Home Blog Page 20

பாஜக வளர தோள் கொடுக்க தயாரான ஜி கே வாசன்?

பிறந்தது காங்கிரஸ் பாரம்பரியம். அரசியல் செய்வது இன்னும் காங்கிரஸ் பெயரில். ஆனால் சோனியா ராகுல் இருவரும் ஒத்துப் போகாத நிலையில் தனி ஆவர்த்தனம் செய்து வந்த ஜி கே வாசன் வேறு வழியின்றி கடைசியில் பாஜகவில் ஐக்கியம் ஆவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன.

மாநிலத் தலைவர் பதவிக்காக தன் கட்சியை பாஜகவில் இணைத்து தற்கொலை செய்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால் பதவி ஆசை அரசியல்வாதிகளை எப்படியும் ஆட்டுவிக்கும் என்பதால் வாசன் எந்த முடிவுக்கும் தயாராகத்தான் இருப்பார். இனியும் செலவு செய்து கொண்டிருக்க  முடியாது அல்லவா?

சென்னையில் பிரதமர் மோடி வாசனை தன் வீட்டுக்கு அழைத்த போதே தெரிந்து விட்டது. ஆபரேஷன் ஆரம்பித்து விட்டது என்று.

இன்று டெல்லியில் வாசன் மோடியை சந்திக்க சென்றிக்கிறார். ஏதாவது ஒரு முடிவோடுதான் சென்றிருக்க வேண்டும். ஒன்றுமில்லாமல் செல்ல மாட்டார் அல்லவா?

அதிமுக கொடுக்கும் சலுகைகளை விட மத்தியில்  உத்தரவாதமாக இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும் பாஜக நிச்சயம் அதிகமாக சலுகைகள் வழங்க வாய்ப்புகள் அதிகம்.

இதை வாசன் தவற விட மாட்டார்.

இன்னும் எத்தனை துரோகங்கள் நடந்தாலும் பாஜகவுக்கு  தமிழ் மக்கள் ஆதரவு அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது.

ஏன் அதிமுகவிலும் கூட பிளவுகள் வெடிக்கலாம். எல்லாருமா அடிமைகள் ஆகிட ஒப்புக் கொள்வார்கள்?

இன்னும் ஆறு மாதங்களில் இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறதோ பாஜக?

பிற மாநிலத்தவர் மேகாலயாவில் பதிவு செய்யாமல் நுழைய தடை ??!!

மத ரீதியாக தாக்குதலுக்கு ஆளானவர்கள் இந்தியாவில் நுழைந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

அந்த முயற்சியை எதிர்க்கும் முதல் அரசாக பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து விட்டது.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிற மாநிலத்தவர் நுழைய அனுமதிக்கும் இன்னர் லைன் பெர்மிட் முறை அருணாச்சல், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் அமுலில் உள்ளது. பெர்மிட்டை மத்திய அரசு வழங்கும். அந்த உரிமையை மேகாலயாவில் மாநில அரசு வழங்கும்.

ஆட்சியில் இருப்பதற்காக பாஜக எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் என்பதற்கு  சாட்சியாக மேகாலயா கூட்டணி அரசின் இந்த முடிவு அமைந்திருக்கிறது.

பிற மாநிலத்தவர் நுழைவு  தங்களுக்கு ஆபத்து என்று கருதும் மாநிலங்கள் இதே முறையை பின்பற்றத் துவங்கும் என்பதற்கு இது முன்னோட்டமா?! 

பிற மாநிலத்தவர் ஆதிக்கம்  அதிகரித்து விட்டது என்று குமுறும் சிவசேனா இதே முறையை பின்பற்ற முனையுமோ?

மராட்டியர் ஆதிக்கம் அதிகம் என்று கர்நாடகம் தடுக்க முனையுமோ?

எதிர்காலம் தான் பதில் அளிக்க வேண்டும்!!!

விஜய் சேதுபதிக்கு எதிரான அர்த்தமற்ற போராட்டம்?

மொத்த விற்பனை செய்யும் பெரு நிறுவனம் மண்டி. அவர்கள் மளிகை பொருட்களை ஆன் லைனில் மொத்த விற்பனை செய்கிறார்கள்.

