Home Blog Page 37

8 வழிச்சாலை; உறுதிமொழியை மீறி உச்ச நீதிமன்றம் சென்ற எடப்பாடி??!!

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை கொடுத்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு போக மாட்டோம் என்று பேட்டி கொடுத்தார்.

தேர்தல் நேரத்தில் நிதின் கட்கரி சேலத்தில் பரப்புரை கூட்டத்தில் பேசும்போது விவசாயிகளிடம் ஒப்புதல் பெற்று சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று பேசினார். மேடையில் இருந்த பாமக நிறுவனர் மருத்துவர்  ராமதாசோ முதல்வர் எடப்பாடியோ அதை எதிர்த்து குரல் எதுவும் எழுப்பாமல் மெளனமாக இருந்தனர்.

தமிழ்நாட்டில் தேர்தல் தோல்விக்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று கட்கரி தீர்மானித்துவிட்டார் போல தெரிகிறது.

திடீர் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து அது  வருகிற மூன்றாம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அன்புமணியும் தனது பங்கிற்கு ஒரு கேவியட்டை போட்டு வைத்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் என்ன செய்யும் என்பது வேறு. ஆனால் அதற்குள் விவசாயிகள் திரண்டு போராட தயாராகி விட்டனர்.

இந்த போராட்டம் உருவாக எடப்பாடியே காரணம்.

ஏற்கெனெவே மூன்று சாலைகள் சேலம் -சென்னை இடையே இருக்கும்போது எதற்கு நான்காவதாக ஒரு சாலை என்ற கேள்விக்கு இதுவரை ஏற்றுக் கொள்ளத்தக்க எந்த விளக்கத்தையும் எடப்பாடி அரசு சொல்ல வில்லை. இதை முன்னெடுக்கும் மத்திய  அரசும் சொல்ல வில்லை. பெரு நிறுவனங்கள் நன்மைக்காக என்று ஒப்புக்கொள்ள தயங்குகிறார்கள்.

2020 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்பது எத்தனை குடும்பங்களை  அழிக்கும் என்பது எடப்பாடிக்கு தெரியாதா?

சட்ட வரைமுறை பின்பற்றபட வில்லை என்றால் இப்போது பின்பற்றுகிறோம் என்பார்கள்.

ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக போராடுவதாக பாமக சொல்வது ஏற்றுக் கொள்கிற வகையில் இல்லை.

இரண்டு மாதத்தில் ராஜ்ய சபா உறுப்பினராக அதிமுகவினால் தேர்வு செய்யப்பட வேண்டும் ஒப்பந்தப்படி. அதற்கு பாஜக சம்மதிக்க வேண்டும். எங்களுக்கு குடைச்சல் கொடுக்கும் கட்சிக்கு எதற்கு இடம் என்று பாஜக ஆட்சேபித்தால் அதை அதிமுக நிராகரிக்க முடியுமா?

கூட்டணியை விட்டு வெளியே வரும் தைரியம் பாமகவுக்கு வருமா?

மக்களை போராட்டத்திற்கு தூண்டும் எடப்பாடி தனது போக்கை மாற்றிக் கொண்டு இந்த வேண்டாத திட்டத்திற்கு மூடு விழா காண்பதே நல்லது. உட்கட்சி சண்டையால்  அதிமுகவில் ஒருவருக்கு கிடைக்க இருந்த மத்திய அமைச்சர் பதவியை இழந்த எடப்பாடி மீண்டும் அதை பெற முயற்சி செய்வாரா என்பதே சந்தேகம்.

மத்திய அரசு மேலும் இதில் பிடிவாதம் காட்டுமே ஆனால் மக்களின் எதிர்ப்பை பல வகைகளில் சந்திக்க நேரிடும்.

