Home Blog Page 107

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலையில் விளையாடுகிறாரா ஜெயலலிதா?

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி படுத்தி விட்டது. ஆயுள் என்றால் எத்தனை ஆண்டுகள் என்பதற்கு பலப்பல வியாக்கியானங்கள் சொல்லப் பட்டாலும் 24 ஆண்டுகளுக்கு பிறகாவது அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆயுள் தண்டணை உறுதிபடுத்தப் பட்டதும் அதை அமைதியாக கையாளாகாமல் மத்திய அரசின் அனுமதி கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் விடுதலை செய்வேன் என்று சட்ட மன்றத்தில் ஆரவாரமாக அறிவித்து உச்ச நீதிமன்றத்தில் தடை கிடைக்க வழி செய்தார் ஜெயலலிதா. .
ஆரம்பத்திலேயே அரசியல் சட்ட பிரிவு 161 ன் படி மாநில அரசின் அதிகாரத்தை பயன் படுத்தி விடுதலை செய்திருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திருக்காது.

மாறாக குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகளை பயன்படுத்த முனைந்த போதுதான் மத்திய அரசு அதில் தலையிட வழி ஏற்பட்டது.
இப்போதும் மத்திய அரசின் அனுமதி தேவையா வேண்டாமா என்ற கேள்வி உச்ச மன்றத்தின் முன்பு மறு சீராய்வு மனு நிலுவையில் உள்ளதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளகேட்டு மனு செய்வதை விடுத்து நாங்கள் முடிவேடுத்து விட்டோம் என்ன சொல்லுகிறீர்கள் என்று கடிதம் எழுதினால் மீண்டும் இது உச்ச நீதிமன்றத்துக்கு சென்று அவர்கள் சிறையில் வாடும் காலம் நீடிக்கவே உதவும்.

சட்ட சிக்கல் எதுவுமின்றி அவர்கள் விடுதலை ஆக வேண்டும் என கலைஞர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தலைமை செயலாளர் டெல்லிக்கு எழுதிய கடிதத்தை பத்திரிகை களுக்கு வெளியிட்டதுதான் சந்தேகத்தை கிளப்புகிறது.

தேர்தல் நேரத்தில் அனுதாபத்தை தேடும் நோக்கில் வெளியிட்டு அவர்கள் விடுதலை ஆகாமல் போனால் விளைவு ஜெயலலிதாவுக்கு எதிராகத் தான் போகும்.
தி மு க – காங்கிரஸ் கூட்டணி உறுதிபடுத்தப் பட்ட நிலையில் அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்த இந்த அறிவிப்பு வந்ததா என்றும் தெரியவில்லை.

அதே நேரத்தில் இதற்கு ராகுல் காந்தி மத்திய அரசு முடிவெடுக்கட்டும் என்று வெளியில் பேசுவதும் பாராளுமன்றத்தில் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக எதிர்த்து பேசுவதும் காங்கிரசுக்கு கொஞ்ச நஞ்சம இருக்கிற பெயரையும் கெடுக்கவே பயன்படும்..

வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசுபவரே தமிழக முதல்வராக வேண்டும்!!!!!

தமிழைத் தாய் மொழியாக கொண்டிராதவர்கள் கூட தமிழக முதல்வராக முடியும் என்ற சூழ்நிலை இங்கு உள்ளது.

இது சரியா? கன்னடத்தை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் கர்நாடகாவில் முதல்வராக முடியுமா?
மலையாளத்தை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் கேரளாவில் முதல்வராக முடியுமா?
தெலுங்கை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் ஆந்திராவிலோ தெலுங்கானாவிலோ முதல்வராக முடியுமா?

