Home Blog Page 46

சந்தி சிரிக்கும் தேமுதிக-வின் கூட்டணித் கூத்து பேரம்??!!

ஒரு வழியாக திமுக தன் கூட்டணியை இறுதி செய்து விட்டது. இருபது இடங்களை தனக்கு வைத்துக் கொண்டு மீதியை கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டது.

இதில் பாரிவேந்தரின் ஐஜேகே வைத்தவிர மற்றவர்கள் மத்தியில் பாஜக ஆட்சிக்கும் மாநிலத்தில் அதிமுக ஆட்சிக்கும் எதிரானவர்கள். பாரிவேந்தர் மட்டும் கடைசி வரையில் பாஜக வுக்கு ஆதரவாக இருந்து விட்டு அதிமுக பாமக-வுக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் அதிருப்தி ஆகி வெளியே வந்து திமுக கூட்டணியில் சேர்ந்து கொண்டது. அதுகூட கௌரவமாக திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக பேட்டி கொடுத்துவிட்டு கூட்டணி இடம் பற்றி ஏதும் பேசாமல் இரண்டு நாள் கழித்து திமுக அதற்கு கொடுத்த ஒரு  இடத்தை ஒப்புக்கொண்டது.

அதிமுக அணியில் தலைமை பாஜகவா அதிமுக வா என்ற இழுபறி நீடித்தாலும் டெல்லிக்கு பாஜக தமிழ்நாட்டுக்கு அதிமுக என்று சமாளித்தார்கள்.

அதிலும் மோடி  வந்த அன்று நடந்த கூத்து எல்லாரையும் முகம் சுழிக்க வைத்து விட்டது. திரைமறைவில் அரசியல்  கட்சிகள் நடத்தும் பேரங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதற்கும் ஒரு வரையறை  இருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் அதிமுகவோடும் திமுகவோடும் பேரம் பேசிய அரசியல் அவலத்தை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி தேமுதிக தலைமை செய்தது.

ஒருவேளை விஜயகாந்த் முழு கட்டுப்பாட்டில் இருந்தால் இப்படி நடந்திருக்குமா என்பது தெரியவில்லை.

மோடி பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த், வாசன் படங்கள் அகற்றப்பட்டன.

ஆனால் இன்னமும் ஜெயக்குமார் தேமுதிகவிற்கு டிக்கெட் கொடுத்தாச்சு விமானத்தில் ஏற வேண்டியதுதான் பாக்கி என்று பேட்டி கொடுக்கிறார்.

ஒரு தேர்தல் என்றால் மத்திய மாநில அரசுகளைப் பற்றிய கருத்து முக்கியம் இல்லையா ?

மோடி மீண்டும் வரவேண்டுமா கூடாதா? மாநிலத்தில் இருக்கும் ஆட்சி நீடிக்க வேண்டுமா அகற்றப்படவேண்டுமா? இந்த இரண்டையும்  பற்றி எந்தக் கருத்தையும் முன் வைக்காமல் கூட்டணி  வைக்கும் யாரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றுதான் பொருள்.

சுதீஷ் அதிமுகவினருடன் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அனகை முருகேசனும் இளங்கோவும் திமுகவின் பொருளாளர் துரைமுருகனை பார்த்து பேசியது இன்றைய அரசியல் நிலவரம் எவ்வளவு தூரம் பாழாகி நிற்கிறது என்பதன் அடையாளம். மரியாதை நிமித்தமாக பேசினோம் என்று அவர்கள் சொல்ல அவர்களை யார் என்றே தெரியாது அவர்களுடன் அரசியல் தான் பேசினேன் என்று  துரைமுருகன் சொல்ல விஜயகாந்த் கட்சியின் மரியாதை அதலபாதாளத்திற்கு போய்விட்டது.

போகிற போக்கை பார்த்தால் நான்கு இடங்களை அதிமுகவிடம் பெற்றுக் கொண்டு மௌநியாகி விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.

அவ்வளவு சுயமரியாதை இருந்தால் தனித்து நின்று பார்த்து விடவேண்டியதுதானே?!

யாருக்கும் வெட்கமில்லை என்ற சோவின் நாடக தலைப்புதான் நினைவுக்கு வருகிறது.

ஜக்கி வாசுதேவ் தமிழர்களுக்கு சத்குருவா? சத்துருவா?

பிரமிக்க வைக்கிறது ஜக்கி வாசுதேவ் தமிழகத்தில் கண்ட அசுர வளர்ச்சி.

சாமியார்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் திடீர் திடீர் எனத்தான்      தோன்றும்.

03.09.1957 ல் மைசூரில் ஒரு தெலுகு பேசும் தம்பதிக்கு பிறந்த ஜகதீஷ் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். அதுதான் அவரது மூலதனம்.    இன்று சரளமாக ஆங்கிலத்தில் அவர் உரை நிகழ்த்தும் அழகு அவருக்கு தனி மரியாதையை சர்வ தேச ரீதியில் பெற்று தந்திருக்கிறது.