                  எல்லாம் சரி. கட்கரி என்ன சொன்னார். விவசாயிகளின் ஒப்புதலை பெற்றுத்தானே நிறைவேற்றுவோம் என்றார். விவசாயிகளின் ஒப்புதலை பெற  ஒரு கூட்டம் நடத்தி அதை பெரும் முன் இந்த மேன்முறையீடு? 

நாங்கள் தமிழர்கள் என்று நிர்மலாவும் ஜெய்சங்கரும் சொல்வார்களா?!

திருச்சியில் பிறந்து ஆந்திராவில் திருமணம் செய்து டெல்லியில் வாழ்ந்து இப்போது மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சராக ஆகி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

தன் திறமையை பல வழிகளிலும் உலகுக்கு காட்டியவர் அவர். நிதித்துறையின் ராஜாங்க அமைச்சராகவும் ராணுவ அமைச்சராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர். ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தனது திறமையை மேலும் கூட்டுவார் என்று எதிர்பார்த்து பணி சிறக்க மனதார வாழ்த்துவோம்.

கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். அதனால் காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்பட முடியாமல் போனவர். நம்மூர் ஒபிஎஸ்-ஐ வரவழைத்து ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் என்று கூட பார்க்காமல், பார்க்க முடியாது என்று முகத்தில் அறைந்தது போல் திருப்பி அனுப்பியவர். தனது புகழ் இங்கே வேறு மாதிரி இருந்ததால் கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யக்கூட வராதவர். 

ஆனால் அவரை மந்திரி சபையில் இரண்டு தமிழர்கள் என்று பத்திரிகைகள் எழுதும்போதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது. தான் தமிழர் என்று எப்போதாவது நிர்மலா சொல்லி இருக்கிறாரா? நீங்கள் யார் என்றால் நான் இந்தியர் என்பார். மாநில அடையாளத்தை பெரிதாக வெளிப்படுத்திக்கொள்ள விரும்பியதில்லை. மாநில அடையாளம் வேண்டாம் எல்லாரும் இந்தியர்கள் என்ற அடையாளம் போதாதா என்று கூட கேட்கலாம்.

அதைப்போல் தான் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அவர்களும். அவர் திருச்சியில் பிறந்து டெல்லிக்கு குடியேறி அங்கேயே படித்து டெல்லிவாசியாகவே வாழ்ந்து அவரது தகப்பனார் போலவே வாழ்வில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர்.    வெளி உறவுத் துறை செயலாளராக பணியாற்றி 2018ல் ஓய்வு பெற்றவர். அரசியல் தொடர்பில்லை என்பதால் மக்களுடன் தொடர்பு இல்லாதவர். அலுவல் ரீதியாக இல்லாமல் மற்ற மக்களுடன் தொடர்பில் இருந்தவர் இல்லை ஜெய்சங்கர். ஆனால் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் தன் கடமையை திறம்பட செய்தவர் என்று பிரதமர் மோடி வைத்த நம்பிக்கை இப்போது அவருக்கு வெளி உறவுத்துறை அமைச்சராகவே ஆக்கி இருக்கிறது. இதுவரை செயலாளர்கள் எவரும் இப்படி அமைச்சர்கள் ஆக்கப் பட்டதில்லை. இனிமேல்தான் அவரை பாஜக பாராளுமன்ற  மேல்சபைக்கு அனுப்பும்.

அவரிடமும் கேளுங்கள் நீங்கள் தமிழரா என்று? தமிழர் என்று சொன்னால் மகிழ்ச்சி.  சொல்வாரா என்று தெரியாது. அவர் மீது குற்றம் இல்லை. அவர் இங்கே வாழ்ந்தவர் இல்லை. இருக்கும் இடத்தில தன் பணிகளை செய்தவர். அதற்காக தமிழ் உணர்வு இல்லாமல் போய்விடுமா என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவரும் ஏன் மாநில அடையாளம் போதுமே இந்தியர் என்ற அடையாளம் என்று கூட சொல்லலாம்.