திராவிடம் தமிழரை விழுங்கி விட்டதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
அதற்காக யாரையும் இரண்டாந்தர குடிமக்களாக வாழ வேண்டும் என்று நிர்பந்திப்பது சரியல்ல. மற்ற மாநிலங்கள் எப்படி நடந்து கொள்கிறதோ அப்படியே மட்டும்தான் இங்கும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி தவறாகும்?
உகாதிக்கு இங்கு விடுமுறை விட்டால் அங்கு தமிழ்ப் புத்தாண்டிற்கு விடுமுறை விட வேண்டும்!!! விடுகிறார்களா?

வேற்றுமையில் ஒற்றுமை என்பது தன்னை அழித்துக் கொள்வதாக இருக்க முடியாது.
ஜெயலலிதா தான் பாப்பாத்தி என்று பெருமிதத்துடன் சட்ட மன்றத்திலேயே அறிவித்தவர். அவர் தான் நான்காம் முறையும் ஆள வேண்டும் என்று துடிக்கிறார்.
விஜயகாந்த் தான் வீட்டிலும் வெளியிலும் தமிழ் தான் பேசுகிறாரா என்பதை அவர்தான் தெளிவு படுத்த வேண்டும்.

அதேபோல் தான் வைகோ . எவரையும் விட தமிழர் உரிமைக்கும் தமிழ் பாதுகாப்பிற்கும் குரல் கொடுப்பதிலும் போராடுவதிலும் முதல் நிலையில் நிற்பவர். அவர் வீட்டில் தமிழ் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர்கள் மீதுதான் இந்தக் கேள்விகள் எல்லாம் எழுகின்றன.
நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருக்கும் இந்தக் கேள்வி தேர்தல் நேரத்தில் கொழுந்து விட்டு எரியும் என்பதில் சந்தேகமில்லை.

துணை முதல்வராக, அமைச்சர்களாக ஏனைய எந்தப் பொறுப்புகளுக்கு வந்தாலும் பிரச்னை வராது. ஆனால் தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர்கள் அல்லது அறிவித்தவர்கள் முதல்வராக வர முடிந்தால் அல்லது முயற்சித்தால் அதன்பிறகு பிரச்னைகள் பெரிதாகலாம் ???!!!!
அத்தகைய சூழ்நிலை உருவாக அனுமதிப்பவர்களை வரலாறு மன்னிக்காது.
தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்ற பாவேந்தர் பாரதிதாசனின் உரிமை முழக்கத்திற்கு உருவம் கொடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை.

ஜெயலலிதாவை வீழ்த்த யாரால் முடியும் என்பதற்கான தேர்தலே 2016 ?

