Home Blog Page 123

பார ‘தீய’ ஜனதா கட்சி- சரியான பெயர்தான் !

பார ‘தீய‘ ஜனதா கட்சி- சரியான பெயர்தான்  !
மோடிக்கு தேர்தல் பொறுப்பாளர் பதவி கொடுத்ததும் ,அதை ஆட்சேபித்து அத்வானி மூன்றாவது முறையாக பதவிகளை ராஜினாமா செய்ததும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் தலையிட்டதும் ராஜினாமாவை வாபஸ் பெற்றதும் ஏதோ ஓர் நாடகம் போல் தோன்றினாலும் பல உண்மைகளை இந்த நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டன
பா ஜ க என்ற அரசியல் கட்சி ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பின் கட்டுப் பாட்டில்தான் இயங்குகிறது.
சுஷ்மா ஸ்வராஜ் ராஜ பக்சேவிடம் விலை போய் விட்டார் என்பது அவர் இலங்கை போய் வந்து அங்கு உள்ள தமிழர்கள் தனி நாடு கேட்க வில்லை என்று சென்னையில் பேசிய போது வெளிப்பட்டது.  
இப்போது ரவி சங்கர் பிரசாத் இலங்கை போய் வந்து சிங்கள ஆட்சிக்கு சான்றிதழ் கொடுக்கும் விதமாக நிவாரண வேலைகள் நன்றாக நடக்கின்றன என்று பேசினார். தன்னுடன் தமிழகத்திலிருந்து யாரையாவது அழைத்துக் கொண்டு போயிருந்தாலாவது அவரது பேச்சுக்கு பொருள் இருந்திருக்கும். ஆக பா. ஜ. க. தலைமை சிங்கள ஆட்சியாளர்களின் ஊதுகுழல் ஆகி விட்டார்கள்.
அத்வானியின் இறங்கு முகத்திற்கும் ஆர் எஸ் எஸ் தான் காரணம்.
தனக்குப் பயன் படுகிற வரைதான் ஆர் எஸ் எஸ் எவரையும் தாங்கிப் பிடிக்கும்.
பயன்படாத எவரையும் தூக்கி எறிய அது தயங்காது.
கட்சியின் செயல்படும் தன்மையில்தான் தனக்கு ஆட்சேபணை என்ற அத்வானியின் கருத்துக்கு எந்த விளக்கமான பதிலையும்  அவர்களால் கொடுக்க முடியவில்லை.
வழிகாட்ட மட்டும் அத்வானி வேண்டும். தலைமையேற்க அல்ல என்பதை மிக உறுதியாக சங்கம் தெரிவித்து விட்டது.
வெற்றியைக் கொடுப்பார் என்ற நம்பிக்கைதான் இப்போது மோடியை முன்னிறுத்துகிறது.    அவரால் அது முடியாது என்று எப்போது உணருகிரார்களோ அப்போது அவரும் தூக்கி எறியப் பட்டுவிடுவார். 
அதற்கெல்லாம் விதி விலக்கு பெரும் வகுப்பில் அவர் பிறக்க வில்லையே.
தலைவர்கள் சுயநலமிகளாகிவிட்டர்கள்  என்ற அத்வானியின் குற்றச்சாட்டு அப்படியே இருக்கிறது.  அதாவது பா. ஜ. க. என்பது இனிமேல் பாரதத்திற்கு ‘தீய ‘கட்சிதான் . அதாவது  பாரதீய என்றால் பாரம் என்ற சுமையையம் ‘ தீய’ என்ற தீமையையும் மட்டுமே தரக் கூடிய கட்சி.
நல்ல பேர் வைத்தார்கள்.


வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

வைகோவின் சுயரூபம் –சேதுவில் வெளிப்பட்டது

இதுவரை சேதுக் கால்வாய் திட்டம் தமிழர்களின் கனவுத் திட்டம் என்று முழங்கி வந்த ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ திடீரென்று நிலையை மாற்றிக் கொண்டு ,மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.  இந்த ஞானோதயம் வைகோ விற்கு எப்போது வந்தது. ?
சேதுத் திட்டத்தை எதிர்த்த கட்சி தமிழகத்தில் 2009  வரை இல்லை.
உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி வழக்கு தொடுத்த பின்தான் , அதுவரை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி வந்த பா.ஜ.க.,ராமர் பாலம் என்ற வாலை நீட்டி முழக்கத் தொடங்கியது.
அவர்களுக்கு தமிழகம் தவிர ஏனைய மாநிலங்களில் மதப் பிரசாரம் செய்ய ஒரு கருவி கிடைத்து விட்டது.
அடுத்து ஜெயலலிதா –ஒரு பக்கம் காங்கிரஸ் தன்னோடு இல்லை- இன்னொரு பக்கம் அடுத்த தேர்தலில் மாற்று அணிக்கு தலைமை தாங்க பா.ஜ.க.விற்கு வாய்ப்பு அதிகம். – அதையும் தாண்டி உணர்வோடு உறைந்திருக்கும் பா.ஜ.க.பாசம். எல்லாம் சேர்ந்து அ,இ.அ.தி.மு.க.இதுவரை கொண்டிருந்த  சேதுக் கால்வாய் வேண்டும் என்ற கொள்கைக்கு கல்லறை கட்ட முடிவெடுத்து விட்டார்.   உச்ச நீதி மன்றத்தில் மாநில அரசின் சார்பில் திட்டம் வேண்டாம் என்று எழுதிப் போட்டு தமிழர்களின் தலையில் கல்லைப் போட்டார்.
மூன்றாவதாக வைகோ.    சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராக முழங்கி வந்த  வைகோவுக்கு , கொழும்பில் சிங்கள கப்பல் முதலாளிகள் நட்டப் படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.  
ராமர் பாலம் என்று சொன்னால் பா.ஜ.க.வை ஆதரித்தது போல் ஆகி விடும் என்பதற்காக மீனவர் வாழ்வாதாரம் என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
சுயரூபம் வெளிப்பட்டு விடும் என்பதால் சில நாள் கழித்து மீனவர் வாழ்வாதாரம் குறித்து உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்றும் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் திட்டத்தை திருத்த வேண்டும் என்றும் மாறி மாறி பேசத் தொடங்கினார்.
தான்தான் தி.மு.க.விற்கு மாற்று என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த வைகோ, அது ஒருபோதும் நடக்க முடியாத கனவு என்று புரியத் தொடங்கியபோது ,வேறு வழி தோன்றாமல் ,தானும் தன் கட்சியும் பிழைத் திருக்க வேண்டுமென்றால் , ஜெயலலிதாவுடன் கை கோர்த்தால் தான் அது முடியும் என்ற நிலையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடையே எடுத்து , தன் விசுவாசத்தை வெளிக் காட்டி விட்டார். தமிழர்களை காட்டிக் கொடுப்பதாக ஆகி விடுமே என்ற விமர்சனங்களை பற்றி அவர் கவலை கொண்டதாக தெரியவில்லை.
காட்டிக் கொடுத்தால்தான்  தான் வாழ முடியும் என்றால் அதைச் செய்யத் தவறாத கருங்காலிகள் தமிழக வரலாற்றில் ஏராளமுண்டு.
அந்தப் பட்டியலில் வைகோவும் சேர்ந்ததுதான் காலத்தின் கோலம.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


உயர்நீதி மன்றத்தில் தமிழ் ஏன் கூடாது ?

