் மாதா கி ஜெய் ?! வாழ்க பாரதம் ?! அன்னை பாரதம் வாழ்க?!
என்ன சொல்ல வேண்டும் சொல்லுங்கள்?!
அதெல்லாம் கூட செலவில்லாத வாழ்த்துக்கள்.
ஆனால் இது லட்சக் கணக்கில் செலவு . ஹெலிகாப்டர்கள் மலர் தூவின. அவை மாடியில் நின்று கொண்டிருந்த மருத்துவ பணியாளர்கள் மீது விழாமல் எங்கோ விழுந்தன. மலர் தூவ வேண்டுமா என்று கேட்பதே கூட தியாகம் செய்பவர்களை கேலி செய்வதற்கு அல்ல. செலவைத் தவிர்த்திருக்கலாம் என்பதைத் தவிர இந்த விமர்சனத்திற்கு வேறு நோக்கமில்லை. அவர்களுக்கு நிதியாக எவ்வளவு கொடுத்திருந்தாலும் இந்த விமர்சனம் வந்திருக்காது.
கொரொனா மிரட்டுகிறது ! விளையாட்டுகளை நிறுத்துங்கள் !
பிரதமருக்குத் தெரிந்துதான் இது நடக்கிறதா?!
மத்திய அரசு மீண்டும் வஞ்சகம்! காவிரி ஆணையம் இனி ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ்
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையில் தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிரான நடவடிக்கை களையே எடுத்து வருகிறது.
அதில் இப்போது காவிரி நதி நீர் ஆணையத்தை ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து வெளியிட்ட அரசிதழ் ஆணை.
வழக்கம் போல தமிழ்நாடு அரசின் பொதுப்பணி துறை செயலாளர் மணிவாசன் அறிக்கை வெளியீட்டு இதனால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு என்ர்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருக்கிறார்.கடந்த ஆண்டு நீர்வள ஆதாரம் நதிநீர் மேம்பாடு மட்க்ரும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல சக்தி துறை அமைச்சகத்தை ஏற்படுதியதாகவும் அதில் அதன் கீழ் இயங்கும் துறைகள் நிறுவனங்கள் குறித்த விதிகளில் திருத்தம் மேற்கொண்டது முற்றிலும் நிர்வாக நடவடிக்கை என்று சமாதானம் சொல்லி இருக்கிறார்.
சொல்ல மறந்தது என்னவென்றால் இதை இப்போது ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கம்.
05/02/2007 – காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை
/02/2013 – இறுதி தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது .
/02/2018 – 6 வார காலத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும்
ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவு.
01/06/2018 – மத்திய அரசின் அரசிதழில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையமாக
அமைக்கபட்டது.
24/02/2020 – ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்து அரசிதழ் வெளியீடு.
இதுவரை முழுநேரத் தலைவரும் நியமிக்கப்படவில்லை. நீர்ப்பாசனத் துறையின் செயலாளரே பொறுப்புத் தலைவராம்.
நான்கு நாட்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் முதலியவைகளை தடை செய்து மாநக காவல் ஆணையர் ஒரு உத்தரவிட்டிருந்தார்.
ஒருவேளை அவர்க்கு இந்த செய்தி முன்கூட்டியே தெரிந்து இருக்குமோ?
உத்தரவை திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் ஸ்டாலினும் , வைகோ ,முத்தரசன் உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆளும் கட்சி மத்திய அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்தால் எங்கே போராட்டம் நடத்துவது.?
தன்னாட்சி அமைப்பாக சுய அதிகாரம் கொண்டு ஆணையம் இயங்கும் என்று மத்திய அரசு உத்தரவாதம் தர முடியுமா?
தமிழக அரசின் செயலாளர் கொடுத்த அறிக்கையை மத்திய அரசின் நீர்வளத் துறையின் செயலாளர் கொடுத்திருக்க வேண்டும்.
ஆணையம் அமைப்பதை கர்நாடகா தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. எனவே மத்திய அரசின் இந்த முடிவு கர்நாடகவுக்கு சாதகமானது என்பதில் என்ன சந்தேகம்?
மத்திய அரசை மீறி செயல்பட முடியுமா இந்த ஆணையத்தால்?
தமிழர்களை போராட்ட களத்திலேயே வைத்திருக்க விரும்புகிறது மத்திய அரசு?