பொதுவாக தேர்தல் என்றால் யார் ஆள வேண்டும் என்பதற்காக நடத்தப் படும் தேர்தல் என்றே பொருள்படும்.
ஆனால் எதிர்வரும் தேர்தல் இதற்கு மாறானது.    கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா அப்படிப்பட்ட நிலைமையை உருவாக்கி இருக்கிறார்.
எதேச்சாதிகாரத்தின்  உச்சம்.    பொதுக்குழுவிலும் சட்டமன்றத்திலும் காலில் விழ வைத்து இவர்கள்  எனது அடிமைகள் என்று உலகுக்குக் காட்டும் ஆணவம்.    நினைத்த கணத்தில் தூக்கியடித்து அடுத்தவர்களை அடுத்த வாய்ப்பு எனக்கு என ஏங்க வைக்கும் தந்திரம்.   தன் படத்தை தவிர வேறு எவர்  படத்தையும் போடக்கூடாது என்று எல்லாரும் ஒன்றுமில்லாத ஜீரோக்கள் என்று பறை சாற்றும் துணிச்சல்.   பணம் சேர்ப்பது ஒன்றே குறிக்கோள் என்று சகல மட்டத்திலும் ஊழலை  மிகச் சாதாரணமான நியாயமாக நிலை பெறச் செய்து விட்ட தைரியம்.     பொய் வழக்கு போட்டு எதிர்கட்சிகளை அடக்கும் அடக்கு முறை. மொத்தத்தில் சட்ட விரோதமே சட்டம் என்று ஆகி விட்டது.
மீண்டும் ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்தால் தமிழ் நாட்டு நிலைமை  என்ன என்று நினைத்துப் பார்த்தாலே அச்சமாக இருக்கிறது.
பெரியார் பிறந்த மண் என்று சொல்லிக் கொண்டே  பார்ப்பனீயம் ஆட்சி செய்ய தோள் கொடுக்கும் தமிழர்களை நினைத்து நொந்து கொள்வதை விட என்ன செய்ய முடியும். ?
தனக்கு எதிரான சக்திகள் ஒன்று திரண்டு விடக்கூடாது என்பதில் ஜெயலலிதா எச்சரிக்கையாக இருக்கிறார்.
வைகோவின் கடந்த கால சட்ட மன்ற தேர்தல் நிலைபாடுகளை எண்ணிபாருங்கள்.    அவைகள் எல்லாமே ஜெயாவுக்கு சாதகமான ஒன்றாகத்தான் இருக்கும்.
அவரது தலைமையில் அமைந்திருக்கும் மக்கள் நல கூட்டணியும் அதே நோக்கத்தில் உருவானதுதான் என்ற உண்மை தெரிகிறதா இல்லையா?   தங்களால் ஜெயலலிதாவை தோற்கடிக்க முடியாது என்பது தெரிந்தும் ஏன் இந்த முயற்சி?    ஜெயலலிதா வந்தால் வரட்டுமே என்பதுதானே?
விஜயகாந்தும் ஜெயாவுக்கு துணை போவார் என்பது அடுத்த சந்தேகம்?     பா ஜ க விடம் எம்பி பதவி கிடைக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் – தி மு க விடம் போகாமல் இருப்பதற்கு என ஜெயா  வைக்கும் விலையும் கிடைக்கும் – கருணாநிதியையும் ஸ்டாலினையும் கொண்டு வந்து தனக்கு என்ன லாபம் என்று நினைத்தால் -அவர் பாஜக மடியில் விழுவது நிச்சயம்!!!
ஆனால் அத்துடன் அவரது அரசியல் அஸ்தமித்து விடும்.
மாறாக இந்த அழிவு சக்தியை வீழ்த்த கலைஞரோடு சேர்ந்து வலு சேர்த்தால் , அப்படி  நிலை எடுக்கும் போது தி மு க ஆட்சியின்போது குற்றம் சாட்டப்பட்ட சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க என்னென்ன முன் நிபந்தனைகள் என்பதை தெளிவு படுத்திக் கொண்டு மக்கள் மன்றத்திலும் அதை விளக்கி விட்டு பிரசாரத்தில்  இறங்கினால் அவர் வரலாற்றில் நிற்பார்.
விஜயகாந்தின் எதிர்காலம் அவர்  எடுக்கும் நிலைப் பாட்டில் இருக்கிறது.

சட்ட மன்றத்தில் ஜெயலலிதா காலில் விழுந்தாரா ஒ பன்னீர்செல்வம்?

அ தி மு க பொதுக் குழு கூட்டத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தும்முன் செருப்பை கழட்டி விட்டு நெடுஞ்சாண் கிடையாக ஜெயலலிதா முன்பு விழுந்து வணங்கி விட்டு பேசத் துவங்கினார் என்று செய்திகள் வந்தன.

அதுவாவது அவர்களின் கட்சிக் கூட்டம். தங்கள் தலைவியின் காலில் விழுவதை அவர்கள் பாக்கியமாக நினைத்தால் அது அவர்களுக்கும் அவர்கள் தலைமைக்கும் உள்ள பிரச்சினை. மற்றவர்கள் கருத்து சொல்வது கூட தேவை இல்லாதது.