தனது 25 வயதில் 1982ல் சாமுண்டி மலையில்யோகா பயிற்சி செய்தவர்    1883ல் முதல் யோகா வகுப்புகள் எடுக்க தொடங்குகிறார்.

1993 ஈஷா பௌண்டேஷனை கோவையில் தோற்றுவிக்கிறார்.

12.10.1997 ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஒரு சாமியார் மீது கொலை குற்றச்சாட்டு என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. அது ஜக்கி வாசுதேவ் தனது மனைவி விஜியை கொலை செய்து விட்டார் என்று அவரது மாமனார் காவல் துறையில் புகார் கொடுத்ததுதான். மனைவி இறைவனில் ஐக்கியமாகி விட்டார் என்று ஜக்கி வாசுதேவ் வாக்குமூலம் கொடுத்தார்.  வழக்கு அவ்வளவுதான்.

2017ல் வெள்ளிங்கிரி மலையில் 112 அடி ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி கையால் திறந்து வைத்த நிகழ்ச்சி ஜக்கி வாசுதேவின் செல்வாக்கை உலகிற்கு பறைசாற்றியது.

ஈஷா யோகமைய்யம் மத சார்பற்ற வருவாய் ஈட்டும் நிறுவனமாக இல்லாமல் செயல்படுகிறது என்று விளம்பரப் படுத்தப் படுகிறது.

ஆனால் உண்மையில் இந்து மத சாயல் கொண்டும் பின்னணியில் இந்து மத சக்திகள் தான் இயக்கு கின்றன என்று குற்றச்சாட்டு இருப்பது உண்மை.

இன்னர் இன்ஜினியரிங், இன்க்ளுசிவ் எகானமி என்றெல்லாம் சத்குரு ஆற்றும் உரைகள் பாமரர் களுக்கு அல்ல. படித்த மேல்தட்டு மக்களுக்கானது. அவர்கள்தான் ஈஷா மையத்தின் காவலர்கள். படித்த இளைஞர்கள் அவரிடம் ஐக்கியமாவதை விரும்புவதன் காரணம் இன்னும் பலருக்கு விளங்கவில்லை.

இயல்பாகவே மனிதர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை வாசுதேவ் தட்டி எழுப்புகிறார்.

ஏராளமான புத்தகங்கள் உலக முழுதும் ஈஷா மையம் சார்பில் விற்கப் படுகின்றன. பல கோடிப்பேரை மிகச் சாதாரணமாக அவரால் ஈர்க்க முடிந்திருக்கிறது.

தங்கள் பிள்ளைகளை ஜக்கி வாசுதேவ் மயக்கி வைத்திருப்பதாகவும் மீட்டுத் தரக் கோரியும் புகார்கள் வந்தன. பின்னர் அவை மறைந்தன.

ரவிசங்கர், வாசுதேவ் போன்றவர்கள் மிக சுலபமாக வர்த்தக நிறுவனங்களை தங்கள் வயமாக்கிக் கொள்கிறார்கள். மேல்தட்டு  மக்களுக்கும் இவர்களைத்தான் பிடித்திருக்கிறது.

பாமரர்கள் தான் பாவம் உள்ளூர் சாமியார்களோடு திருப்தி அடைய வேண்டி இருக்கிறது.

பத்மவிபூஷன் விருது பெறும் அளவு மத்திய அரசு ஜக்கி வாசுதேவுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது. கலைஞரும் கூட மையத்தில் மரக்கன்று நட்டு தனது ஆதரவை வெளிப் படுத்தி இருக்கிறார்.

அதிகார மையங்கள் இத்தகைய குருமார்களுக்கு வேண்டியவர் களாகத்தான் இருக்கிறார்கள். மன்னர் காலத்து வழக்கம் மக்களாட்சி யிலும் தொடர்கிறது.

காவி தவிர்த்து, மத சின்னங்கள் தவிர்த்து, வித்தியாசமான உடை அணிந்து ஜக்கி  வாசுதேவ் தனித்துத்தான் காணப் படுகிறார்.

சிவராத்திரி அன்று அவரது உரை மிகச்சிறப்பானது. ஆனால் அது திருமூலரும், வள்ளலாரும், வள்ளுவரும் சொன்னதன் ஆங்கில ஆக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பார்ப்பனீயம் அதன் செல்வாக்கு பற்றி சத்குரு வெளிப்படையாக பேசுவதில்லை. அங்கேதான் சந்தேகம் வருகிறது.

ஒரே ஒரு வேண்டுகோள்; சத்குரு அவர்களே பாமரர் பக்கமும் கொஞ்சம் கவனம் செலுத்துங்களேன். ஏனென்றால் அப்போதுதான் நீங்கள் சத்குருவா தமிழர் மத்தியில் நிலைகொண்டிருக்கும் சுயமரியாதை உணர்வுக்கு சத்துருவா என்பது தெரியும்.

சனாதனத்தை எதிர்த்து நின்ற அய்யா வைகுண்டர் வழி தனி மதமே??!!

1809 ல் பிறந்து  1833 ல் புதுப்பிறவி எடுத்து 1851ல் மறைந்த அய்யா வைகுண்டர் கண்ட வழி தனி மதமே?!