மொத்த விற்பனையை ஆன்லைனில் விற்பனை செய்வதை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அதில் அர்த்தம் உள்ளது. அதனால் சிறு குறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

21 லட்சம் வணிக குடும்பங்கள் தொழிலாளர்கள் வாழ்வு பெரிதும் பாதிக்கப்படும் என்றால் போராட்டம் நடத்தி ஆக வேண்டும் என்பதிலும் மாறுபட்ட கருத்து இல்லை.

ஆனால் அந்த பெரு நிறுவனம் தனது தொழிலை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஒரு நடவடிக்கை எடுத்து அதில் நடிகர் விஜய் சேதுபதியை பயன்படுத்தி இருக்கும்போது நீ ஏன் அதில் நடித்தாய் என்று கேட்டு அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்து வணிகர் சங்கம் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

காவல்துறைக்குத் தான் வேலை கொடுத்திருக்கிறார்கள். இதனால் அந்த நிறுவனம் தன் தொழிலை நிறுத்தி விடப்போகிறார்களா?

ஆன்லைனில் வணிகம் நடத்த அனுமதி வழங்கிய ஆட்சியாளர்களை சந்தித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வழி வகை காணாமல் இடையில் விளம்பரத்தில் வந்து போகிற நடிகருக்கு எதிராக போராட்டம் நடத்தி தங்கள் சக்தியை வணிகர்கள் வீணாக்க வேண்டாம்.

இன்று வீடு தேடி உணவு வழங்கும் ச்விக்கி உபேர் போன்ற வியாபாரிகளால் தங்கள் வணிகம் பாதிக்கப்படுகிறது என்று ஓட்டல்காரர்கள் எல்லாம் புலம்புகிறார்கள். அந்த வணிகத்தை தடை செய்ய முடியுமா?

பல ஓட்டல்கள் வியாபாரம் இன்றி மூடப்பட்டு வருகின்றன.

நவீன கால டிஜிட்டல் வணிகம் பாரம்பரிய நிறுவனங்களை புரட்டி போட்டு வருகிறது. அவைகளை சமாளிக்க புதிய உத்திகளை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

ஒரு விளம்பரத்தை நிறுத்தினால் வணிகம் நின்று விடும் என்ற நிலைமை இல்லையே? இவர் இல்லாவிட்டால் இன்னொருவர் தோன்றப் போகிறார். உங்களுக்கு பிரச்னை விஜய் செதுபதியா? ஆன்லைன் வர்த்தகமா? 

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து போராடுங்கள். விஜய்சேதுபதியை விட்டுவிடுங்கள்.

கோவில் இருப்பதால் இந்துவாகி விடுவாரா வள்ளுவர்?!

மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு 1935ல் கோவில் உருவானதாக அங்கிருக்கும் கல்வெட்டு சொல்கிறது.

27/04/1973ல் முதல் அமைச்சர் கருணாநிதி கோவில் திருப்பணியை தொடங்கி வைத்திருக்கிறார். நெடுஞ்செழியன், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க குன்றக்குடி அடிகள் தலைமையில் திருப்பணி குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதெல்லாம் கல்வெட்டு விபரங்கள்.

திருவள்ளுவர்-வாசுகி சிலைகள் இருந்தாலும் கூடவே ஏகாம்பரேசுவரர் உடனுறை காமாட்சி அம்மன் கருமாரி அம்மன், நவக்ரகம், சனீஸ்வரர் சந்நிதிகளும் இருக்கின்றன.

இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த கோவிலுக்கு குருக்கள் நியமிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் தெரியும் உண்மை என்ன?

கலைஞர் ஏமாந்தாரா? வள்ளுவரை இந்து என்று ஒப்புக் கொண்டாரா?

வள்ளுவரை யார் எப்படி போற்றினாலும் திருக்குறளை யாரும் மாற்ற முடியாதல்லவா?

உலகப் பொதுமறை என்று எல்லாரும் ஒப்புக் கொள்ளும் திருக்குறள் எல்லா மதத்தினருக்கும் பொதுவானது.

வள்ளுவம் பார்ப்பனீயத்திற்கு எதிரானது என்பதால் அதை கபளீகரம் செய்ய பார்பனீயம் செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான் இந்த கோவில் விவகாரமும்.