ஆனால் சட்ட மன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் போது ஒ பன்னீர்செல்வம் முதல் அமைச்சர் காலில் விழுந்து ஆசி வாங்கி விட்டு பேச துவங்கினார் என்று செய்திகள் வந்தன. இதை தமிழக அரசின் சார்பில் யாரும் தவறு என்று மறுக்க வில்லை.

இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழகமே வெட்கி தலை குனிய வேண்டிய தகவல் இது.
அரசியலில் நிலைத்து நிற்பதற்காக எதையும் செய்ய தயார் என்ற நிலைக்கு அரசியல்வாதிகள் தள்ளப் பட்டு விட்டால் எதிர்காலத்தை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.
பொதுத் தேர்தலில்தான் மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

ஜல்லிக்கட்டு- தமிழர்களுக்கு பா ஜ க – ஜெயலலிதா அரசுகளின் துரோகம்?!!!

எதிர்பார்த்ததைப் போலவே உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக் கால தடை விதித்து விட்டது.

மத்திய அரசு 07.01.2016 ல் கொண்டு வந்த அறிக்கையில் கண்ட ஓட்டைகளே இந்த குளறுபடிக்கு காரணம். காட்சிபடுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளை மத்திய அரசு நீக்காமலேயே ஏன் இந்த அறிக்கையை வெளியிட்டது. ?

ஜெயலலிதா அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு போட்ட மறு சீராய்வு மனு என்ன காரணத்துக்காக கிடப்பில் போடப்பட்டது?
மறுசீராய்வு மனு விசாரணைக்கு வந்திருந்தால் மத்திய அரசு அறிக்கை வெளியிட அவசியம் வந்திருக்காது.

ஆனால் மத்திய அரசின் அறிக்கையை எதிர்த்து போடப்பட்ட மனுக்கள் மறுநாளே விசாரணைக்கு வருகின்றன. உச்ச நீதி;மன்றத்தில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை இது காட்டவில்லையா?

உச்ச நீதி மன்றம் நான்கு ஆண்டுகளாக நடக்காத ஜல்லிக்கட்டை இப்போது நடத்தியே ஆக வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் சென்ற ஒரு ஆண்டு மட்டுமே நடக்கவில்லை என்ற உண்மையை உச்ச நீதிமன்றத்திடம் சொல்லத் தவறியது யார்?

மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா கோருவதும் , அந்த உரிமை எங்களுக்கு இல்லை மாநில அரசு வேண்டுமானால் கொண்டுவரட்டும் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நிர்மலா சீதாராமன் சொல்லுவதும் யாரை ஏமாற்றுவதற்காக???!!!

ஜல்லிக்கட்டு வழக்கொழிந்து போகட்டும் என்று இருவருமே நினைக் கிறார்கள். பாஜகவில் ஒரு மேனகா காந்தி என்றால் காங்கிரசில் ஒரு ஜெய்ராம் ரமேஷ் . , விலங்குகள் பாதுகாப்பு என்ற போர்வையில் மனிதர்களை ஆதிக்கம் செய்து வஞ்சிப்பவர்கள்
தங்கள் மதம் சாராத எந்த விழாக்களையும் பிற்பட்டோர் தாழ்த்தப் பட்டோர் நாடு முழுவதும் கொண்டாடக் கூடாது என்ற ஆழமான சதிதான் இந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளும்.

கேரளாவில் யானைகள் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. கோவில்கள் சம்பத்தப் பட்டு வதை செய்யலாம். நாய் கண்காட்சிகள் நடக்கின்றன. பணக்காரர்கள் வதை செய்யலாம். குதிரைப் பந்தயம் நடக்கிறது. பணம் சம்பாதிக்க வதை செய்யலாம்.

நாள்தோறும் லட்சக் கணக்கில் ஆடுகள், மாடுகள் கோழிகள் உணவுக்காக வதை செய்யப் படுகின்றன. விலங்கின ஆர்வலர்கள் மூச்சு விடமாட்டார்கள். இறைச்சி ஏற்றுமதியில் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இவர்கள்.