அவரை இந்து மதம் என்ற பார்ப்பனீய மதத்தில் அடக்குவது அவருக்கு செய்யும் துரோகம். தன் வாழ்நாளில் வர்ண தர்மத்தை ஏற்காதவர் அவர் .

ஏறத்தாழ வடலூர் வள்ளலாரின் சம காலத்தவர் அய்யா வைகுண்டர்.

தமிழ் நாட்டில் வள்ளலார் செய்த புரட்சியை அய்யா வைகுண்டர் கேரள மாநிலத்தில் செய்தார்.   அவரது பிறந்த கன்னியாகுமரி மாவட்டம் அப்போது கேரள மன்னன் சுவாதி திருநாள் ஆட்சியில்  இருந்தது.

சம்பூர்ணதேவன் என்கிற முத்துக்குட்டி க்கு பிறந்தபோது தந்தை பொன்னு நாடார் இட்ட பெயர் முடிசூடும்பெருமாள். அப்படி எல்லாம் பெயர் வைத்துக்கொள்ள அப்போது நாடார் இனத்தவருக்கு உரிமை இல்லை.  புகார் செய்யப்பட்டதால் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றிகொண்டார்கள்.

அவர் முன்பே திருமணம் ஆன திருமலம்பாளுடன் வாழ்ந்து ஒரு பிள்ளையை பெற்று எடுத்ததாகவும் வரலாறு.

பின்னர் தனது 24 வது வயதில் திருச்செந்தூர் கோவிலில் வழிபட சென்று கடலில் காணாமல் போய் மூன்றாவது நாளில் ஸ்ரீமன் நாராயணனின் மறு அவதாரமாக மீண்டு வந்ததை தான் அவரது அவதார தினமாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். அதாவது 1833 ம் ஆண்டு முதல் அவர் வைகுண்டம் திரும்பி அடக்கமான 1851 ம் ஆண்டு வரையிலான பதினெட்டு ஆண்டுகளில்  அவர் ஆற்றிய தெய்வீகப் பணி தான் அவரை  அய்யாவழி மரபை உருவாக்கிய மகானாக உயர்த்தி வைத்திருக்கிறது.

இடையில் அவரது புகழ் பெருகத் தொடங்கியவுடன் புகார்களும் சென்று மன்னன் சுவாதி திருநாள் வைகுண்டரை சிறையில்  110  நாள் அடைத்து வைத்த கொடுமையும் நடந்தது.

சிறையில் இருந்து  மீண்டவர் சுவாமிதோப்பு பதியில் தனது பணியை தொடர்ந்து செய்து அரிய புகழ் பெற்று தனி வழியை படைத்து மறைந்தார்.

நாடார் பெருமக்களுக்கு அந்த காலத்தில் அரசு செய்து வந்த அடக்கு முறைகளால் மனம் வெந்து   சுயமரியாதையை யும் சமூக அந்தஸ்தையும் அச்சம் அகற்றலையும் போதித்த புரட்சியாளார் அவர்.

பிசாசு என்பதெல்லாம் இல்லை, நோய் என்பது இல்லை  வலி என்பது இல்லை , வரி என்பதும் இல்லை, எனவே துணிவுடன் வாழுங்கள் என்று போதித்த பின்னணியில் அந்த காலத்து அரசியல் இருக்கிறது.

அன்று அவரது சீடர்களாக ஐந்து  பேர் இருந்திருக்கிறார்கள் .   ஆனால் அவரது புகழ் தமிழகம் முழுதும் பரவாமல் இருந்ததுதான் வருத்தத்திற்கு உரியது.

பெரும்பாலும் அவரது பக்தர்கள் நாடார் சமூகத்தில் இருப்பதும் அந்த அரசியல் பின்னணியில்தான்.

எந்த சனாதனம் கற்பித்த நால்வருணத்தை ஏற்க மறுத்தாரோ அதே சனாதனம் அவரை தன்னுள் அடக்கிக் கொண்டதுதான் வரலாற்றின்  சோகம். 

அவரின் பக்தர்களும் தெரிந்தோ தெரியாமலோ சனாதனத்துக்கு வால் பிடிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று சுவாமிதோப்பு பதி  வேரூன்றி விட்டது.  எனவே  சனாதனம் சுவாகா செய்யப் பார்க்கிறது.  ஆம்.  இந்து அறநிலையத்துறை சுவாமிதோப்பு பதியை ஏற்கச் செய்ய சூழ்ச்சிகள் நடை பெறுகின்றன.

அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்று வெற்று கூச்சல் இடும் சனாதனிகள் சுவாமிதோப்பை அறநிலையத்துறை ஏற்பதை  வரவேற்கிறார்கள்.  ஏனென்றால் அங்கே பார்ப்பனீயம் கோலோச்ச வில்லை.   அதை விட்டு வைப்பதா என்ற ஆதங்கம்.

சுவாமிதோப்பு  பதி தனது தனித்தன்மையை காத்துக் கொள்ள வேண்டும்.  அதற்கு தமிழர்கள் துணை நிற்க வேண்டும்.