எதை பார்ப்பனீயம் விழுங்கவில்லை.?

உலகம் முழுதும் பரவியிருக்கும் பௌத்தம், தான் பிறந்த இந்தியாவில் செல்வாக்கற்றுப் போனதற்கு பார்ப்பனீயம் செய்த தந்திரங்கள்தான் காரணம்.

பார்ப்பநீயத்திற்கு இரையான மதங்கள் ஜைனம், சீக்கியம் என்றும் சொல்லலாம்.    தன்னை ஏற்றுக் கொள்ளாத தத்துவத்தை உறவாடி அழிப்பதே பார்ப்பனீயத்தின் இயல்பு.

அந்த வகையில் உருவானதுதான் இந்த வள்ளுவர் கோவில் பிரச்னையும். தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் தமிழகம்  முழுதும் வள்ளுவர் கோவில்கள் பரவி இருக்குமே? அவர்கள் உண்மை அறிவார்கள்.

பார்ப்பனர்கள் வள்ளுவரை தனதாக்கிக் கொள்ள செய்த சூழ்ச்சிகள் ஆயிரம். அவைகள் ஏன் எடுபடவில்லை என்றால் அவர்களுக்கு உண்மையில் அதில் ஈடுபாடு இல்லை. நாடகத்துக்கு ஒரு கோவில் கட்டினால் அதை உண்மையாக பரப்ப அவனுக்கு என்ன பைத்தியமா ?

அது மட்டுமல்ல. முன்னோர்களை நடுகல் நாட்டி வழிபடுவது தமிழர் மரபு. அந்த வகையில் கூட வள்ளுவருக்கு கோவில் அமைந்ததாக கொள்ளலாம். 

இந்த ஒன்றை சான்றாக காட்டி வள்ளுவரை இந்துவாக மத மாற்றம் செய்யும் சங்கப் பரிவாரங்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி அடையப் போவதில்லை.

வள்ளுவர் பற்றி உளறிக் கொட்டிய அமைச்சர் பாண்டியராஜன்?

திருவள்ளுவர் படத்துக்கு காவி பூசிய பாஜகவின் செயலுக்கு எல்லாத் தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் இது பற்றிய தனது கண்டனத்தை தெரிவித்த அதே வேலையில் இன்று நிருபர்களை ச்ந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் திருவள்ளுவர் பற்றி தனது அறியாமையை அள்ளித் தெளித்தார்.

“திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பில்லை. அவர் எந்த சமயத்தவர் என்பதற்கும் ஆதாரம் இல்லை. அவர் சைவராக இருக்கலாம். வைணவராக இருக்கலாம். எனவே அவருக்கு திருநீறு பூசுவதில் தவறு இல்லை. விரும்பினால் கிறிஸ்தவர்கள் அவருக்கு சிலுவை கூட போட்டுக் கொள்ளட்டும்.” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

அமைச்சர் உதகுமாரும் கூட இருக்கிறார். அவர் ஏதும் சொல்லவில்லை.

திருவ்ள்ளுவர் காலம் கிறிஸ்துவுக்கு 31 ஆண்டு முந்தையது என்று ஒப்புக் கொண்டு  தமிழக அரசு காலண்டர் வெளியிடுகிறது. அது கூடவா பாண்டியராஜனுக்கு தெரியாது.?

ஏன் இப்படி வைகைச்செல்வனும் பாண்டியராஜனும் முரண்பட்டு கருத்துக்கள் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் இதில் பாஜக சம்பத்தப்பட்டிருக்கிறது. அவர்களை பகைத்துக்கொள்ள பாண்டியராஜன் விரும்பவில்லை.

இனிதான் வள்ளுவர் எந்த மதம்  என்று ஆராய வேண்டும் என்கிறார் பாண்டியராஜன்.

இப்போதுதான் கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பாக நிதி ஒதுக்கி அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்த வகையில் கொஞ்சம் நல்ல பெயர் எடுத்திருந்தார் பாண்டியராஜன். அதற்குள் ஏன் இப்படி கெடுத்துக் கொள்ள வேண்டும்?

பழைய பாசத்தை எல்லாம் பாண்டியராஜன் விட்டு விட வேண்டும்.