தமிழில் வாதாடக் கூடாது என்று தமிழ் அறிந்த நீதிபதி மாண்புமிகு மணிக்குமார் அவர்கள் தீர்ப்பளித் திருக்கிறார்.
அரசியல் சட்ட பிரிவு  348 ( 2 ) ன் படி மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரின் அனுமதியோடு தமிழை உயர் நீதி மன்ற மொழியாக பயன்படுத்த அங்கீகாரம் அளிக்காமல் இருப்பதுதான் காரணம்.
தமிழக சட்ட மன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டும் கூட ஆளுநரின் செயல் இன்மைக்கு யார் காரணம்?
மத்திய அரசுதான் முழு முதல் காரணம். மாநில அரசின் முடிவை ஆளுநரும் மத்திய அரசின் முடிவை குடியரசுத் தலைவரும் அமுல் படுத்தக் கடமைப் பட்டவர்கள்.
இதற்கான ஆலோசனையை மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் கேட்ட போது அப்போதைய தலைமை நீதிபதி அப்படி செய்வது உகந்தது அல்ல என்று கருத்து தெரிவித்ததை சாக்காக வைத்து மத்திய அரசு காலங் கடத்தி வருகிறது . 
அப்படி கருத்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை.    வடமாநிலங்களில் சிலவற்றில் இந்தி மொழி , அதற்கான அனுமதியை ஆளுநரிடம் பெற்று , உயர் நீதிமன்றங்களில் பயன் படுத்த பட்டு வருகிறது.
1961  முதல் ஆளுநர் அனுமதி பெறாமலும்    1969 முதல் அனுமதி பெற்றும் உ. பி . இல் இந்தி மொழி உயர் நீதி மன்ற மொழியாக பயன்பாட்டில் இருக்கிறது.    ஆனால் அதற்குப் பிறகு கூட இதர மாநிலங்கள் தங்களுக்கும் தங்கள் மாநில மொழியை உயர் நீதி  மன்ற மொழியாக பயன் படுத்த அனுமதி வேண்டும் என்று போராட முன் வரவில்லை. ஆங்கிலமே போதும் என்று இருந்து விட்டார்கள்.  விழிப்புணர்வு இல்லை என்று மட்டும்தான் சொல்ல முடியும்.    விருப்பம் இல்லை என்று சொல்ல முடியாது.
இந்தி பேசும் மக்கள் தங்கள் மாநிலங்களில் உயர் நீதி மன்றங்களில் இந்தியை பயன் படுத்த முடியும் என்றால் இந்தி பேசாத மாநில மக்கள் தங்கள் மாநிலங்களில் தங்கள் தாய் மொழியை பயன் படுத்த வாய்ப்பு மறுக்கப் படுவது எப்படி நியாயமாகும்?
அதுவும் அரசியல் சட்டத்தில் அதற்கான பிரிவு இருக்கும்போது அதை மறுப்பது அநீதி?
மத்திய அரசில் இருக்கும் தமிழ் அமைச்சர்கள் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்களா?   அவர்களது பங்கு என்ன?
இப்போதும் தமிழ் நீதிபதிகள் அவ்வப்போது தமிழில்தான் கேள்விகளையும் கருத்துக்களையும் நீதிமன்றத்தில் வைக்கிறார்கள்.  அதையே வழக்கறிஞர்கள் வாதத்தில் செய்தால் என்ன தவறு.?  
அனுமதி பெரும் வரை வேண்டுமென்றால் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் எழுதி விட்டுப் போங்கள்.   வாதிட அனுமதிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை?
ஒரு நாட்டின் குடிமகன் தன் தாய் மொழியில் உச்சநீதி மன்றம் வரையிலும் வழக்காட முடிய வேண்டும்.    செப்பு மொழி பதிநெட்டுடையாள் என்று பெருமை பேசிக்கொண்டால் மட்டும் போதாது. தெலுங்கு பேசுவோருக்கு தமிழ் ,இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் பிற மொழிதான்.   அதேதான் எல்லா மொழியினருக்கும்.
ஆங்கிலம் தெரிந்தால் தான் உலகம் சுற்ற முடியும் என்றால் சுற்ற வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்.  மற்றவர்களை கட்டாயப் படுத்த வேண்டியதில்லையே.    அதேபோல் இந்தி கற்றால்தான் வேலை கிடைக்கும் என்றால் தேவை உள்ளவர்கள் கற்றுக் கொள்வார்கள்.   இப்போது மும்பையில் உள்ளவர்கள் மராட்டி அல்லது இந்தி பேசுகிறார்கள். டெல்லியில் உள்ளவர்கள் இந்தி பேசுகிறார்கள். கொல்கத்தாவில் உள்ளவர்கள் வங்காளி பேசுகிறார்கள்.   தேவை உள்ளவர்கள் கற்றுக் கொள்வார்கள்.   யாரையும் கட்டாயப் படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது ? 
இந்தி பிரசார சபை போதும் இந்தி கற்றுக் கொள்ள.    தேவை உள்ளவர்கள் அங்கு போகட்டும்.   நேரடியாகவோ மறைமுகமாகவோ திணிக்கும்போதுதான் பிரச்னை வருகிறது.  எதன் காரணமாகவும் மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை  குறைக்கும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது.
எவரையும் இரண்டாந்தரக் குடிமக்களாக பாவிக்கும் முயற்சியில் யார் இறங்கினாலும் அவர்களுக்கு இந்திய ஒற்றுமையில் அக்கறை இல்லை என்றுதான் பொருள்.
முதலில் உயர் நீதி மன்றங்களில் மாநில மொழிகள் வரட்டும்.   பின்பு உச்ச நீதிமன்றத்தில் என்ன செய்யலாம் என்பது பற்றி விவாதிக்கலாம்.
அடிப்படையில் , அரசு ,சட்ட மன்ற நாடாளுமன்றங்கள், நீதிமன்றங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான்.   ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அவைகளில்தான் மாற்றங்களை செய்ய வேண்டுமே தவிர மக்கள் தங்களை மாற்றிக் கொள்ளுமாறு கோர யாருக்கும் உரிமை இல்லை.
உச்சநீதி மன்றத்திலும் அனைத்து இந்திய மொழிகளிலும் வாதிட முடியும் என்ற நிலை வர வேண்டும்.  அதுதான் இந்தியா  ஒன்று என்பதன் அடையாளம்.


வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

சேது சமுத்திர கால்வாய்த்திட்டம் –எதிர்ப்பவர்கள் யார்? ஏன் எதிர்க்கிறார்கள் ?

தமிழர்களின் கனவுத் திட்டம் என்று ஏதாவது இருக்குமானால் அது சேதுக்கால்வாய்த் திட்டம்தான் நூற்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனை முயற்சிகள்? சுதந்திரம் பெறுவதற்கு முன்னால்  ஒன்பது கமிட்டிகள்.  பெற்ற பின்பு ஐந்து கமிட்டிகள்.
அத்தனை கமிட்டிகளிலும் நிலவழிக் கால்வாய், சுற்றுச் சூழல் பாதிப்பு , மீனவர் நலன் , பொருளாதார மேம்பாடு , லாப வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் , மாற்று வழிப் பாதைகள் , என்று எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து முடிவுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
இரண்டாயிரத்து ஐந்தில் பிரதமர் தொடங்கி வைத்த பிறகு எண்ணூற்று ஐம்பது கோடி செலவழித்து விட்டாகிவிட்டது.  அதுவரை இலங்கை அரசும் கொழும்புவின் கப்பல் முதலாளி களும் மட்டுமே எதிர்த்து வந்த இந்த திட்டத்திற்கு இந்தியாவில் முதல் எதிர்ப்பை துவங்கியவர் சுப்பிரமணிய சாமி . அவர்தான் முதன் முதலாக இரண்டாயிரத்து ஒன்பதில்  உச்ச நீதி மன்றத்தில் ராமர் பாலத்தை சேதப் படுத்தி கால்வாய் திட்டம் அமுல் படுத்த கூடாது என்று வாதிட்டார். கொழும்பின் பண முதலைகள் சேதுத் திட்டத்தை முறியடிக்க இந்தியாவில் ஆதரவு திரட்டுகிறார்கள் என்று பேட்டி கொடுத்தவரும் இவர்தான்.
அதுவரை தமிழகத்தில் தி மு க , அ இ அ தி மு க, காங்கிரஸ், பா ஜ க , இடதுசாரிகள் என்று எல்லா கட்சிகளும் தங்கள் செயற்குழு பொதுக்குழு கூடினால் சேது சமுத்ர திட்டத்தை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றாமல் இருக்க மாட்டார்கள்.
சு சாமியின் குரலை பா ஜ க சுவீகரித்துக் கொண்டது.   திடீர் பல்டி அடித்து அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு மாறாக ராமர் பாலம் சேதப் படுத்தக் கூடாது ,திட்டமே கூடாது என்று குரல் கொடுக்க தொடங்கினார்கள்.
தமிழகத்தில் வேரூன்றாத நிலையில் இந்தியாவின் பிற மாநிலங்களில் அரசியல் செய்ய சரியான ஆயுதம் கிடைத்து விட்டதாக அந்தக் கட்சி சேதுவைக் காப்போம் என்று குரல் கொடுக்க தொடங்கி விட்டது.   அதன் தமிழ் மாநில கிளைக்கு தலைமையை எதிர்த்து மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் தைரியம் கிடையாது.