‘அகில திரட்டு ‘  தமிழர்களின் ஆன்மிக வழிகாட்டு நூலாக வேண்டும்.

அங்கே நடை முறையில் உள்ள சம்பிரதாயங்கள் முக்கியம் அல்ல.   அய்யா வைகுண்டர் போதித்த கருத்துக்களின் சாரம்தான் முக்கியம்.  அதை உள்வாங்கிக் கொண்டு தமிழ் சமுதாயம் மேன்மையுற வேண்டும்.

அதற்கு முதல் படியாக  அய்யா வைகுண்டர் வழியை தனி மதமாக அங்கீகரிக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்.   அதற்கு அய்யா வழி பக்தர்கள் போராட வேண்டும்.   எல்லா தமிழ் மக்களும் அதற்கு துணை நிற்க வேண்டும்.

தமிழர் சமயங்களை ஒருங்கிணைக்க முடியாதா ?    முடியும் என்பதை நிரூபிப்போம்.!    அதுவே சனாதனத்தை முறியடிக்க ஒரே வழி!!!

தேர்தல் நேரத்தில் ரூபாய் 2,000/- கொடுப்பது லஞ்சமின்றி வேறென்ன?!

2,000/- கொடுப்பது லஞ்சமின்றி வேறென்ன?

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் சுமார் அறுபது லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 2,000/- அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் இன்று முதல்வரால் தொடங்கி வைக்கப் பட்டது.

மாதம் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே சம்பாதிப்பவர்கள்

கான்க்ரீட் வீடுகளில் வசிக்காதவர்கள்

வருமான வரி செலுத்தாதவர்கள்

என்று சில விதிகளை வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என பட்டியல் இடுவதற்கு வகுத்திருக்கிறார்கள் .

உண்மையிலேயே இன்று இருக்கும் விலைவாசி நிலைமையில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு என்று உதவித் துகை வழங்குவது நல்ல திட்டம்தான். வரவேற்க வேண்டியதுதான்.

ஆனால் நடப்பது என்ன? தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் உதவி வழங்குவது நியாயம்தானா? தகுதி படைத்தவர்களின் பட்டியலை  நேர்மையாக பரிசீலித்து முடிவு செய்யும் முன்பே அவசரம் அவசரமாக இருக்கும் பட்டியலை கொண்டே அமுல் படுத்த முனைந்தால் அதற்கு லஞ்சம் என்று பெயர் சூட்டாமல் வேறு என்ன பெயர் சூட்டுவது?

அகில இந்திய ரீதியில் கணக்கு எடுத்ததில் நாடு முழுதும் சுமார்  27.6  கோடிப்பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பதாக தெரிகிறது. அதாவது  அகில இந்திய சத விகிதம்  21.52 %. தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் 11.28%  பேர். தமிழ்நாடு அரசு சொல்லும் 60 லட்சம் குடும்பங்கள் இந்த கணக்கில் எப்படி வரும்? சுமார் 56.5 லட்சம் குடும்பங்கள் தான் தமிழகத்தில் இருப்பதாக சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அறுபது லட்சம் குடும்பங்கள் என்று எப்படி கணக்கிட்டார்கள் என்பது தெரியவில்லை.

திட்டத்தை நாம் எதிர்க்க வில்லை. தேர்தலை மனதில் வைத்து தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் அவசர அவசரமாக கொடுப்பதைத்தான் லஞ்சம் என்கிறோம்.

இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வரும் என்று தெரிந்தே இந்த அவசர நடவடிக்கை.

அறப்போர் இயக்கம் நீதிமன்றம் சென்றிருக்கிறது.

கிராமப் புறத்தில் ஒருநாளைக்கு ரூபாய் 32 ம் நகர்ப்புறத்தில் ரூபாய்  47ம் வறுமைக்கோடு வருவாயாக நிர்ணயிதிருக்கிரார்கள் .

அரிசி வாங்கும் குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்களை எல்லாம் இந்த வரையறைக்குள் அடக்கி விட முடியாது.

எப்படியாவது, வாக்குக்கு நேரடியாக பணம் கொடுப்பதை விட அரசு பணத்தை வாரியிறைத்து தாங்கள் கொடுப்பதாக ஒரு பிரமையை ஏற்படுத்த அதிமுக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

தமிழக வாக்காளர்களை ஏமாற்ற முடியாது.

செம்மொழி விருது தேர்வுக் குழுவில் தமிழ் வெறுப்பாளர் நாகசாமி? பாஜகவின் ஓரவஞ்சனை??!!

செம்மொழி விருது தேர்வுக் குழுவில் தமிழ் வெறுப்பாளர் நாகசாமி?

வேதங்களில் இருந்து வந்தது திருக்குறள் என்று தமிழர் நெஞ்சில் தீயை வைத்தவர் நாகசாமி.