நிவாரணம் கொடுக்க நிதி இல்லையாம்! 68607 கோடி தள்ளுபடி செய்கிறது ரிசர்வ் வங்கி?
வங்கிகளின் நிதிகள் எப்படி கார்பரேட் கம்பெனிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் கடன் தள்ளுபடி அமைகிறது.
அதாவது ஐம்பது பேரின் கடன் ரூபாய் 68607 கோடியை வாராக்கடனாக அறிவித்து உள்ளது ரிசர்வ் வங்கி.
கீதாஞ்சலி ஜெம்ஸ், ரெய் அக்ரோ, வீன்சாம் டயமண்ட், ரோடோமக் குளோபல், குடோஸ் கெமி , ருசி சோயாஸ், ஜூம் டெவேலப்பர்ஸ், கிங் பிஷர் ஏர்லைன் போன்ற கம்பெனிகளுக்குத்தான் இந்த சலுகை.
எல்லாம் வாராக் கடன் என்றால் இவர்கள் எவரிடமும் எந்த உத்தரவாதமும் இல்லாமலா வங்கிகள் கடன் கொடுத்திருந்தன ?
இவர்களிடம் இருந்து இனி கடன்களை வசூலிக்கவே முடியாது என்பதை ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்வதாகத்தான் பொருள்.
இது வங்கிக்கு வரும் லாபத்தில் கழித்துச் சொல்லப்படும் கணக்குத்தான் என்றாலும் வங்கிக்கு நட்டம்தான்.
இதை இப்போது அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
வங்கிகள் கடன் வழங்கும் நிபந்தனைகள் எல்லாம் சாமானியர்களுக்கும் கீழ்த்தட்டு மக்களுக்கும்தான். இன்று கோடீஸ்வரர் களாக வலம் வரும் பெரிய மனிதர்களுக்கு எல்லாம் இந்த சட்டங்கள் பொருந்தாது.
நம்மை ஆளுவது யாருக்கான அரசு என்பதை இது நிரூபிக்கிறது. இது அவர்கள் அரசு . அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
சாமானியர்கள் நொந்து கொள்ள மட்டுமே முடியும் இப்போது.
தேர்தல் வரும்போது மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
மன்னிப்பு போதாது துல்கர் சல்மான், நீக்கு வசனத்தை?
வரனே அவஷ்யமுண்ட் என்ற மலயாள திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். அதில் சுரேஷ் கோபி தோன்றும் ஒரு காட்சியில் அவர் தனது நாயை பிரபாகரன் என்று கூப்பிடும் வசனம் அமைந்துள்ளது.
அதற்கு சிறப்பு விளம்பரம் கொடுத்ததுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விடுதலைப் புலிகளை சீண்டிப் பார்க்கும் காட்சி அது .
இயக்குனர் அனுப் அவருக்கு தெரியாமலா இது நடந்திருக்கும்?
முன்பு வந்த பட்டின பிரவேசம் என்ற படத்தில் இடம் பெற்ற காமெடி என்று இப்போது துல்கர் சல்மான் விளக்கம் கூறி மன்னிப்பும் கோரியுள்ளார்.
கேட்டவுடனேயே டேய் நாயுன்ட மோனே என்று சொல்லத் தூண்டும் வகையில் அமைந்த ஆத்திரமூட்டும் காட்சி அது என்று சொல்கிறார்கள்.
ஆனாலும் மன்னிப்பு கேட்ட பிறகு அதை பெரிது படுத்துவது அழகல்ல. நல்லதும் அல்ல. ஆனால் இந்த கேடு கெட்ட காரியத்தை செய்யத் துணிந்தது யார் என்பது தெரிய வேண்டும்.
சுரேஷ் கோபி பாஜக வை சேர்ந்தவர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள். அவர் இந்த வசனத்தை பேசுவது போல் காட்சி அமைத்தால் அதில் உள்நோக்கம் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுவது இயல்புதானே?
துல்கர் சல்மான் வளர்ந்து வரும் நல்ல நடிகர். எதிரிகள் இல்லாதவர். இப்படி சர்ச்சைகளில் யாரோ சிக்க வைத்திருக்கிறார்கள். அவர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
வருத்தம் தெரிவித்தால் போதுமா? சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்குவதில் என்ன சிரமம்?
