இந்திய அரசியல்

ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்ய வெட்கப் படாத மோடி ??!!

Share

7 கோடி செலவில் இந்தியா யாழ்ப்பாணத்தில் விளையாட்டு அரங்கம் உருவாக்கி உள்ளது.

காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி மறந்தும் கூட ஈழத் தமிழர் பிரச்சினை பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ இன அழிப்பு ,போர்க்குற்றம் பற்றியோ பேசத் துணியவில்லை.

மாறாக ‘ இலங்கை முழுவதும் அனைத்து மக்களிடமும் ஒற்றுமை ஒருமைப்பாடு அமைதி நல்லிணக்கம் பாதுகாப்பு சமமான வாய்ப்பு மற்றும் கண்ணியம் நிலவுகிறது ‘ என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேசியிருக்கிறார்.

ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்களும் ராணுவ கண்காணிப்பில் வாழ்ந்து வருகின்றனர்.    அவர்களது நிலங்கள் எல்லாம் ராணுவ ஆக்கிரமிப்பில்.   தமிழர் நிலங்கள் அவர்களிடம் இல்லை. இன்னமும் ஒரு லட்சம் பேர் முகாம்களில் வசிக்கின்றனர்.     ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னமும் மறைமுக போர் பின்னணியில்தான் வாழ்க்கை.

எப்படியாவது படகில் எங்காவது சென்று நிம்மதியாக வாழலாம் என்ற நம்பிக்கையில் ஆஸ்திரேலியாவிலும் இந்தோனேசியாவிலும் மாட்டிக்கொண்டு அல்லாடுகிறார்கள்.     அச்சத்தில் வைத்து ஒரு இனமே அடக்கப் பட்டு ஆளப் படுகிறது.

இதெல்லாம் எதுவுமே தெரியாதது போல் மோடி பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல்தான்.

துரையப்பா  தமிழ் மக்களை  சிங்கள எஜமானர்களின்  ஏஜெண்டாக இருந்து அடக்கி ஆள துணையாக இருந்தவர்.      அவரைத்தான் தன் வாழ் நாளில் முதல் முதலாக  விடுதலைப்  புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொன்றதாக வரலாறு கூறுகிறது.

அவரை போற்றி அவர் பெயரில் விளையாட்டு மைதானத்தை அமைத்திருக்கிறார்கள் என்றால் என்ன பொருள்?     அங்கே துரோகிகளுக்குதான் மரியாதை .    எட்டப்பர்கள் தான் போற்றப்படுவார்கள்.    நீங்களும் துரோகிகளாக மாறுங்கள். உங்களுக்கும் மரியாதை கிடைக்கும் என்பதுதானே.

இந்தியா இலங்கையின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது வரவேற்கத் தக்கது. அது வேறு.     ஆனால் அங்கே மக்கள் அடிமைப் படுத்தப்  பட இந்தியா துணையாக இருப்பது என்பது வேறு.

சொல்வது வேறு உள்நோக்கம் என்பது வேறு என்பதுதான் மோடியின் இயல்பு என்பது வெளிப்பட்டிருக்கிறது.

இந்தியா திருந்தாதா???!!!

This website uses cookies.