இருவரும் பார்ப்பனர்கள் என்பதால் மட்டும் இந்த கேள்வி எழவில்லை. அவர்களை யாரும் எந்த கேள்வியையும் கேட்கவும் இல்லை. அவர்களது தகுதி திறமை பற்றியும் யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. ஆனால் இங்கே உள்ள சில பத்திரிகைகள் அவர்களை தமிழர்கள் என்று எழுதும்போதுதான் அதை அவர்களே சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

நம்மூர் அக்கிரகாரத்தில் இருந்து பலரும் மும்பை, டெல்லி, கல்கத்தா என்று பறந்துபோய் வாழ்வதுபோல் அவர்கள் சென்றவர்கள். எங்கே பணி கிடைக்கிறதோ அதுவே அவர்களுக்கு சொந்த ஊர். அதுதான் அவர்களுக்கு ஜன்ம பூமி.

ஜெயசங்கர் காலத்தில் அவர் நினைத்தால் இப்போது இலங்கை தமிழர் பிரச்னையை தீர்க்க முடியும். முயற்சிகளை எடுப்பாரா? இனப்படுகொலைகளுக்கு தண்டனை வாங்கி தர வேண்டாம். பழைய பிரச்னைகளை கிளற வேண்டாம். இப்போது மிச்சமிருக்கும்  தமிழர்களுக்கு உலகமெங்கும் எல்லாருக்கும் கிடைக்கும் மனித உரிமைகளை பெற்றுக்கொடுத்தால் போதும். இலங்கை சிங்கள பேரின வாத அரசிடம் தமிழர்களுக்கு அரசியல்  தீர்வு பெற்றுத் தருவது புதிய அரசியல் சட்டம் இயற்றுவது பற்றி பேசத் தயாரா?

இப்போதுதான் பணிக்கு வந்திருக்கிறார்கள். காரியமாற்ற அவர்களுக்கு நியாயமான அவகாசம் தரத்தான் வேண்டும்.

நீங்கள் தமிழராக இருங்கள் அல்லது இந்தியராக மட்டும் இருங்கள் அது உங்கள் விருப்பம்.

                  நம் எல்லாருடைய விருப்பமும் நீங்கள் நியாயமாக பணி செய்து நீதி செய்ய வேண்டும் சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதுதான்.

மோடி அமைச்சரவையில் 8 மாநிலங்களுக்கு இடம் இல்லை?!

மோடி அமைச்சரவையில் எட்டு மாநிலங்களுக்கு இடம் தரப்படவில்லை.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. கர்நாடகம் பாஜகவுக்கு அதிக இடங்களை தந்து திராவிடம் பாஜகவை நிராகரித்தது என்று சொல்லவிடாமல் செய்துவிட்டது.

கேரளாவில் பாஜக வெல்லவில்லை என்றாலும் அதன் மாநில தலைவர் முரளிதரன் மகாராஷ்டிரா மாநில மாநிலங்களவை உறுப்பினர் ஆக இருக்கிறார் என்பதால் அவருக்கு மோடி தன் அமைச்சரவையில் இடம் தந்துவிட்டார்.

எனவே அவர் கேரளாவின் பிரதிநிதி என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்திற்கு இபிஎஸ் – ஒபிஎஸ் சண்டையால் இடம் கிடைக்காமல் போய்விட்டது.

நிர்மலா சீதாராமனையும் ஜெய்சங்கரையும் தமிழர்கள் என்று சில பத்திரிகைகள் எழுதுகின்றன. அவர்களே தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டதில்லை.    அவரகளை எப்படி தமிழ்நாட்டு பிரதிநிதிகளாக எடுத்துக்கொள்வது.?

ஆந்திராவில் ஒரு இடம் கூட கிடைக்காவிட்டாலும் யாருக்கும் மோடி  இடம் தராதது ஜகன் மோகன் ரெட்டி என்ற கிறிஸ்தவர் முதல்வர் ஆனது காரணமா என்பது தெரியவில்லை.