திருவள்ளுவர் சிலைக்கு பிள்ளையார்பட்டியில் கயவர்கள் அவமதிப்பு?

திருவள்ளுவர் சிலைக்கு பிள்ளையார்பட்டியில் அதிகாலை நேரத்தில் சில கயவர்கள் சாணத்தை வீசி அவமரியாதை செய்திருக்கிறார்கள்.

எல்லாரும் கண்டனக் குரல் எழுப்பி விட்டார்கள். கட்சி மாச்சரியங்களை கடந்து எதிர்ப்புக் குரல் வலுத்த நிலையில் அதிமுக மட்டும் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வனை விட்டு கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

கட்சி சார்பில் அதிமுக கண்டனம் தெரிவித்து இருக்கிறது என்றாலும் ஆட்சியாளர்கள் தரப்பில் அரசு சார்பில் என்ன நடவடிக்கை என்று விளக்கம் தர வேண்டாமா?

திருவள்ளுவர் உருவப் படத்திற்கு பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் காவி உடை உடுத்தி விபூதி பூசி அவமரியாதை செய்ததை அனைவரும் கண்டித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை என்றால் இதற்குப் பின்னால் காவி சக்திகள் இருக்கின்றனவா என்ற கேள்வி இயல்பாக எழத்தானே செய்யும். இதை தெளிவு  படுத்த வேண்டிய நிலையில்  இருப்பது காவல் துறை.

சிலைகளை அவமரியாதை செய்யும் முட்டாள்தனம் பெரியார், அம்பேத்கார், தேவர்  அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கும் அவ்வப்போது நிகழ்வது வழக்கம்.

இப்படி செய்வதனால் அவர்களின் புகழ் ஓங்குமே தவிர மங்காது.

இப்போது டிஜிபி சிலையை அவமதித்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். அவர்கள் மீது நான்கு பிரிவுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் குற்றவாளிகளின் சிசிடிவி காட்சிகள் கிடைத்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். எனவே குற்றவாளிகள் பிடிபடுவது உறுதி.

உண்மை வெளிவரும் என நம்புகிறோம்.

அமித்ஷாவை மாட்டிவிட்ட எடியூரப்பா??!!

அமித்ஷாவை மாட்டிவிட்ட எடியூரப்பா??!!

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்த மத சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்து குமாரசாமியை வீட்டுக்கு அனுப்ப எடியூரப்பா தீட்டிய திட்டம் கட்சி தாவல் தடை சட்டத்தை கேலிக்குரியதாக்கியதுதான்.

17 உறுப்பினர்கள் கட்சி மாறினால்தானே தகுதி இழப்பு ?

அந்த 17 பேரையும் ராஜினாமா செய்ய வைத்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டு அவர்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்த்தார் எடியூரப்பா.

அவர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்தார்கள். எங்களுக்கு எதுவும் பங்கில்லை  என்று அன்று சொன்னார் எடியூரப்பா.

இன்று ஆட்சிக்கு வந்த பிறகு கட்சி மாறிய அவர்களுக்கு தேர்தலில் போட்டி போட வாய்ப்பு கொடுக்க நினைத்த அவருக்கு உட்கட்சியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக ;உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘தியாகம் செய்த அவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்க வில்லை என்றால் நான்  குற்றம் செய்தவன் ஆகி விடுவேன். எனது முயற்சியாலும் பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா வழி காட்டுதல் படியும்தான் இந்த 17 பேரும் ராஜினாமா செய்தார்கள். மும்பை ரிசார்ட்டில் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்கும் வகையில் பாஜக பிரமுகர்கள் நடந்து  கொள்ள வேண்டும்.” என்று எடியூரப்ப பேசிய பேச்சு சமூக வலை  தளத்தில் வீடியோ ஆடியோ வெளியாகி அதை எதிர்கட்சிகள் பிரச்னை ஆக்கி அவரது ராஜினாமாவை கோரியுள்ளார்கள்.

இனி இது நீதிமன்றம் செல்லும். அமித் ஷாவுக்கு தலைவலி கொடுக்கும். எடியூரப்பா மறுப்பார். ஆனால் சோதனையில் உண்மையா பொய்யா என்று தெரிந்து விடுமே?