ராமர் பாலம் என்றதும் முதல்வர்  ஜெயலலிதாவும் சு சாமியின் வழியில் செல்ல தயாரானார்.   விளைவு உச்ச நீதி மன்றத்தில் மாநில அரசு திட்டமே வேண்டாம் என்று அவிடவிட்டு தாக்கல் செய்தது.     இந்தியாவிலேயே தன் மாநிலத்திற்கு கிடைக்க இருக்கும் மத்திய அரசின் திட்டத்தை வேண்டாம் என்று மறுத்த ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். 
திடீர் என்று மீனவர்களின் நலன் பாதிக்கப் படும் என்று குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.   மாநில அரசின் பின்புலம் இருப்பதாக கேள்விகள் !
அதுவும் தி மு க தலைவர் கலைஞர் சேதுத்திட்டத்தை நிறைவேற்ற மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டங்களை அறிவித்ததும் தூண்டி விடப் பட்ட மீனவர் அமைப்புகளின் பேரால் சுவரொட்டிகள் வெளிவந்தன.
முதலில் அது ராமர் பாலமா ஆதாம் பாலமா என்பதே முடிவு செய்யப் படவில்லை தனுஷ்கோடி பக்கம் ஒன்றும் கோடியக்கரை பக்கம் ஒன்றும் என்று இரண்டு மணல் திட்டுகள் இருக்கின்றன. இவற்றில் எனது ராமர் பாலம் ? முக்கியமாக மணல் திட்டுகளை முழுவதுமாக யாரும் அழிக்கப் போவதில்லை.   முப்பது மீட்டர் அகலம் உள்ள பகுதி மட்டுமே அதுவும் குறிப்பிட்ட நீளத்திற்கு மட்டுமே திட்டுப்பகுதி பயன்படுத்தப் பட உள்ளது.
அதனால் பக்தர்கள் எவரும் மற்ற மணல் திட்டுப் பகுதியை பாலமாக பாவித்து வணங்குவதை யாரும் தடுக்கப் போவதில்லை.
மத்திய அரசின் கொள்கை முடிவை உச்ச நீதி மன்றம் அமுல் படுத்த தேவையான உத்தரவை பிறப்பிக்கும் என்று தமிழர்கள் எதிர் பார்க்கிறார்கள். .
ராமரின் பேரைச் சொல்லி தமிழகம் வளம் பெறுவதை தடுப்பவர்களை ராமரே மன்னிக்க மாட்டார்.
திட்டத்திற்கு ராமர் பேரை வைப்பதில் கூட தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றுகூட கலைஞர் அறிவித்துவிட்டார்.
திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக மத்திய அமைச்சர்கள் வாசனும் நாராயணசாமியும் அறிவித்து இருக்கிறார்கள்.
சிங்களர்களின் குரலை  எதிரொலிக்க தமிழகத்தில் இத்தனை பேர்களா?
எல்லா சதிகளையும் முறியடித்து சேதுத் திட்டம் நிறைவேற உச்ச நீதி மன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருப்போம் .
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

புலிகள் மீதான தடையை நீடிக்கும் இந்திய அரசின் நோக்கம் என்ன ?

விடுதலைப் புலிகள் போராளிகளா பயங்கர வாதிகளா என்ற விவாதம் மறைந்து நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன.    அவர்கள்தான் ஒழிக்கப்   பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசே மார் தட்டிக் கொண்டிருக்கிறதே? 