மணிப்பூர், சிக்கிம் மிசோரம், நாகாலாந்து, மேகாலய, திரிபுரா மாநிலங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

குறைகளை அமைச்சரவை விரிவாக்கம் போது மோடி சரி செய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மோடி அமைச்சரவையில் பார்ப்பன மேல்சாதிகளின் ஆதிக்கம் ??!!

பாஜக என்பது மேல்சாதி மற்றும் பார்ப்பனர்களின் கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

மற்ற எல்லாருக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில் இடம் கொடுக்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் அதிக அளவில் இடம் தந்திருக்கிறார்கள். அதுவும் கேபினட் அந்தஸ்தில். கேட்டால் நாங்கள் சாதி பார்ப்பதில்லை. தகுதி பார்த்துதான் இடம் கொடுப்போம் என்பார்கள்.

மற்றவர்களுக்கு தகுதி இல்லை என்று சொல்லாமல் சொல்வார்கள்.

58 பேர் கொண்ட அமைச்சரவையில் 32 பேர் பார்ப்பன மற்றும் மேல்சாதிகளை சேர்ந்தவர்கள். 13 பேர் இதர பிற்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். 

9 பார்ப்பனர்கள் – நிதின் கட்கரி, மகேந்திரா நாத் பாண்டே, பிரகலாத் ஜோஷி, பியுஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், ஹர்ஷ் வர்தன், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ரமேஷ் போக்ரியால்,பிரதாப் சந்திர சாரங்கி ( ஓடிசாவை சேர்ந்த இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தாயுடன் குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மலை வாழ் மக்களின் மேம்பாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்- ஸ்வயம் சேவகர் )

3 தாக்குர் இனத்தோர் – ராஜ்நாத் சிங், கஜேந்திர சிங் தாக்கூர், நரேந்திர சிங் தோமர்

13 இதர பிற்பட்டோர்

6 பட்டியல் வகுப்பை சேர்ந்தோர்

4 பட்டியல் இனத்தை சேர்ந்தோர்

2 சீக்கியர்கள் – ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் பூரி

1 முஸ்லிம் – முக்தர் அப்பாஸ் நக்வி

அதுவும் முக்கிய இலாகாக்களை பார்ப்பனர்களே எடுத்துக் கொள்வார்கள்.

இவர்கள் எல்லா சமுதாய மக்களின் எதிர்பார்ப்புக் களையும் பூர்த்தி செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்த ஆதிக்கம் குறைய  வாய்ப்பே இல்லை. இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். எல்லாவற்றையும் தாங்களே ஆக்கிரமித்துக் கொள்கிறோமே என்று கொஞ்சம்கூட வெட்கப்பட மாட்டார்கள். அதற்கு ஏதாவது சாக்கு சொல்லி சமாளிப்பார்கள.

சுட்டிக் காட்டுகிறவர்களை சாதிய வாதிகள் என்று முத்திரை குத்துவார்கள். சாதி பார்த்து அதிகாரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறவர்கள் மற்றவர்களை சாதியவாதிகள் என்று குற்றம் சுமத்துவது என்ன ஒரு  கொடுமை?

ஒபிஎஸ் மகன் அமைச்சராவதை தடுத்த இபிஎஸ் ??!!

மோதல் தொடங்கிவிட்டது. இது எதில் கொண்டு போய்விடும் என்பதை குறுகிய காலத்திலேயே காணலாம்.

மோடி அமைச்சரவை பதவி ஏற்கும் அன்று மதியம் அமைச்சராகும் வாய்ப்புள்ளவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு சென்றது. அந்த அழைப்பு ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கும் சென்றது என்பதை ஆங்கில ஊடகங்கள் செய்தியாக வெளியிட ஆரம்பித்தன.

ஒரத்தநாடு வைத்திலிங்கத்திற்கு அழைப்பு செல்லவில்லை என்றதும் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றால் கட்சி துண்டு துண்டாக சிதறிவிடும் என்று வைத்திலிங்கம் எச்சரித்ததாக செய்திகள் வெளியாயின.