இடைத்தேர்தலில் இந்த பேச்சு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆட்சியை பிடிக்கவும் கலைக்கவும் பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு கர்நாடகாவில் அது கடைப்பிடித்த மலிவான தத்திரங்கள் சாட்சி சொல்லி நிற்கும்.

வள்ளுவருக்கு காவி பூசிய களவாணிகள் தண்டிக்கப்பட வேண்டும்?

வள்ளுவருக்கு காவி பூசிய களவாணிகள் தண்டிக்கப்பட வேண்டும்?

திருவள்ளுவர் தந்த திருக்குறள் உலகப் பொதுமறையாக கொண்டாடப்படுகிறது.

எம்மதமும் சாராத இறைக்கொள்கையே வள்ளுவம்.

இதில் இதுவரை எந்த குழப்பமும் ஏற்பட்டதில்லை.

ஆனால் பார்ப்பனர்கள் சிலர் வள்ளுவர் அந்தணர் மரபில் வந்தவர் என்று கட்டுக் கதைகளை பரப்ப முயன்றனர். எடுபடாத முயற்சியாகி விட்டது. இன்று பிரதமர் மோடி வள்ளுவரை புகழ்கிறார். திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார். ஏன் என்று எங்களுக்கு தெரியாதா?

உண்மையையும் உள்நோக்கத்தையும் பாகுபடுத்தி பார்க்கத் தெரியாதவர்களா தமிழர்கள்.

தாய்லாந்து சென்று அங்கு திருக்குறளின் தாய் மொழி ஆக்கத்தை வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி.

அதைப் பாராட்ட முனைவதற்குள் இங்குள்ள பாஜகவினர் தங்கள் வலை தளத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை போட்டு நெற்றியிலும் கையிலும் திருநீறு பூசி அவரை சைவ சமயத்தை சார்ந்தவர் போல சித்தரிக்க முற்பட்டிருப்பது கடைந்தெடுத்த ஏமாற்று வேலை.

திருவள்ளுவரை அவமதித்திருக்கிறார்கள். குற்றம் இழைத்திருக்கிறார்கள். நீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.

பொறுப்புள்ளவர்களாக இருந்தால் அவர்களாகவே முன்வந்து இந்த தவறான படத்தை உடனே நீக்க வேண்டும்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறதே மாநில அரசு ?

பல கட்சிகளும் இந்த செயலை கண்டித்து அறிக்கை விடுத்திருக்கிறார்கள். அரசு விழித்துக் கொள்ளுமா?

வெந்த புண்ணில் வேல பாய்ச்சுவதுபோல் சனாதன தர்மத்தை தான் வள்ளுவர் அறம் பொருள் இன்பம் என்று எழுதியிருக்கிறார் என்று ஒருவர் விளக்கம் சொல்கிறார்.

கடவுள் வாழ்த்தில் வள்ளுவர் சொன்ன ‘வாலறிவன் நற்றாள்‘ சொல்லாடலை சுட்டிக்  காட்டி பாஜக வாதிடுகிறது.

முக ஸ்டாலின் யாகாவாரினும் நாகாக்க குறளை பிழையில்ல்மல் சொல்லி விட்டால் மேற்படி பதிவை நீக்கி விடுகிறோம் என்று பாஜக டிவிட்டர் கூறுகிறது. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் உள்ள பிரச்னையை தீர்க்க திருவள்ளுவர் ஏன் பந்தாடப்பட வேண்டும்?

வள்ளுவர் நாத்திகர் என்று எப்போது யார் சொன்னார்கள்? பார்ப்பனீயத்தை ஏற்றுக் கொள்ளாத ஓரிறை கோட்பாட்டை வள்ளுவம் ஏற்றுக் கொள்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவம் எப்படி பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் சனாதனத்தை ஏற்றுக் கொள்ளும்.?

சென்னை போலிஸ் ரசீதில் இந்தி புகுந்தது?

சென்னை போலிஸ் ரசீதில் இந்தி புகுந்தது?

அமித் ஷா இந்தியாவின் மொழி இந்தி என்று  என்று கூறினாரோ அப்போதே தெரிந்து விட்டது.

இனி எல்லா துறைகளிலும் இந்தி புகுந்துவிடும் என்று.