விலங்கின ஆர்வலர்களின் பொருளாதார பின்புலத்தை யாராவது ஆய்வு செய்திருக்கிரர்களா? கோடிக்கணக்கில் செலவு செய்ய இவர்களால் முடிகிறது.
கொடுமை என்னவென்றால் இவர்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு இவர்களின் செயல்பாடுகள் இருப்பதுதான்.

பிற்பட்டோரும் தாழ்த்தப் பட்டோரும்இணைந்து கொண்டாடும் ஜல்லிக்கட்டு விழாவை ஏதோ ஒரு சாதியாதிக்க விழா போல சித்தரிக்க முயல்கிறார்கள்.
இவர்களின் ஆன்மிக ஆதிக்கத்திற்கு எல்லாரும் கொடி பிடிக்க வேண்டும். . வேர்வை சிந்தாமல் உழைக்காமல் இறைப்பணி மட்டுமே செய்து கொண்டு எங்களால் சுகமாக வாழ முடியும் என்று நிரூபித்திருக்கிறார்களே?

எல்லாத் துறைகளிலும் உயர் மட்டத்தில் இருந்து ஆதிக்கம் செய்ய இவர்களால் முடிகிறது. காரணம் இவர்களுக்குள் இருக்கும் ஒருங்கிணைப்பு.
மற்றவர்கள் ஒன்று சேர்வதில்லை. அல்லது ஒன்று சேர விடுவதில்லை.
ஜல்லிக்கட்டையும் ரேக்ளா பந்தயதையும் இவர்கள் குறி வைக்க என்ன காரணம்? இவர்கள் யாரும் இதில் ஈடுபடுவதில்லை.

தாங்கள் ஆதாயம் அடையாத எதுவும் இருக்க கூடாது. மற்றவர்களுக்கு என்று தனி அடையாளம் எதுவும் இருக்க கூடாது. எல்லாம் தங்களை சார்ந்தே இருக்க வேண்டும் என்ற குரூர சதியை தவிர வேறு என்ன இருக்க முடியும்?
என்ன நடக்கும்? நீதிமன்றத்தின் மீது பழியைப் போட்டு காலத்தை ஒட்டி விடுவார்கள். மீறி நடத்த முற்படும் நபர்களை குறிவைத்து அடக்கு முறை ஏவப்படும். சட்டம் தன் கடமையை செய்யும் என்பார்கள்.

ஒருசில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்த வில்லை என்றால் ஒன்றும் குடி முழுகி விடாது. ஒருங்கிணைந்து புத்தியை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் நிவாரணம் தேட முயற்சிக்க வேண்டும்.

உச்சபட்ச அபத்த தீர்ப்பை அகற்ற வேண்டும்.
அவர்களின் அரசியல் செல்வாக்கை வீழ்த்த வேண்டும்.
அவாள்களின் வெற்றிக்கு காரணத்தை ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும்.. தங்கள் நோக்கத்திற்காக மற்றவர்களையும் இணைத்துக் கொள்ளும் சாமர்த்தியம்.
எல்லாம் நன்மைக்கே !!! அவாள்களை அடையாளம் கண்டு கொள்ளவாவது மற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்ததே???

ஜெயலலிதா- விஜயகாந்த் மோதலால் அசிங்கப் படும் தமிழக அரசியல்??!!!

தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது ஜெயலலிதா படத்தை அகற்ற சொல்லி விஜயகாந்த் சொல்ல தொண்டர்கள் அகற்ற ஆத்திரமடைந்த அ தி மு; க வி னர் தே மு தி க பானர்களை கிழித்தெறிய தே மு தி க வினர் மீது மட்டும் வழக்குப் பதிந்தது காவல் துறை..
பல இடங்களில் தே மு தி க வினர் தாக்கப் பட்டனர். .