சீனியர்கள் பலர் ராஜ்ய சபாவில் உறுப்பினர்களாக இருக்கையில் நேற்று எம்பி ஆன ரவீந்திர நாத்துக்கு அமைச்சர் பதவி கொடுப்பதை கட்சியில் எதிர்க்க ஆரம்பித்தனர்.

இபிஎஸ் தன் சகாக்கள் உடன் டெல்லி பயணமானார். எவர் முகத்திலும் சிரிப்பில்லை.

மோடிக்கு பின்னர் அமைச்சர்கள் பதவி ஏற்பு நடந்து கொண்டிருந்தபோது ரவீந்திரநாத் அழைக்கப்படும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. காரணம் முதல்வர் இபிஎஸ் கொடுத்தால் இருவருக்கும் கொடுங்கள் இல்லாவிட்டால் ஒருவருக்கும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார் என்பதுதான். பாஜகவும் உறுதியாக ஒருவருக்குத்தான் அமைச்சர் பொறுப்பு அவர் யார் என்பதை நீங்களே முடிவெடுங்கள் என்றபோது இபிஎஸ் உறுதியாக ஒருவருக்கு மட்டும் என்றால் வேண்டாம் என்று சொன்னாராம்.  முடிந்தது ஒபிஎஸ்சின் கனவு. நூறு கோடி செலவு செய்து வெற்றி பெற்று மோடியிடம் அமைச்சர் பொறுப்புக்கு வாரனாசி சென்று வேண்டுகோள் வைத்தது எல்லாம்  வீணாயிற்று.

எல்லா சீனியர் அமைச்சர்களும் ஒபிஎஸ் மகனுக்கு எதிராக இருந்ததுதான் வேடிக்கை.

எல்லாரும் சென்னை திரும்பி விட இவர் மட்டும் டெல்லியில் தங்கி தன் வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இனி அடுத்த விரிவாக்கம் எப்போது நடந்தாலும் ரவீந்திரநாத் சேர்க்கப்படும் வாய்ப்பு அதிகம் என்றாலும் அதன் தாக்கம் கட்சியில் நிச்சயம் வெடிக்கும் என்பதும் உறுதியானது.

எப்படியோ இவர்கள் சண்டையில் ஒரு அமைச்சரையாவது பெரும் வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டிருக்கிறது.

9.19 டிஎம்சி தண்ணீரை திறந்து காவிரி ஆணைய உத்தரவை அமுல்படுத்துமா கர்நாடகா?!

காலதாமதம் ஆனாலும் ஒரு வழியாக காவிரி ஆணைய கூட்டம் நடந்தது டெல்லியில்.

தீர்ப்பின் படி பெங்களூரில் ஒழுங்காற்றுக் குழுத் கூட்டம் நடந்து அங்கு மாநிலத்தில் உள்ள அணைகளின் தண்ணீர் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்த புள்ளி விபரங்களுடன் தான் காவிரி ஆணைய கூட்டம் நடத்தப் பட்டிக்க வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு முறையும் தண்ணீர் விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதெல்லம் தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறி  தண்ணீர் விட மறுத்தது கர்நாடகம்.

நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கும் வேலையை கர்நாடகம் செய்து வந்தது. இப்போதும் அதே வேலையை செய்யக் கூடாதல்லவா?

மேகதாது அணை தொடர்பாக தனது ஆட்சேபணையை தமிழகம் தெரிவித்த பிறகும் எதற்காக கூட்ட நிரலில் அது இடம் பெற்றது?

ஆய்வு செய்து திட்ட அறிக்கை அளிக்க அனுமதி அளித்த சுற்று சூழல் அமைச்சரகம் தனது எல்லையை மீறி செயல்பட்டது.