திருவள்ளுவரை சிறுமைப்படுத்துவது மட்டுமின்றி தமிழர்களுக்கு என்று தனியே கலாச்சாரப் பெருமை எதுவுமே இல்லை எல்லாமே பார்ப்பனர்களின் வேதத்தை பின்பற்றி உருவானவை தான் என்று திருபுவாதம் பேசி உள்ளிருந்தே கொல்லும் நோயாக தன்னை நிருபித்து வருபவர் நாகசாமி.

இவர் எழுதிய திருக்குறள் புத்தகத்தில் கடவுள் வாழ்த்தில் வரும் ‘அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தாக்கல்லால் பிறவாழி நீந்தல் அரிது ” என்ற  குறளுக்கு அந்தணரின் (பார்ப்பனரின் ) கால்களை வணங்கினால் தவிர பிறவி எடுப்பதை தடுக்க முடியாது என்றும் பொருள் கூறலாம் என்று எழுதி தனது சாதி வெறியை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டவர் அவர்.

காஞ்சி சங்கராச்சாரிக்ளின் படங்களை போட்டு தான் யார் பக்தன் என்பதை பறை சாற்றவும் அவர் வெட்கப்படவில்லை.

அப்படிப்பட்ட தமிழர் வெறுப்பாளரை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப் படும் குடியரசுத் தலைவர் விருதுகளை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக மத்திய பாஜக அரசு நியமிதிருப்பதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார் .

நாகசாமிக்கு பத்மபூஷன் விருது பாஜக வழங்கியதில் வியப்பென்ன?

தமிழுக்கும் தமிழருக்கும் விரோதிகளாக தங்களை உருவகப்படுத்திக் கொள்வதில் பார்ப்பன்ர்களுக்கோ பாஜக வுக்கோ எந்த தயக்கமும் இல்லை.   நீங்கள் எங்கள் அடிமைகள். ஒப்புகொண்டுதான் ஆக வேண்டும் என்று வெட்கமில்லாமல் பிரச்சாரம் செய்வதற்கும் அவர்கள் தயார் என்பதைத்தான் இந்த நியமனம்  காட்டுகிறது.

ஏற்கெனெவே செம்மொழி தமிழாய்வு நிறுவனம் நிதி ஒதுக்கீட்டில் பார பட்சம் காட்டப் பட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் மத்திய அரசுக்கு எது செய்தாவது அதை முடக்க வேண்டும் என்று நினைக்கிறது  என்பதில் என்ன சந்தேகம்? இல்லையென்றால் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டாமல் செய்யட்டும்.

பாஜக வின் இத்தகைய விபரீத விளையாட்டுகள் நாட்டுக்கு நலம் பயப்பவை அல்ல.

மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இது வருவதால் அவர்கள் இப்படி எல்லாம் விளையாடுகிறார்கள்.

தமிழ்நாட்டிலே இருக்கும் அரசுக்கு

இதில் கவனம் செலுத்த நேரமில்லை.

இதைப்பற்றி பேசவே மறுப்பவர்கள் தான் இன்று ஆட்சியில். பேசினால் எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்களே?!

யார் ஆண்டாலும் தமிழ்நாட்டின் உரிமைகளை மத்தியிலே இருப்பவர்கள் காப்பார்கள் என்று நம்பியிராமல் தாங்களே அவற்றைக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்பவர்களே ஆட்சிக்கு வரவேண்டும் தமிழ்நாட்டில்.

ராணுவ சீருடையில் தேர்தல் பிரச்சாரம் செய்த பாஜக தலைவர் ?!

சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று- இதுதான் பாஜக.

நம்பவே முடியாத கட்சி என்று பாஜக பெயர் எடுக்கவும் இதுதான் காரணமா.

பாகிஸ்தான் உடன் ஆன போரை அரசியல் ஆக்க வேண்டாம் என்று பேசியதும் பாஜக தான்.

போரை வைத்து 22  இடங்களில் வெல்வோம் என்று எடியூரப்பா பேசியபின் நேற்று டெல்லியில் பாஜக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன மனோஜ் திவாரி ராணுவ சீருடை அணிந்து இரு சக்கர வாகனத்தில் கட்சிக் கொடியேந்தி தேர்தல்  பிரசாரம் செய்திருக்கிறார்.

ராணுவத்தை அவமதித்து விட்டார் என்று எதிர்ப்பு எழுந்தது.

கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து விளக்கம் சொன்னவர் நேரு உடை அணிந்தால் நேருவை அவமதிப்பது ஆகுமா என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

இதுதான் பாஜக. அவர்கள் எது செய்தாலும் தவறில்லை. மற்றவர்கள் 350  பேர் ராணுவ தாக்குதலில் இறந்ததற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் ராணுவத்தை அவமதிக்கிறீர்கள் என்று பிரதமர் குற்றம் சாட்டுகிறார்.

ராணுவ வெற்றியை கொண்டாடி தேர்தலில் வெற்றி பெற பாஜக எடுக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை.

ஒப்பந்தத்தை மீறி அதானிக்கு விமான நிலையத்தை தாரை வார்த்ததை ஏற்க மாட்டோம்; கேரள முதல்வர்?!