நிறுத்தச் சொல்லி அறிக்கை விட்ட ஜெயலலிதா , பத்திரிகையாளர்களை நோக்கி த்தூ என்று துப்பிய விஜயகாந்துக்கு எதிராக பத்திரிகையாளர் களை தூண்டிவிட்டு விஜயகாந்த் வீட்டு முன்பும் அலுவலகம் முன்பும் ஆர்பாட்டம் செய்ய அனுமதித்து சட்ட ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினர்.

இப்பொழுது ஜெயலிலிதா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்று விஜயகாந்த் அறிவித்து இருக்கிறார்.
ஆக நாடு வெள்ள நிவா

ரணம் , சட்ட ஒழுங்கு முறைகேடுகள் லஞ்சம ஊழல் என்று பல பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய வேளையில் தனிப்பட்ட சண்டையைப் போல் அரசியலை ஆக்கி விட்டு மக்களின் கவனத்தை பிரச்சினைகளில் இருந்து அப்புறப்படுத்தி தப்பிக்கும் உத்தி ஜெயலலிதாவுக்கு வேண்டுமானால் பயனளிக்கலாம் , விஜயகாந்துக்கு???
தமிழகத்தில் தலைப்புச் செய்தி மக்கள் பிரச்சினைகளாக இருக்க வேண்டுமா? தனி நபர் சண்டையாக இருக்க வேண்டுமா???

சமையல் எரி வாயு மானிய ரத்து, உர மானிய ரத்துக்கு வழி கோலுமா???!!!

பத்து லட்சம் ஆண்டு வருமானம் இருந்தால் அவர்களுக்கு சமையல் எரி வாயு மானியம் ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு பரவலாக வரவேற்பை பெற்றாலும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்டு வருமானம் குறைந்தால் மீண்டும் மானியம் உண்டா? மண் எண்ணைக்கும் இதேபோல் மானிய ரத்து அறிவித்தால் ஏழைகள் பாதிக்கப் படுவார்கள்.. . எல்லா மானியங்களையும் ஒழிக்கும் தீர்மானத்தில் மத்திய அரசு இருந்தால் அது நிச்சயமாக ஏழைகளை பாதிக்கிற வகையில் இருக்காது என்பது கேள்விக்குறி. ?

விவசாயிகள் அதிகம் உபயோகிக்கும் யூரியா மானியத்தையும் குறைக்கும் எண்ணம் இருக்கும்போல் தெரிகிறது.

அப்படி இருந்தால் அது விவசாயிகள் எதிர்ப்பு நடவடிக்கையாகத்தான் பார்க்கப்படும்.
அறுபது லட்சம் போலி குடும்ப அட்டைகளை கண்டுபிடித்தோம் என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.

அதற்காக சாதிக்கப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டு விவசாயத்தில் கை வைத்து விடக் கூடாது.

கேரள மதுவிலக்கு கொள்கை சரியே! உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு ??!

ஐந்து நட்சத்ர ஓட்டல்களை தவிர மற்ற இடங்களில் பிராந்தி விஸ்கி விற்பதை தடை செய்து கேரள அரசு போட்ட உத்தரவு சரியே என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அரசின் கடமை குடியின் தாக்கத்தை குறைப்பது என்பதை தீர்ப்பு வலியுறுத்துகிறது. அரசியல் சட்ட பிரிவு 47 ன் படி அரசின் கடமை மதுவிலக்கை அமுல்படுத்துவது.

நாட்டின் பல பகுதிகளில் மதுவிலக்கை அமுல்படுத்துவதில் உள்ள சிரமங்களை குறிப்பிட்ட நீதிமன்றம் இருந்தாலும் அரசின் கடமை மது வின் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுப்பது என்பதை சுட்டிகாட்டியிருக்கிறது.