இந்த கூட்டத்தில் அது விவாதிக்க படவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அது மீண்டும் எடுக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

தண்ணீர் திறக்க உத்தரவிட்ட ஆணைய தலைவர் மசூத் உசைன் இந்த முடிவு கர்நாடக அரசின் ஒப்புதலோடு வெளியிடப்படுவதாக கூறினார்.

ஆனால் கர்நாடக சிறிய நீர்ப்பாசன அமைச்சர் புட்டராஜு கர்நாடக அணைகளுக்கு நீர் வந்தால் தமிழகத்திற்கு நீர் திறப்போம் என்று பேட்டி கொடுக்கிறார். அதுவும் ஆணையம் நீர் திறக்க உத்தரவிட்டு இருப்பது சரியல்ல என்றும் கூறுகிறார்.

நீர்ப்பாசன அமைச்சர் டிகே சிவகுமார் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த பிரச்னையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறார்.

ஆணையத்தின் உத்தரவை மதிக்கும் வகையில் கர்நாடக அமைச்சர்களின் பேச்சுகள் இல்லை.

ஏற்கெனெவே சேலத்தில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. மேட்டூர் அணையை பெரிதும் நம்பியிருக்கும் சேலம் மக்கள் கர்நாடக அரசின் போக்கால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

அணை இருப்பு விபரம் தெளிவாகவும் ஒளிவு மறைவு இல்லாமலும் இருந்தால் பிரச்னை பெரிது ஆகாது. அணைகளுக்கு வர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் ஏரி குளங்களிலும் தடுப்பணை கட்டியும் சேமித்து வைத்து விட்டு அணைகளில் தண்ணீர் இல்லை  என்று நாடகம் ஆட அனுமதிக்க முடியாது.

                      தீர்ப்பின் படி தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீர் கடந்த மாதங்களில் வரவில்லை என்பதை ஏன் தமிழக அரசு ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தவில்லை? 

தீர்ப்பு வந்தால் மட்டும் போதாது. அது உண்மையாகவே அமுல்படுத்தப்படவும் வேண்டும்.

தமிழ்நாடு கேரளத்தில் முடங்கிப் போன கம்யுனிஸ்டுகள் ?!

அகில இந்திய கட்சி என்ற அந்தஸ்தை கம்யுனிஸ்டு கட்சிகள் இழக்கின்றன.

மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் ஆட்சியில் இருந்தவரை அகில இந்திய கட்சி என்று கருதப்பட்டார்கள்.

ஆட்சியில் இல்லாமல் கூட ஒரு கட்சி உயிர்த் துடிப்புடன் இயங்க முடியும். அத்தகைய கொள்கை பலம் உள்ளவர்கள் கம்யுனிஸ்டுகள். அவர்கள் வலது இடது என்று பிரிந்து கிடப்பதே ஒரு பெரிய முரண்.

ரஷ்ய ஆதரவாளர்களாகவும் சீன ஆதரவாளர்களாகவும் காட்டிக் கொண்டவர்கள் அந்த இரண்டு நாடுகளுமே தனியார் சொத்துரிமையை அங்கீகரித்து பொது உடைமை கொள்கையை நீர்த்துப் போக செய்து விட்டபின் இவர்கள் இன்னமும் பிரிந்து கிடப்பது எதற்காக?

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியை தவிர வேறு கட்சி செயல் பட முடியாத நிலை உள்ளது. அது ஒன்றே கம்யுனிஸ்டுகளுக்கு ஆறுதல்.

இந்தியாவில் மார்க்சிஸ்டு கட்சிக்கு கேரளாவில் ஒருவரும் தமிழ்நாட்டில் இரண்டு  பேரும் இந்திய கம்யுனிஸ்டு கட்சிக்கு தமிழ்நாட்டில் இரண்டு பேரும் ஆக மொத்தம் ஐந்து உறுப்பினர்கள் தான் கம்யுனிஸ்டுகளின் பிரதிநிதிகள்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதனால் நான்கு பேர் கிடைத்தார்கள்.