இயலா நிலை என்றால் விட்டு விடலாம். இயலும் என்றால் நீக்குவதே முறை.
கொள்முதல் ரத்து என விஜயபாஸ்கர் அறிவிப்பு.. தப்பித்தார் ?
விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஏறத்தாழ ஒன்றரை கோடி நட்டம் என்று எழுதியிருந்தோம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அளித்த தாக்கீதின் பேரில் விரைவு பரிசோதனை கருவிகள் கொள்முதலை ரத்து செய்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித் திருக்கிறார்.
தமிழக அரசு தானாக ரத்து செய்யவில்லை. அந்தக் கருவி பயன் அற்றது என்றும் அதன் முடிவுகள் நோய் பற்று இருக்கிறதா என்பதை காட்டாது என்று தெரிய வந்தபின் யாரும் அதை பயன் படுத்த வேண்டாம் என்ற முடிவை எடுத்து ஐ சி எம் ஆர் அறிவித்தது.
இதே ஐ சி எம் ஆர் ஏன் கொள்முதல் ஆர்டர் கொடுத்தது?
நம்மை விட ஆந்த்ரா கேரளா அதிக விலை கொடுத்தார்கள் என்று சொல்லும் விஜயபாஸ்கர் பின் ஏன் ரூபாய் நானூறுக்கு மேல் வாங்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
எந்தப் பயனும் அற்ற விரைவு பரிசோதனைக் கருவிகளை உலக நாடுகள் பலவும் ஆர்டர் செய்திருக்கின்றன . அவைகள் என்ன முடிவை எடுக்கப் போகின்றன என்பதை பார்க்க வேண்டும்.
கொள்முதல் நடைமுறைக்கு வந்திருந்தால் விஜயபாஸ்கர் கூண்டில் நின்றிருப்பார். ரத்து செய்ததால் தப்பி விட்டார்.
அவகாசம் கொடுக்காமல் திடீர் திடீர் என்று கட்டுப்பாடுகளை அறிவிப்பது சரியா?!
மத்திய அரசோ மாநில அரசோ சமுதாய நலன் கருதி கட்டுப்பாடுகளை அறிவிப்பது சரியே.
அதிலும் குறிப்பாக உயிர் பாதுகாப்பு அச்சத்தில் இருக்கும்போது நிச்சயம் கட்டுப்பாடுகள் தேவை. அதில் கருத்து மாறுபாடு இல்லை.
ஆனால் அவைகளை அறிவுக்கும் முன்பு அவகாசம் கொடுத்து அறிவித்தால் மக்கள் தங்களை தயார்ப் படுத்திக் கொண்டிருப்பார்கள்.
பிரதமர் நான்கு மணி நேரம் அவகாசம் கொடுத்து நாடு முழுதும் நடமாட்டக் கட்டுபாடுகளை அறிவிக்கிறார். புலம் பெயர்ந்து பணி செய்யும் தொழிலாளர்கள் ஊர் திரும்ப எந்த ஏற்பாடும் இல்லை. அவகாசம் அல்லது அவர்கள் ஊர் திரும்ப ஏற்பாடு ஏதாவது செய்திருந்தால் பலர் உயிர் இழந்திருக்க மாட்டார்கள்.
நமது முதல்வர் ஊரடங்கு அமுலில் இருக்கும் போதே முழு ஊரடங்கு அறிவிக்கிறார். அதற்கு முன் அவகாசம் கொடுப்பதில் என்ன பிரச்னை? மறுநாள் மக்கள் முந்தியடித்துக் கொண்டு கடைகளில் கூடி பொருள்களை வாங்கியதை கண்டோம்.
எதையும் பதற்றத்தில் செய்யக் கூடாது. எப்படியும் இன்னும் பல மாதங்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே இன்றைய நிலை.
ஒன்று கொரொனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும். அது மார்க்கெட்டிற்கு வர வேண்டும். அல்லது தொற்று பரவுவது கட்டுக்குள் கொண்டுவரப் பட வேண்டும். அது வரை கட்டுப்பாடுகள் தொடரட்டும்.
அரசுகள் கட்டுப்பாடுகளை அறிவிக்கும் முன் பொதுமக்களுக்கு போதிய அவகாசம் அளித்து போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்ட பின்னரே அறிவிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.