அச்சப்பட்டதைப்போலவே நடந்து வருகிறது.

சென்னை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்து அளிக்கப்படும் ரசீதுகளில் இதுவரை ஆங்கிலம் மட்டுமே இருந்து வந்தது. இப்போது இந்தி புகுத்தப்பட்டு இந்தியும் ஆங்கிலமும் கொண்ட ரசீதுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

கேட்டால் இவைகளை தேசிய தகவல் மையம் வடிவமைப்பதால் எங்களால் தடுக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

இந்தியை எல்லாவகையிலும் புகுத்துவதும் எதிர்ப்பு கிளம்பினால் ஏதாவது விளக்கம் சொல்லி முயற்சியை வேறு வகையில் தொடர்வதும் பாஜக அரசின் மொழிவெறி தொடர் கதையாகி வருகிறது.

தமிழ்நாட்டில் தரப்படும் ரசீதுகளை கூடவா மத்திய அரசு வடிவமைக்க வேண்டும்?

கண்டும் காணமல் இருக்கும் படி தமிழக அரசை மத்திய அரசு கட்டுப் படுத்துகிறது என்றுதான் மக்கள் எண்ணுவார்கள்.

இதுபற்றி தமிழக அரசுதான் நடவடிக்கை எடுத்து  தமிழ்நாட்டில் நமது நலனை பாதுகாக்க வேண்டும். 

தொடர்ந்து வரும் இந்தித் தாக்குதல்கள் இனிமேலாவது தடுக்கும் வழிகளை ஆராய்ந்து அறிவாயுதம் ஏந்தி தடுக்க முனைவோம்.

ஆங்கிலத்தில் ரசீதுகள் இருக்கும்போது ஆங்கிலேயன் நம்மை ஆளுகிறான் என்ற உணர்வு வராது. ஏனென்றால் ஆங்கிலேயன் ஆட்சி இங்கே இல்லை.

உண்மையில் அவன் தந்த மொழிதான் இந்தியாவை இதுவரை ஒற்றுமையாக கட்டுக்குள் வைத்திருக்கிறது.

ஆனால் இந்தியைப் பார்க்கும்போது இந்திக்காரன் நம்மை ஆளுகிறான் என்ற உணர்வு வருமா வராதா? ஏனென்றால் இந்தி மொழி பேசுபவர்கள் நான்கு மாநிலத்தில் இருக்கிறார்கள். ஏன் அவர்கள் மொழி என் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிர்வாகத்திற்கு பயன் படுத்தப்பட வேண்டும்?

தமிழக அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

ரஜினியை வளைக்க என்னவெல்லாம் செய்கிறது மோடி அரசு?

ரஜினியை வளைக்க என்னவெல்லாம் செய்கிறது மோடி அரசு?!

ரஜினி ஓடி ஒளிந்தாலும் விடமாட்டார்கள் போல் இருக்கிறது.

‘தர்பார்’ முடிந்து அடுத்த படத்திற்கு ரஜினி தயாரான நிலையிலும் பாஜக அவரை இழுக்கும் தன் முயற்சியை கைவிடவில்லை.

சர்வதேச திரைப்பட பொன் விழா கோவாவில் நடக்க இருக்கிறது.

அதில் இந்திய சினிமாவுக்கு பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் செய்துவரும் தன்னிகரற்ற பங்களிப்பையும் சேவையையும் கவுரவித்து அங்கீகரிக்கும் வகையில் சிறப்பு  விருதாக ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூபிலி‘ என்ற விருதை மத்திய அரசு அளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக மத்திய  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருக்கிறார்.

சினிமாவுக்கு தொண்டு செய்ததற்கு பரிசு என்றால் எல்லாரும் மகிழ்ச்சி அடையலாம்.

உள் நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் தான் சிலரது மனதை உறுத்துகிறது.

என்ன செய்தாலும் ரஜினி அதற்கெல்லாம் மசியமாட்டார் என்றாலும் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற பழமொழிக்கேற்ப சரிந்து விடுவாரோ என்ற அச்சமும் எழாமல் இல்லை.

மத்திய அரசுக்கு ரஜினி நன்றி தெரிவித்து இருக்கிறார். நாமும் வாழ்த்துவோம்.

அரசியல் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன்.