சிங்கள அரசோடு கை கோர்த்து விடுதலைப் புலிகளை ஒழித்ததில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு என்ற களங்கத்தை சுமந்து கொண்டிருக்கும் சோனியா ,ராகுல் அதிகாரத்தில் இயங்கும் இந்திய அரசு மேலும் மேலும் களங்கத்தை பெரிதாக்கிக் கொண்டே போகிறது.
லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை காவு கொண்ட இறுதிக் கட்ட  போரின்போது அவர்கள் பட்ட துயரங்களை விட பல நூறு மடங்கு துயரத்தை தற்போது உயிர் வாழும் தமிழர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இன்னும் இருபது ஆண்டுகளுக்கு ஆயுத போராட்டத்தை தமிழர்கள் கனவு கூட காண முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.   
அதுவும் இந்தியாவின் ஆதரவு இல்லாமல் அங்கு எந்த மாற்றமுமே நிகழ முடியாது.   அதனால்தான் இந்திராகாந்தி தமிழர்களுக்கு இந்தியாவில்  ஆயுத பயிற்சி அளித்தார்.    அதன் விளைவாகத்தான் இலங்கை அரசும் பணிந்து வந்தது.      ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் உருவானதும் இந்தியாவின் மீதான அச்சத்தின் விளைவாகத்தான்.    அந்த அச்சம் இப்போது இல்லை.   ஏன்?  போரில் பங்காளியான அரசின் மீது அச்சம் எப்படி வரும் ?   
இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு அவ்வப்போது மறுத்து வருகிறது.    இந்த மறுப்பில் உண்மை இருந்தால் என்ன செய்ய வேண்டும் இந்திய அரசு?
விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
அவர்கள்தான் இல்லையே?   இல்லாதவர்கள் மீது தடை எதற்கு?
சமீபத்தில் தமிழர் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அரசின் மீதான தன் அதிருப்தியை  வெளியிட்டார். தமிழர்களுக்கு ஓரளவுக்கு அதிகாரம் அளிக்கும் பதின்  மூன்றாவது சட்ட திருத்தத்தை ரத்து செய்ய முயலும் சிங்கள அரசின் முடிவை இந்தியா ஏற்காது என்ற பொருளில் கருத்து தெரிவித்தார்.
போர் முடியும் வரை அரசியல் தீர்வே இறுதியானது என்று சொல்லிக் கொண்டிருந்த இந்திய அரசு போர் முடிந்து நான்காண்டுகள் கழிந்தும் அரசியல் தீர்வைப் பற்றிப் பேச மறுக்கிறதே காரணம் என்ன?
இந்திய அரசு தமிழர்களுக்கு உதவும் என்ற உணர்வு சிங்களர்களுக்கு வந்தால் ஒழிய அவர்கள் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்க ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
அந்த உணர்வை சிங்களர்களுக்கு வர வைப்பது எப்படி? முதல் படியாக புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.   
தடை நீங்கினால் தமிழர்கள் தெருவில் நின்று போராடுவார்கள்.  போராட்டத்தை அரசு அடக்க சட்டத்தை நாட முடியாது. மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இலங்கையில் மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் என்று இந்திய அரசு சொல்ல முடியும். ஏன் தலையிடுவதற்கான காரணத்தை உருவாக்கி கொள்ள முடியும் . ஈழம் அமைய இந்தியா தன் படையை அனுப்ப தயங்காது என்ற நிலை உருவானால் தவிர அங்கு அரசியல் தீர்வு கிடைக்காது.
சோனியா –ராகுல் கட்டுப் பாட்டில் உள்ள இந்திய அரசு அத்தகைய முடிவை எடுக்காது என்றால் தலைமை மாறும் வரை உணர்வாளர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.   அல்லது தலைமையை மாற்ற முயற்சிக்க வேண்டியதுதான். வேறு வழி கண்ணுக்கு தெரிய வில்லை.
அதுவரை புலிகள்  மீதான தடை என்பது தமிழ் உணர்வாளர்கள் மீது ஈழம் பற்றி பேசுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க மிரட்ட மட்டுமே பயன்படும்.
அதாவது சிங்களர்கள் எதை விரும்புவார்களோ அதைத்தான் இந்திய அரசும் செய்யும் என்பது உறுதிப் படும்.    
தமிழகத்தில் உலவும் காங்கிரஸ்காரர்கள் இதை மறுத்தால் அவர்கள் செய்ய வேண்டியது தங்கள் தலைமையை உடனடியாக புலிகள் மீதான தடையை நீக்க குரல் கொடுக்க வேண்டும்.  
ராஜீவ் காந்தி படுகொலை மட்டுமல்ல பிரபாகரன் படுகொலையும் மறக்க முடியாததுதான்.    ஆனால் அவைகள் தீர்வுகள் ஏற்பட தடைகளாக இருக்க முடியாது.
ஆயுத போராட்டம் தராத வெற்றியை அனைத்து மக்களின் எழுச்சிப் போராட்டம் தரும்  என்ற உணர்வில் தான்   இப்போது உணர்வாளர்கள் இருக்கிறார்கள்.
அந்த உணர்விற்கு உயிர் கொடுத்து அரசியல் தீர்வு ஏற்படச் செய்ய இந்திய அரசினால்தான் முடியும்.
அதற்கு சிங்களர்கள் உடன்பட வேண்டும் என்றால் , இந்தியாவின் நிலைப்பாட்டில் மாறுதலை தெரிவிக்க வேண்டும்.   அதற்கு முதல்
படி புலிகள் மீதான தடை நீக்கம்.     சிந்திக்குமா இந்தியா?
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