கள் , சாராயம் கிடைக்கும். பீர் வைன் கிடைக்கும். ஆனால் பார் கிடையாது. கடையில் வாங்கி வீட்டில் குடித்துக் கொள்ளுங்கள். இந்த ரீதியில் கட்டுப் பாடுகளை விதித்து கேரள அரசு கொள்கை வகுத்து செயல்படுகிறது. இதன் மூலம் நூறு சதம் கல்வி அறிவுள்ள மக்கள் நாட்டின் பதினான்கு சத வீத குடிகாரர்களாக இருப்பதை மாற்ற அரசு திட்டமிடுகிறது.

உச்சநீதி மன்ற தீர்ப்பு பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சிக்கும் ஒருவகையில் வழிகாட்டியாக இருக்கும். ஏப்ரல் மாதம் தொடங்கி அங்கும் மது விற்பனையில் பல கட்டுபாடுகளை விதிக்க அந்த அரசு திட்டமிட்டிருக்கிறது.

அந்தோ? தமிழகத்தில் ஏதாவது நடக்குமா என்ற ஏக்கம் பிறக்கிறதா இல்லையா?
ஜெயலலிதா அரசு செய்துகொண்டிருக்கும் மிகப் பெரிய அநியாயம் டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு வைத்து வியாபாரத்தை விருத்தி செய்வதுதான்.
உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஜெயலலிதாவின் கண்ணைத் திறக்குமா?

பத்திரிகையாளர்களை காரித்துப்பிய விஜயகாந்த் ?!! யார் பக்கம் நியாயம்?

நேற்று சென்னையில் நடந்த ரத்த தான முகாம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை விஜயகாந்த் சந்தித்தார்.

2016 தேர்தலில் ஜெயலலிதா ஜெயிப்பாரா என்று ஒரு நிருபர் கேட்டார். ‘ ஜெயலலிதா ஜெயிக்கமாட்டார் என்று பதில் சொல்லிய விஜயகாந்த் பத்திரிகையாளர்களைப் பார்த்து இதே கேள்வியை ஜெயலலிதாவை பார்த்து கேட்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா என்று கேட்டுவிட்டு ‘ தூ’ என்று காரித் துப்பினார்.

அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள் கேள்விகளை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு விழித்துக் கொண்ட அல்லது தூண்டி விடப்பட்ட பத்திரிகையாளர் சங்கங்கள் ஆங்காங்கே விஜயகாந்துக்கு எதிராக அறிக்கைகளை விட துவங்கி விட்டார்கள். மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கி விட்டது.
விஜயகாந்த் நடந்து கொண்டது தவறு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அநாகரிகமானது மட்டுமல்லாமல் அடுத்த தேர்தலில் எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு இவரை தேடி வருகையில் இவர் அதற்கு தகுதியானவர் தானா என்ற கேள்வியை இவரே எழுப்பி விட்டார்.

ஏற்கனெவே கட்சிக்கு கொள்கையும் இல்லை திட்டமும் இல்லை இது ஒரு குடும்பக் கட்சி என்று புகார் உள்ளது. அதனால்தான் இவர் குடும்பத்தை தாண்டி வேறு யாரும் கட்சியில் முக்கிய பொறுப்பில் இல்லை. எந்த பிரச்சினை குறித்தும் இவர் கட்சி சார்பில் யாரும் பேசுவதில்லை. என்ன பேசுவது என்பதில் பிரச்சினையா யார் பேசுவது என்பதில் பிரச்சினையா ? எப்படி இருந்தாலும் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த அம்சங்களும் இல்லாமல் ஒரு கட்சி பல ஆண்டுகளாக லாபத்தொடு நடந்து வருகிறது என்றால் அது விஜயகாந்த் கட்சியாகத்தான் இருக்கும். . இருந்தாலும் கலைஞருக்கும் ஜெயாவுக்கும் மாற்றாக ஒரு சக்தி தேவைப்பட்டபோது இவர் தெரிந்ததால் செல்வாக்கு கூடி நிற்கிறது.