மேற்கு வங்காளத்திலும் திரிபுரவிலும் இரு இடத்தை கூட இவர்களால் பெற்ற முடியவில்லை.

அரசியலில் சாதி மத ஆதிக்கத்தை கட்டுக்குள் வைக்க கம்யுனிஸ்டுகள் அவசியம் தேவை.

கம்யுனிஸ்டுகள் செல்வாக்கு இழப்பது என்பது அவர்களுக்கான இழப்பல்ல. நாட்டுக்குத்தான் இழப்பு. 

இனி ரெயில்வே பணிகளுக்கு வட மாநிலங்களில் இருந்து விண்ணப்பிக்க முடியாது??!!

ரெயில்வே பணிகளுக்கு ஆட்கள் எடுக்கும் போது வடமாநிலத்தவர் தென்னக மாநிலங்களை ஆக்கிரமித்து விடுகிறார்கள் என்பது சில ஆண்டுகளாக இருக்கும் கொதிப்படைய வைக்கும் புகார்.

பொதுமேடை முன்பே இதுபற்றி எழுதியிருக்கிறது.

தமிழ் தெரியாததால் ரெயில்வே ஸ்டேஷனில் பச்சைக் கொடி காட்ட வேண்டிய கார்டு தவறாக காட்டியதால் இரண்டு ரயில்கள் மோதிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது. அதனால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. எனவே தமிழகத்தில் பணி செய்ய தமிழ் மொழி அறிவு தேவை என அறியப்பட்டது. ஆனால் ரெயில்வேயில் உள்ளவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்றால் முழுதாக இந்திக்காரர்கள் இருந்தால் மொழிப் பிரச்னை வராதல்லவா என்று தமிழர்களை ஒழித்துக்கட்டும் வேலையில் தீவிரம் காட்டினார்கள்.

மோசடி இல்லையென்றால் ஹரியானாவில் உள்ளவன் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பை பெற்றிருப்பானா? தேர்ச்சி என்பது கண் துடைப்பு என்று தெரிகிறது அல்லவா? 

கண்டனம் எழுந்த பிறகு இப்போது பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் 510 அப்ரண்டிஸ் பணிக்கான பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தமிழ் நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு பதிவு அலுவலங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வரவேற்கத் தக்கது என்றாலும் இதிலும் ஏதாகிலும் சூழ்ச்சி இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.

                        தமிழகத்தில் வட மாநிலத்தவர் முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருப்பதற்கு வாய்ப்பு குறைவு என்பதை மறுக்க முடியாது. 

ஏன் அதற்கு நேரிடையாக தமிழகத்தில் குடி இருப்போர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தால் என்ன?

தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை செல்லாதது ஆக்க தமிழ் தெரியும் என்று சான்றிதழ் போலியாக பெறுபவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்?

ரெயில்வே துறை மட்டுமல்ல தமிழகத்தில் செயல்படும் எந்த மத்திய அரசு அலுவலகமாக இருந்தாலும் உள்ளூர் மக்களுக்கு வேலையில் முன்னுரிமை என்பதே சட்டமாக இருக்க வேண்டும். அதற்கு உருவகம் கொடுக்க முனைவதே நல்லது.

கண்டனங்களை தவிர்க்கும் முயற்சியாக இல்லாமல் உண்மையாகவே அமுல்படுத்தினால் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது.

யூதர்கள் குல்லா அணியக் கூடாது என அறிவுறுத்திய ஆணையர்??!!

மதம் எப்படி எல்லாம் மனிதர்களை பிரித்து வைக்கிறது என்பதற்கு ஜெர்மனியில் நடக்கும் சம்பவங்கள் சமீபகால உதாரணம்.

ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களை கொன்று ஒழித்தான் என்று படித்திருக்கிறோம். ஆனால் இன்றும் அதேநிலை நீடிக்கிறது என்பது வரலாற்றில் இருந்து ஜெர்மானியர்கள் எதையுமே படிக்கவில்லை என்பதைத்தானே காட்டுகிறது.