அதானிக்கு விமான நிலையத்தை தாரை வார்த்ததை ஏற்க மாட்டோம்

2006 ல் டெல்லி ,மும்பை விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்புவித்த இந்திய விமான போக்குவரத்து கழகம் தற்போது மேலும் ஆறு விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்புவிக்க முடிவு செய்ததை அடுத்து நடந்த ஏலத்தில் அதானி குழுமம் ஐந்து விமான நிலைய நிர்வாக உரிமையை தட்டிச்சென்றது.

அகமதாபாத், ஜெய்ப்பூர்,லக்னௌ, மங்களூர், திருவனந்தபுரம் ஆகிய ஐந்து விமான நிலையங்கள் அதானி வசம் சென்றன. குவாஹத்தி விமான நிலையம் வேறு நிறுவனத்திற்கு சென்று விட்டது.

அதானி நிறுவனம் விமான நிலைய நிர்வாகத்தில் முன் அனுபவம் கொண்டது இல்லை.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது திருவனந்தபுரம் விமான நிலையத்தை பொருத்தவரை கேரள அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக இந்த ஏலம் விடப் பட்டிருப்பதால் நாங்கள் அதானிக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்ததுடன் வழக்கும் போட்டிருப்பதாக தெரிகிறது.

விமான நிலையத்திற்கென கேரள அரசு முதலில் 635 ஏக்கர் நிலத்தையும் பின்னர் சர்வதேச முனையம் கட்டட மேலும் 23.57 ஏக்கரும் இலவசமாக தந்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்ததில்தான் பின்னால் ஏதாவது கம்பெனிக்கு விமான நிலைய நிர்வாகம் தரப்பட்டால் அதில் கேரள அரசையும்  கலந்து கொள்ள வேண்டும் என்றும் நிலத்தின் விலைக்கு அரசையும் ஒரு பங்குதாரர் ஆக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.

எந்த ஒப்பந்தத்தையும் பின்பற்றாமல் இப்போது தனியார் வசம் அதுவும் குறிப்பாக அடானி வசம் விமான நிலைய நிர்வாகத்தை ஒப்படைப்பதை ஏற்க முடியாது என்று தெளிவாக பினராய் விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

அனுபவம் என்ற நிபந்தனை எதுவும் ஏலம் தொடர்பான வரையறைகளில் இல்லாததால்தான் அதானி குழுமத்திற்கு தேர்வு செய்யப் படும் வாய்ப்பு கிடைத்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அதானி குழுமம் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் வணிகத்தில்.   அது அவர்களது உரிமையாக இருக்கலாம்.

அதற்காக மாநில அரசு ஒன்று வஞ்சிக்கப்படவேண்டுமா?

மத்திய பாஜக அரசு பெரு நிறுவனங்களின் அரசு என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா இல்லையா??!!

மோடியை விமர்சித்தால் பாகிஸ்தான் ஆதரவாளர்களா?!

மோடியை விமர்சித்தால் பாகிஸ்தான் ஆதரவாளர்களா?!

தாமோதரதாஸ் நரேந்திர மோடி – தனிப்பட்ட முறையில் ஒழுக்க சீலர் – சொத்து சேர்க்காதவர் – நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர் – கடுமையாக உழைப்பவர் .

அதில் எல்லாம் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

கருத்து வேறுபாடு எங்கே தோன்றுகிறது என்றால் அவர் என்ன கொள்கையை கொண்டிருக்கிறார்?  யாருடைய பிரதிநிதியாக செயல் படுகிறார் ? யார் அவரை ஆட்டுவிக்கிறார்கள்? உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது? இதில்தான் மாற்றுக் கருத்து நிரம்ப இருக்கிறது.

சனாதன தர்மத்தை நிலைநாட்ட பாடுபடுகிறார். கார்பரேட் பெரு முதலாளிகளின் பிரதிநிதியாக செயல்படுகிறார். ஆர் எஸ் எஸ் அவரை ஆட்டுவிக்கிறது. உண்மையான அதிகாரம் ஆர் எஸ் எஸ் இடம் இருக்கிறது. இதை மறுக்க முடியுமா முடியாதா ? 

குடும்பத்தை கவனிக்கவில்லை என்ற கொச்சையான விமர்சனங்கள் அர்த்தமற்றவை. அவரது சொந்தங்கள் சாதாரணமான இயல்பு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போற்றப்பட வேண்டியதுதான். வாழ்த்துவோம்.

ஆனால் பிரச்னை அதுவா?

ஒப்பீடு சரியா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால் ஹிட்லர் , முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் கூட தனிப்பட்ட முறையில் ஒழுக்க சீலர்கள் தானே? சொத்து சேர்க்காதவர்கள் தானே? உறவினர்களை பேணாதவர்கள் தானே? அவர்கள் கொண்டிருந்த இனவெறி-  நாங்கள் ஆளப் பிறந்தவர்கள் என்ற தவறான சித்தாந்தம்  அதுதானே அவர்களை மற்றவர்கள் வெறுக்க காரணமாக அமைந்தது.

