தமிழக அரசியல்

பாஜகவில் இணைக்க- அதிமுகவை துண்டாட அடித்தளம் இடும் ஒபிஎஸ்-ன் அறிக்கை??!!

Share

மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒபிஎஸ் குடும்பத்துடன் பாஜகவில் இணையப்போகிறார் என்ற தங்க தமிழ்ச்செல்வனின் அறிக்கை பற்றி ஒபிஎஸ் பதில் சொன்னபோது அது முட்டாள்தனமானது என்று கூறினார்.

அப்படியே விட்டிருந்தால் கூட பிரச்னை ஆகியிருக்காது.

ஆனால் இரண்டு நாள் கழித்து அவர் கொடுத்த அறிக்கைதான் அவர் தான் மட்டும் சேரப் போவதில்லை தன் கட்சியையே கொண்டு போய் பாஜக விடம் இணைக்க திட்டமிடுகிறார் கேள்வியை எழுப்பி இருக்கிறது.

தன் அறிக்கையில் பாஜக வுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் கொள்கை முரண்பாடுகளை பற்றி ஒரு வரி கூட இல்லை. அதிமுக என்பது திராவிட இயக்கத்தின் கூறு என்பதையும் பெரியார் அண்ணா காட்டிய வழியில் செல்லும் இயக்கம் என்பதையும் மறந்தும் கூட சுட்டிக் காட்டவில்லை.

ஏன் எம்ஜிஆர் எந்த வழியில் கட்சியை கட்டமைத்தார் என்பதையும் வலியுறுத்தி கூறவில்லை.

மாறாக எவ்வாறெல்லாம் ஜெயலலிதா பாஜக வோடு மோடியோடு உறவாடினார் நல்ல நட்பு வைத்திருந்தார் என்பதையே கோடிட்டு காட்டுகிறார்.

தலைவி மதித்த மோடியை இவரும் இவர் இயக்கமும் மதிக்கிறார்களாம்.  அதிமுகவின் எதிர்காலத்திற்கு உகந்த முடிவாம். 1998ல் பாஜக வோடு கூட்டணி வைத்தது, 2004ல் கூட்டணி வைத்து 7 இடங்களை வழங்கியது மட்டுமல்ல எல்லாவற்றுக்கும் காரணம் பாஜக வுடன் அதிமுகவுக்கு இருக்கிற தேசப்பற்று தெய்வ நம்பிக்கை போன்ற ஒத்த கொள்கைகளும் காரணங்களாம் . 

   இனிமேல் பெரியார் அண்ணா படங்களுக்கு பதில் கோல்வால்கர் தீனதயாள் உபாத்யாய படங்களை அதிமுக விளம்பரங்களில் எதிர்பார்க்கலாமா? 

ஜெயலலிதா வகுத்து கொடுத்த பாதத் தடத்தில் அதிமுகவின் பிரகாசமான எதிர்காலத்துக்காக இவர்கள் மேற்கொண்ட இணக்கம் தான் கூட்டணி என்கிறார்.

மோடியா லேடியா என்று கேட்டது, பாஜக அரசின் பல திட்டங்களை ஏற்க மறுத்தது, வாஜ்பாய் அரசை கவிழ்த்தது போன்ற ஜெயலலிதாவின் பாஜக எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவும் ஒபிஎஸ் க்கு நினைவுக்கு வரவில்லை.

வேறு கட்சிக்கு போகப்போகிறேன் என்பதெல்லாம் வதந்தி வடிகட்டிய பொய் என்று கதறும் ஒபிஎஸ் ஏன் இத்தனை நாளாக ஜூனியர் விகடன் பத்திரிகை விலாவாரியாக பியுஷ் கோயலிடம் வாரணாசியில் இவரும் இவர் குடும்பத்தினரும் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியும் இவருக்கு பாஜக மாநில தலைவர் பதவியும் கேட்டதாக எழுதி இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தோ  அவதூறு வழக்கு போட்டோ நடவடிக்கை எடுக்கவில்லை. 

உங்களின் 40 எம்எல்ஏக்கள் என்னிடம் தொடர்பில் இருக்கிறார்கள் என்று மிரட்டிய மோடியின் கட்சி இவரை என்ன மிரட்டி இப்படியெல்லாம் பேச வைத்திருக்கிறது ?

சுயநலத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவர் ஒபிஎஸ் என்பதை நாடு நன்கு அறிந்திருக்கிறது.

அது திராவிட இயக்கத்தை பிளவு படுத்தி அதில் ஒரு பகுதியை காவிக்கட்சியுடன் இணைக்கும் எல்லைக்கும் கூட செல்லும் என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

தப்புத்தாளங்கள் தமிழக அரசியலில் கேட்க ஆரம்பித்துவிட்டன. 

This website uses cookies.