ஐக்கிய இந்திய நாடுகள் -அதுதான் இந்தியா

நமது நாட்டின் பெயரை இந்தியா என்கிற பாரதம் என்று அழைக்கிறது நமது அரசியல சட்டம் .
அது மட்டுமல்ல . அது பல மாநிலங்களின் மைய அரசாகவும் விளங்கும் என்றும் ( shall be a Union of States ) என்றும் அது விளக்கம் சொல்கிறது. இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு ஒன்று அரசின் பெயரையும் தன்மையையும் மேற்கண்டவாறு விவரிக்கிறது.
இந்தியாஅதாவது பாரதம் பல்வேறு மாநிலங்களின் மைய அரசாக விளங்கும் என்பது சரியானால் அதன் பெயர் ஐக்கிய இந்திய நாடுகள் என்றுதானே இருந்திருக்க வேண்டும்? இருந்தாலும் சுருக்கமாக இந்தியா அல்லது பாரதம் என்று சௌகரியதுக் காகஅழைக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரி போராட்டம் எழும் போதெல்லாம் நமது அரசியல சட்டம் மத்திய அரசை மையமாக கொண்ட மய்யத்தன்மை கொண்டதா அல்லது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் சமஷ்டி தன்மை கொண்டதா என்ற கேள்வி எழுவது வழக்கம். Whether it is Unitary or Federal is yet to be finally decided.
இந்தியாவில் ஒருமைத்தன்மை நிலைத்துவிட்டது. யாருக்கும் பிரிந்து போகும் மனநிலை இல்லை. பிரிவினை தடை சட்டம் இருப்பது உண்மைதான். ஆனால் பிரிவினை கோரிக்கை எழாமல் இருப்பதற்கு சட்டம் மட்டுமே காரணம் இல்லை. சௌகரியம்தான் காரணம்.யாரும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் தொழில் செய்யலாம் என்று அரசியல சட்டம் நமக்கு தந்திருக்கும் உரிமை தனிச்சிறப்பு.
இந்த ஒருமைத்தன்மைக்கு இரண்டு அம்சங்கள் பாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. ஒன்று மாநிலங்களின் தனித் தன்மையை பாதிக்கும் அளவிற்கு மாநிலங்களுக்கு இடையே யான மக்கள் தொகை பரிவர்த்தனை . இரண்டு மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரக் குவியல். மாநில சுயாட்சி கோரிக்கை அவ்வப்போது எழுவது மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரம் தவறாக பயன்படுத்தப் படும்போது. அதற்கு நாட்டின் பெயர் கூட ஒரு காரணம்.
இந்தியா என்ற பெயரில் தனித் தன்மை கொண்ட மாநிலங்கள் இருப்பது மறைக்கப்படுகிறது. மாறாக ஐக்கிய இந்திய நாடுகள் என்னும்போது மாநிலங்களின் தனித் தன்மை வெளிப்படையாக தெரிகிறது.
மேலாகப் பார்க்கும்போது இது இந்திய ஒற்றுமைக்கு எதிரான கருத்து போலத்தான் தோன்றும்.
உண்மையில் இது இந்திய ஒற்றுமையை பாதுகாக்கும் சிந்தனைதான்.
அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் பிரிந்து போகும் உரிமை கொண்டவைகளாக விளங்கினாலும் இதுவரை யாரும் பிரிவினை பற்றி சிந்தித்ததே இல்லை. அதுதான் உண்மையான தேசியம்.
பெயரில் என்ன இருக்கிறது என்போருக்கு சொல்கிறேன். பெயரில்தான் எல்லாம் இருக்கிறது.
எனவே ஐக்கிய இந்திய நாடுகள் என்ற பெயர்தான் சரி. அப்போதுதான் விழிப்புணர்வு பெருகும். தன்னம்பிக்கை பிறக்கும். ஒற்றுமை நிலைக்கும்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
vaithiyalingamv@gmail.com

நீதிபதிகளை மிரட்டுவது யார்?