Modi-hitler
Modi-hitler

பாகிஸ்தான் நமக்கு பகை நாடு. அதற்கு அது முஸ்லிம் நாடு என்பது மட்டும் காரணம் இல்லை. பக்கத்தில் பங்களா தேசம் ஆப்கானிஸ்தான் முஸ்லிம் நாடுகள் நம்மோடு நேசத்தோடு வாழவில்லையா? காஷ்மீர் தான் பாகிஸ்தான் நம்மோடு பகை நாடாக தொடர காரணம். காஷ்மீர் பிரச்னை தீர்ந்தால் ஒருவேளை பாகிஸ்தான் நட்பு நாடாக மாற வாய்ப்பு இருக்கிறது.

காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?    சிக்கல் நிறைந்தது காஷ்மீர் பிரச்னை. ஒரே நாளில் அதை  தீர்த்து விட முடியாது.   காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக், ஜம்மு மூன்றும் தனித்தனி பிரச்னைகளை உள்ளடக்கியவை. காஷ்மீரில் மட்டும்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மை.மற்ற இரண்டு பகுதிகளை அவர்கள் கட்டுப் படுத்த  முடியுமா ? எந்த மக்களையும் ராணுவ பலம கொண்டு மட்டும் ஆண்டு விட  முடியுமா? எத்தனை  காலத்துக்கு முடியும்? முடிந்தாலும் அது நியாயமா?  பேசி மட்டுமே  தீர்க்க வேண்டிய பிரச்னை காஷ்மீர்.

பாகிஸ்தான் தனக்குள் முஸ்லிம் பயங்கரவாத பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. ராணுவம் தான் உண்மையான அதிகாரத்தை செலுத்தி வருகிறது. புட்டோ, பெனாசிர், என்று அதன் தலைவர்கள் கொல்லப்பட்டு ஜனநாயகம் அதற்கு அன்னியப் பட்டு நிற்கிறது.    பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியாமல் அனுமதிப்பதால் தான் அமேரிக்கா போன்ற  உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானை எச்சரித்து வருகின்றனர்.

உயிரைப் பணயம் வைத்து இந்திய வீரர்கள் எல்லைப் பகுதிகளில் பணியாற்றி வருகிறார்கள்.

எந்தப் போரிலும் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை. வெல்லவும் முடியாது. எப்போதும் பாகிஸ்தானை ஆதரிக்கும் சீனா கூட இன்று தயங்கி நிற்கிறது. நமது ராணுவ பலம் வெற்றிக்கு உத்தரவாதம்  தரும்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு  வந்தாலும் இதே நிலைதான். காங்கிரசும் பாஜக-வும் வெளி உறவுக் கொள்கையில் மாற்றுக் கொள்கை கொண்டவர்கள் அல்ல. மூன்றாவதாக  யார் வந்தாலும் இதே நிலைதான் நீடிக்குமே தவிர மாற்று நிலை எடுக்கப் போவதில்லை.

narendra-modi
narendra-modi

இன்று இந்திய தேசம் முழுவதும் ராணுவத்தின் பக்கம் நிற்கிறது.

அபிநந்தன் விடுதலையை எல்லா இந்தியரும் கொண்டாடுகிறார்கள்.

அவரை பாகிஸ்தான் விடுவித்தது சர்வதேச நிர்பந்தம் காரணமா, இந்தியாவின் மீதான அச்சம் காரணமா என்ற விவாதத்தை  தாண்டி பேச்சு வார்த்தைக்கு தயார் என்று அறிவிக்க வேண்டிய நிலையில் தான் இம்ரான் கான் இருக்கிறார்.

ஆனால் இந்தியா பேச்சுவார்த்தைக்கு உடனடியாக சம்மதிக்க தயங்குவதன்  காரணம் பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கர வாத குழுக்களை கட்டுப்படுத்தாமல் பேச்சு வார்த்தை நடத்துவதில் பயன் இல்லை என்பதுதான். அதில் நியாயமும் இருக்கிறது.

இப்படி ஒட்டு மொத்த தேசமும் மத்திய அரசின் பின்னாலும் ராணுவத்தின் பின்னாலும் இருக்கும்போது பிரதமர் மோடியை அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பதை ஏதோ தேசத்துக்கே எதிராக பேசுவதாக முத்திரை குத்துவது என்ன நியாயம்?

போரினால் கர்நாடகாவில் 22 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எடியூரப்பா பேசினால் அது அரசியல் அல்ல. எடியூரப்பாவின்  பேச்சை பாகிஸ்தானில் பிரசுரித்து அரசியல் காரணங்களுக்காக மோடி போர் நடத்துகிறார் என்றார்களே அவர்களை என்ன செய்வீர்கள். எடியூரப்பா மேல் நடவடிக்கை எடுத்தீர்களா?

தேசம் பெரிது. அதில் அரசியல் செய்யாதீர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து-தேசிய கீதம் இசைக்காமல் மோடியின் அரசு நிகழ்ச்சி மீண்டும் நடந்ததன் காரணம் என்ன?

மோடியின் அரசு நிகழ்ச்சி மீண்டும் நடந்ததன் காரணம் என்ன?