சமீப காலமாக யூதர்கள் தாக்கப்படுவது இருபது சதம் அதிகரித்திருக்கிறதாம். அதை தடுப்பதற்கு என்று ஒரு ஆணையர் வேறு நியமிக்கப்படுகிறார்.

அவரே யூதர்கள் ஸ்கல் காப் எனப்படும் குல்லா அணிவதை யூதர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

ஐரோப்பியாவில் இந்த அளவு சகிப்பு தன்மை இல்லை என்பது ஹிட்லர் காலத்திலேயே நிருபிக்கப்பட்டதுதான். காலம் அவர்களை மாற்றவில்லையே .

மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே இறுதி முடிவாக இருக்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கைக்கும் மதத்துக்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் உணரவேண்டும் அல்லது உணர வைக்கப்பட வேண்டும்.

இல்லாவிடில் இப்படித்தான் மதம் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும்.

இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் என தீர்ப்பு எழுதிய உயர் நீதிமன்ற நீதிபதி??!

ராணுவப் பணியில் சேர தேர்வான ஒருவருக்கு  குடியுரிமை சான்று தர மறுத்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் ஆர் சென் என்பவர் இந்தியாவை பாகப்பிரிவினைக்குப் பிறகு இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் என்று  10.12.2018ல் ஒரு தீர்ப்பை எழுதியிருக்கிறார்.

மேலும் தனது தீர்ப்பில் அவர் கூறியிருந்தது “இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது லட்சக் கணக்கானவர்கள் சீக்கியர்களும் இந்துக்களும் கொல்லப்பட்டு  சித்திரவதை செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு மூதாதையர் விட்டு சென்ற சொத்துக்களை எல்லாம் விட்டு விட்டு உயிர் பிழைப்பதற்காக ஓடி வர நேரிட்டது. பாகிஸ்தான் தன்னை முஸ்லிம் நாடு என்று அறிவித்துக் கொண்டது. அப்போதே இந்தியா தன்னை இந்து நாடாக அறிவித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்”

மேலும் ‘இனி எதிர்காலத்திலும் பங்களா தேஷ் போன்ற நாடுகளில் இருந்து ஓடி வரும் எல்லாருக்கும் இந்திய குடியுரிமை தர எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும்” என்றும் தீர்ப்பு எழுதியிருக்கிறார்.

அரசியல் சட்டம் தெரிந்தவர் ஒருவர் இப்படி ஒரு தீர்ப்பை எழுதியிருக்க முடியாது.  அதேநேரம் நீதிபதி சென் அரசியல் சட்டம் தெரியாதவர் என்று சொல்ல முடியாது.    ஆக இது செல்லாத தீர்ப்பு என்று தெரிந்தோ தெரியாமலோ அந்த தீர்ப்பை எழுதிவிட்டார்.

இப்போது மேன்முறைஈட்டில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ‘இந்த தீர்ப்பு  செல்லத்தக்கதல்ல. அரசியல் சட்டத்திற்கு முரணாக இந்த தீர்ப்பு இருப்பதால்  சட்டத்தின் முன் இது இல்லா நிலையது ஆகும். எனவே ரத்து செய்கிறோம்’ என்று தீர்ப்பு தந்திருக்கிறார்கள்.

சட்டம் படித்த நீதிபதிகள் அரசியலை மனதில் கொண்டு அல்லது தங்களுக்கு இருக்கும் அரசியல் விருப்பங்களை முன்னிறுத்தி இது போன்ற தீர்ப்புகளை எழுதினால் நாட்டில் நீதித்துறை மீது எப்படி நம்பிக்கை வரும்?

நீதித்துறையில் அரசியல் சார்புள்ளவர்கள் ஊடுருவி இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த தீர்ப்பே சாட்சி.