தமிழக அரசியல்

பணத்தை பதுக்கிக் கொண்ட ஆளும் கட்சி நிர்வாகிகளால் காப்பாற்றப்பட்ட ஜனநாயகம்??!!

Share

கொள்ளையடித்தவர்கள் இந்த தேர்தலில் பணத்தை இறக்கி மீண்டும் பதவிக்கு வந்து மீண்டும் பணத்தை கொள்ளையடிக்கலாம் என்ற திட்டத்தை அந்தந்த கட்சி நிர்வாகிகளே தோற்கடித்திருக்கிறார்கள்.

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூபாய் 4000 வீதம் ஆளும் கட்சி வேட்பாளர் ஒதுக்க அதை நிர்வாகிகள் 2000 என சில இடங்களிலும் 1000 என பல இடங்களிலும் விநியோகித்திருக்கிறார்கள்.

ஒரு சட்டமன்ற தொகுதியின் சராசரி வாக்குகள் இரண்டு லட்சம் என்றால் நாலாயிரம் ரூபாய் வீதம் கொடுத்தால் எண்பது கோடி வேண்டும். பாதிப்பேருக்கு இரண்டாயிரம் என்றால் கூட இருபது கோடி. 18 தொகுதிகளிலும் சுமார்  300-400  கோடிகள் ஆளும் கட்சி செலவழித்திருக்கலாம். அதையும் மீறி யாரும் வெற்றி பெற்றால் அதுதான் மக்கள் சக்தி. 

டிடிவி கட்சி பல இடங்களில் ரூபாய் 500 எனவும் சில இடங்களில் 1000 எனவும் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் யாருமே எல்லாருக்கும் கொடுக்கவில்லை. பணக்காரர்கள் யார் என்று பார்த்து அவர்களை தவிர்த்தே விநியோகம். நூறு சதம் திட்டமிட்டு கடைசியில் விநியோகம் செய்தது சுமார் ஐம்பது அல்லது அறுபது சதம் பேருக்குத்தான். மீதியை கட்சி நிர்வாகிகள் பங்கு போட்டுக்கொண்டுவிட்டனர். அதனால் கட்சிக்கு வர வேண்டிய முழு வாக்குகளும் வந்தன என்று சொல்ல முடியாத நிலையை உருவாக்கி விட்டனர்.

அதிலும் பாராளுமன்ற தொகுதிகளில் யாருமே எல்லாருக்கும் கொடுக்கவில்லை என்பது நல்ல செய்தி. இல்லை என்று சொல்லாமல் நூறு இருநூறு என்று  கொடுத்திருக்கிறார்கள்.

பல இடங்களில் அதிமுகவிடம்  பணம் வாங்கிக் கொண்டு தினகரனுக்கு வாக்களித்த  கதையும் அரங்கேறி இருகிறது.

பணம் பல விதமாக விளையாடினாலும் தேர்தலை மாற்றியமைக்கும் விதத்தில் அது அமையவில்லை.

மக்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்தான் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம். சில இடங்களில் வாக்கு சாவடிகளை கைப்பற்றும் முயற்சிகளை ஆளும் கட்சி மேற்கொண்டது.

அன்புமணி ராமதாஸ் சொன்னது போல் வாக்கு சாவடியில் நாம்தான் இருப்போம் என்று தொண்டர்களை உசுப்பேற்றி வைத்திருந்தாலும் அவர்களால் முழுமையாக அதை செய்ய முடியவில்லை.

நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.  தேடிக்கண்டுபிடித்து வாக்களித்தவர்கள் சொன்னார்கள்.

பெரிதும் பேசப்பட்ட தினகரன் கட்சி எங்கும் வெல்லமுடியாது என்றாலும் பல இடங்களில் கணிசமாக வாக்குகளை பெறலாம். பரிசுப் பெட்டகத்தில் எதையாவது வைத்து கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த வர்களுக்கு ஏமாற்றம்தான்.

            அதிலும் பாராளுமன்ற தொகுதிகளில் யாரும் அதிக அக்கறை காட்டி பணம் செலவழிக்கவில்லை. பெருந்தொகை முதலீடு 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில்தான். ஆட்சி நீடிக்க வேண்டுமே??!! 

பணத்தைப் பதுக்கிக் கொண்ட ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் மொத்தமாக வெற்றி பெற்று ஊழலை சட்ட பூர்வமாக ஆக்கி விடுவார்கள்.

This website uses cookies.