நம்முடைய முதல்வரின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது பனிரண்டு வருடங்களாக ஹீராயின் போதைப் பொருள் வைத்திருந்த தாக வழக்கு நடப்பதும் அதன் மீதான விசாரணை ஒரு வழியாக முடிந்து தீர்ப்பு வழங்க இருப்பதும் மக்களுக்கு தெரியும்.
தெரியாத விஷயம் தீர்ப்பு சொல்லும் நேரத்தில் சொல்லக் கூடாது என்று நீதிபதிகளை மிரட்டுவது யார் என்பதுதான்?!
தீர்ப்பு சொல்லும் தேதி அன்று நீதிபதி ராமமுர்த்திக்கு அனாமதேயக் கடிதம் ஒன்று வந்ததாகவும் அவர் அதன் மீது உயர் நீதி மன்றத்துக்கு அனுப்பி  உரிய ஆலோசனை கோரியதாகவும் செய்திகள் வெளி வந்தன.  அவருக்கு என்ன ஆலோசனை தரப்பட்டது என்பது மக்களுக்கு தெரியாது.  ஆனால் அவர் பணிமாற்றம் செய்யப் பட்டது மட்டும் செய்தி வெளியானது.  வழக்கும் திரு சின்னப்பன் என்பவருக்கு மாற்றப்பட்டது.  அவருக்கும் அதே போன்று மிரட்டல் கடிதம் வந்ததாகவும்  அவரும் உயர் நீதி மன்ற அறிவுரையை கோரப் போவதாகவும் அறிவித்து வழக்கை இருபத்து ஆறாம் தேதிக்கு மாற்றியதுடன் விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்றவும் கோரியிருக்கிறார்.
அதுவும் மிரட்டல் கடிதம் அனுப்பியது தொழில் செய்து வரும் வழக்கறிஞர் ஒருவர் என்று செய்தி வெளியாகிறது.
இப்படி எல்லாம் நடந்தால் பொது  மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது எப்படி நம்பிக்கை ,மதிப்பு வரும்.  எல்லாவற்றுக்கும் மேலாக காவல் துறையும் நீதிபதிகளும் இந்த வழக்கில் எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள்?
மிரட்டியவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை?     யார் என்று ஏன் அடையாளம் காட்ட வில்லை ?   இதில் காவல் துறைக்கும் நீதிபதிகளுக்கும் பொறுப்பு ஏதும் இல்லையா?  யார் மீதும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவானதாக தகவல் இல்லை. புகார் கொடுத்து விசாரிப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை?  புகார் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தடுத்தால் தவிர நீதிபதிகளும் காவல் துறையும் இப்படி மௌனமாக இருக்க மாட்டார்கள்.
அவரது நோக்கம் என்ன?  விடுதலை வாங்கிகொடுப்பதா? தண்டணை வாங்கி கொடுப்பதா?
பெங்களுருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரையில் இந்த தீர்ப்பு வரக்கூடாது என்பதற்காக இந்த மிரட்டல் என்றால் என்ன பொருள்?     விடுதலையாகி விட்டால் சுதாகரன் ஆட்சியாளர்களுக்கு எதிராக திரும்பி விடுவார் என்று எதிர் பார்கிரார்களா?  அவர் விடுதலை யாவதிலும் தண்டணை பெறுவதிலும் பொதுமக்களுக்கு எந்த கருத்தும் இல்லை. ஆனால் ஒரு கிரிமினல் வழக்கில் தீர்ப்பு சொல்லப் படும் நேரத்தில் யாரோ ஒருவர் தலையிட்டு தீர்ப்பை நிறுத்த முடியும் என்பது மிகவும் கவலையளிக்க கூடியது.    ஆளும் கட்சியின் தலையீடு ஏதும் இல்லை என்பதை நிரூபிக்க வாவது மிரட்டியவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்.   இல்லையென்றால் இதற்கெல்லாம் ஆளும் கட்சியே பொறுப்பு என்று மக்கள் மன்றம் தீர்ப்பளித்து விடும்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)