மணவாள மாமுனிகள் சன்னதியில் பிராமணர் அல்லாதோருக்கு அனுமதி மறுப்பு

Share

காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள மணவாள மாமுனிகள் சந்நிதிக்குள் பிராமணர் அல்லாதோர் நுழைய அனுமதி மறுக்கப் பட்ட செய்தி நாங்கள் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோர்  கண்களை  திறக்க வேண்டும்.

இந்த பிரச்னை பல ஆண்டுகளாகவே நீடித்து வருவதாக சொல்கிறார்கள் .

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா நடை பெற உள்ள நிலையில் அவரது பிறந்த நாள் வழிபாடு இந்த சந்நிதியில் நடைபெற்றது.    அந்த வழிபாட்டை சமத்துவ வழிபாடாக நடத்த ராமானுஜ தாசர்கள் என்ற அமைப்பினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

அப்போது பிராமணர்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இத்தனைக்கும் தங்களை கோவிலுக்குள் அனுமதித்து நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் அவர்கள் காண்பித்தும் இறுதி வரை யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்க வில்லையாம்.

நீதிமன்ற தீர்ப்பை அவர்கள் மதிக்க வில்லை எண்பது  ஒருபுறம் இருக்கட்டும்.     ராமானுஜர் போதித்ததாக சொல்லப்படும் சமத்துவம் எங்கே போனது?

எந்த மதத்தையும் விட வைணவம்தான் இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்று கொண்டாடுகிறது என்று விளக்கம் சொல்கிறார்கள்.

ஆனால் நடைமுறையில்?

சமத்துவம் இல்லாத இடத்தில் ஏன் பக்தர்கள் போக வேண்டும்?   அப்படி சண்டை போட்டு உள்ளே போய் பார்த்தால்தான்  இறைவன் அருள் புரிவானா?

சமத்துவம் கேட்டுப் பெற வேண்டிய ஒன்றல்ல. எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.   முடியாவிட்டால் ஏன் அங்கே போக  வேண்டும்.?

ஆணவம் அவர்கள் அறிவை அழித்து விட்டது.     எவ்வளவு அவமானப் படுத்தினாலும் இவர்கள் தலை நிமிரவே மாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

அனுமதிமறுத்து அவர்கள் ராமானுஜரை அவமானப் படுத் தியிருக்கிறார்கள். .

This website uses cookies.