தகுதியில்லாதவர்களுக்கு பதவி வந்தால் இப்படித்தான் என்றும் இவரோடு கூட்டு சேர்ந்து தவறு இழைத்து விட்டேன் என்றும் ஜெயலலிதா புலம்பினார். பல சமயங்களில் பொது இடங்களில் பலரை அடித்து கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார்.

இவ்வளவு இருந்தாலும் அவர் கேட்ட கேள்வியில் பொருள் இல்லாமல் இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் இத்தனை அநியாயம் நடக்கிறதே கொள்ளை நடக்கிறதே, எத்தனை பத்திரிகையாளர்கள் நியாயமாக கேள்வி கேட்டிருக்கிரர்கள்?.. விமர்சித்து எழுதி இருக்கிறர்கள்?

. பாராளுமன்றத் தேர்தலில் பண பலத்தோடு தான் வெற்றி பெற்றார் என்பது உலகம் அறிந்த உண்மை. எத்தனை பேர் பதிவு செய்தார்கள். ? தி மு க ஆட்சியில் நடக்க வில்லையா என்பதே பதிலாய் போனது. அதற்குத்தான் தண்டனை கொடுத்து வீட்டில் உட்கார வைத்தாகிவிட்டதே என்று யாரும் பதில் கேள்வி கேட்கவில்லை.
விலை போன பத்திரிகையாளர்களுக்கு எப்படி இத்தனை கோபம வரலாம்?

தகுதி இல்லாத தலைவர்களும் விலை போன பத்திரிகையாளர்களும் சேர்ந்து கொண்டு தமிழ் நாட்டை கூறு போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசில் தொடரும் மேல்சாதி ஆதிக்கம்??!! 27 % த்திற்குப் பதில் வெறும் 12 % பேரே பிற்பட்டோர்???!!!

வி பி சிங் தனது ஆட்சிக் காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகேற்ப மத்திய அரசு வேலைகளில் பிற்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு செய்ய ஆணையிட்டார்.
அதை நேரடியாக எதிர்க்காத பா ஜ க மறைமுகமாக ராமர் கோயில் பிரச்சினையை கிளப்பி வி பி சிங் அரசு தொடர முடியாத அளவுக்கு சதி செய்து ஆட்சியை மாற்றியது.

இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டு வருகிறது என்பதை அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு வெளிக்கொண்டுவந்திருகிறது.

1.1.2015 அன்று நிலவரப்படி ஏ பி சி டி வகை மத்திய அரசு பணியாளர்கள் 79,483 பேரில் 9040 பேர் மட்டுமே பிற்பட்டோர் என்ற அதிர்ச்சித் தகவல் தகவல் உரிமைச் சட்டம் வாயிலாக கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது..
இந்த தகவலை அளித்த துறையும் நியமனங்களை செய்யும் துறையுமான மனித வள மேம்பாட்டுதுறையிலேயே தங்கள் விகிதாசாரத்திற்கு மாறாக தாழ்த்தப்பட்டோர் 12.91 % மும் மலைவாழ் மக்கள் 4% மும் மிகவும் பிற்பட்டோர் 6.67 % மும் மட்டுமே பணியில் இருக்கிறார்கள்.

குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் ஏ கிரேடு அதிகாரிகளில் யாருமே பிற்பட்டோர் இல்லை.
இன்னும் கொடுமை என்னவென்றால் இந்த தகவல்களை கேட்டால் நாற்பதிற்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் தகவல்களை தருவதில்லை.
எனவேதான் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு அமுல் படுத்தப் படுவதை கண்காணிகக ஒரு தனி அமைப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

விழிப்புணர்வு பெறவேண்டிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் தூங்கிக் கொண்டிருப்பதால் தான் இது சாத்தியமாகிறது.
மத்தியில் புள்ளியியல் துறை என்று ஒன்று இருக்கிறதே அவர்கள் என்னதான் செய்கிறார்கள்??!!!