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் நாற்பதாயிரம் கோடி செலவிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

முன்பே மோடி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தேசிய கீதம் இசைக்காமல் ஒரு நிகழ்ச்சி நடந்த போதே ஏன் மோடிக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை கேட்க விருப்பம் இல்லையா? அதற்காகவே தேசிய கீதமும் இசைக்காமல் அரசு நிகழ்ச்சி நடந்ததா என்ற கேள்வி எழுப்பப் பட்டது.

இப்போது மீண்டும் அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த செயல் தமிழர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு  காரணம் மாநில அரசா? மத்திய அரசா?

யாரேனும் விளக்கம் சொல்ல வேண்டாமா?

இதேபோல் மற்றவர்கள் அரசு நிகழ்ச்சி நடத்தினால் எப்படி விமர்சித்து இருப்பார்கள்?

மற்றவர்களுக்கு ஒரு நீதி  மோடிக்கு ஒரு நீதியா?

இவர்களின் நாட்டுப் பற்று ஒன்றும் விளங்கவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்திலும் தேசிய கீதத்திலும் திராவிட என்ற சொல் வருவதால் தவிர்க்கிறார்களா?

‘மோடிஜி’ என்று பாசத்துடன் அழைத்த எடப்பாடியும் ஒபிஎஸ்சும் விளக்கம் சொல்வார்களா? மௌனித்துப் போவார்களா?

மோடி வென்றால் பாதி அதிமுக பாஜகவில் கரைந்து விடும்? மோடிஜி என்று அழைத்து பக்தி காட்டிய எடப்பாடி ஒபிஎஸ்

மோடி வென்றால் பாதி அதிமுக பாஜகவில் கரைந்து விடும்?

கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியை எடப்பாடியும் ஒபிஎஸ்ம் பணிவு காட்டி வரவேற்றனர்.

கறுப்புக் கொடி காட்ட நின்ற மதிமகவினர் வைகோ தலைமையில் திரண்டு முழக்கங்களை எழுப்பினர். மீனவர்  பிரச்னை தொடங்கி பெற்றோலிய மண்டலம் அமைப்பது, மீத்தேன், எடுப்பது, இந்தி திணிப்பு என்று பலவகைகளிலும் தமிழர் பண்பாட்டை சிதைப்பதை கொள்கையாக கொண்டு செயல்படும் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் நரேந்திர மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தை எதிர்த்து பாஜக-வினர் வைகோவை தாக்க முயற்சிக்க காவல்துறை தலையிட்டு மதிமுகவினரை கைது செய்து கொண்டு  சென்றது.

எந்த அளவு அதிமுக பாஜகவிற்கு அடிமையாக மாறி விட்டது என்பதை காட்டும் விழாவாக கூட்டம் அமைந்து விட்டது.

தமிழக தலைவர்கள் யாரும் வட இந்திய தலைவர்களை ஜி போட்டு அழைக்க மாட்டார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஒபிஎஸ்சும் போட்டி போட்டுக் கொண்டு பிரதமரை மோடிஜி என்று பாசத்துடன் அழைத்தது தமிழ்க் கலாச்சாரத்துக்கு விடை கொடுக்க அவர்கள் தயாராகி விட்டதையே காட்டியது.

admk-modi
admk-modi

போகிற போக்கை  பார்த்தால்  மோடி  வென்று ஆட்சி அமைத்தால் பாதி அதிமுக பாஜக-வில் கரைந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

திராவிட் இயக்க தோன்றல்களான அதிமுக தொண்டர்கள் சிந்திப்பார்களாக.

மோடி தனது உரையில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர் என்றார்.  நிர்மலாவுக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு? இங்கு பிறந்தவர் என்பதை தவிர.    ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டு வடக்கில் செட்டில் ஆகி அந்த தொடர்பில் மத்திய அமைச்சரானவர்.

எப்போதாவது தமிழகத்தில் மக்களோடு கலந்து பிரச்னைகளை தெரிந்து கொண்டவரா? கர்நாடக மாநிலத்தில் இருந்து மேலவைக்கு தேர்ந்தெடுக்க பட்டு காவிரிப் பிரச்னையில் அவர்களுக்கு ஆதரவாக பேசியவர் அல்லவா?  ராஜாஜியை பற்றி பேசி தான் பிரதிநிதி என்பதையும் மோடி பறைசாற்றிகொண்டார். மீனவர்களுக்கு சாதனங்களை வழங்கியது பற்றி  பேசிய  மோடி ஏன் இன்னமும் இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்கிறது என்பது பற்றி வாய் திறக்க வில்லை.

நேற்று கூட இரண்டு இலங்கை மீனவர்களை எல்லை தாண்டியதாக இந்திய ரோந்துப் படை கைது செய்து விடுவித்திருகிறது. ஏன் தமிழ் மீனவர்கள் கைது செய்யப் படும்போது தலையிட்டு இதே ரோந்துப் படை தடுக்க  வில்லை.?

நெருடலான பல பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் மோடியையும் பாஜக வையும் தமிழர்கள் கண்டு கொள்ளாமல் தான் இருப்பார்கள்.