மீனவர் பிரச்னையில் அரசியல் செய்யும் பா ஜ க – சிங்கள அரசுகள்??!!

Share

இந்திய -இலங்கை     இருநாட்டு அமைச்சர்களும் பங்கு பெற்ற பேச்சு வார்த்தைக்குப் பின்னரும் தமிழக மீனவர் பிரச்னையில் எந்த உருப்படியான முடிவையும் எடுக்காமல் கலைந்திருகின்றனர் .

ஆறு மாதத்துக்கு ஒரு முறை சந்தித்து பேசுவது என்ற முடிவும் ஜனவரி மாதம் கொழும்புவில் நடக்கும் கூட்டத்தில் பிரச்னைகள் குறித்து மீண்டும் பேசுவது என்ற முடிவும் என்ன பிரச்னையை தீர்திருகிறது.

இலங்கை மீனவர்களை தமிழக மீனவர்களுக்கு எதிராக திருப்பி அரசியல் செய்கிறது சிங்கள அரசு .    அதற்கு துணை  போகிறது இந்திய அரசு.

கச்சத்தீவு பிரச்னையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை நடை முறை படுத்த முடியாத அல்லது முனையாத இந்திய அரசு என்ன உள் நோக்கத்தை கொண்டிருக்கிறது. ?

தமிழர்களின்  பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு அனுமதிக்கும் என்று ஒப்பந்தம் இருக்கிறதா இல்லையா?     ஏன் அதை அமுல் படுத்த வற்புறுத்த வில்லை?

ஆண்டுக்கு 80  நாட்களுக்கு  மட்டும்  மீன்பிடித்துக் கொள்ள உரிமை கேட்டு ஏன் இலங்கையிடம் மன்றாட வேண்டும்..  ?

கச்சதீவை இலங்கைக்கு  தாரை வார்த்தது பாராளுமன்ற ஒப்புதல் இல்லாததால் செல்லாது என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

தமிழக மீனவர்களின் 115   படகுகள் இலங்கை  அரசால் பறிமுதல் செய்யப் பட்டு கிடக்கின்றன.     அவைகளை  முதலில் மீட்டு விட்டு அல்லவா பேச்சு வார்த்தையில் பங்கு  பெற்றிருக்க வேண்டும்.      அதற்கு  இலங்கை மீனவர்கள் ஒப்புக் கொள்ளாததால் பெறமுடிய வில்லை என்றுத் நம் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.    முடிவெடுக்க வேண்டியது சிங்கள அரசா இலங்கை மீனவர்களா?

உரிமை என்பது அவன் கொடுத்து நாம்  பெற வேண்டியது அல்ல.   நமக்கு உரியதை நாம் எடுத்துக் கொள்வது.

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு நமது மீனவர்களுக்கு இந்திய அரசு உதவிகள் செய்வதற்கும் ஏராளமான நிபந்தனைகள்  விதிக்கப் படுகின்றன.

இலங்கை- இந்திய  கடற்பரப்பு பகுதிகளை நிர்ணயம் செய்வது கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்பதை பொறுத்தே !     ஏன் அந்தப் பிரச்னையை பேச மறுக்கிறீர்கள்??       தமிழர்களை கேட்காமல் இந்திரா செய்த ஒப்பந்தம் எப்படி தமிழர்களை கட்டுப்படுத்தும்.?

படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என்று நான்தான் பரிந்துரைத்தேன் என்ற    சுப்பிரமணியன் சுவாமி என்ற பா ஜ க  மேலிட உறுப்பினர் சொன்ன பிறகு இவர்கள் எப்படி படகுகளை மீட்பார்கள்?

இரட்டை வேடம் போடுபவர்கள் பிரச்னையை  எப்படி தீர்ப்பார்கள்?

நம்பிக்கை வைக்கும்படி இரு நாட்டு அரசுகளும் நடந்து கொள்ள வில்லை .    காலம் கடத்துவது தான் உத்தி என்றால் அது பலிக்காது .

மீன் பிடித் தொழிலில் இருந்து தமிழக மீனவர்களை அப்புறப் படுத்துவதுதான் இலங்கை அரசின் இலக்கு.   அதற்குதான் இந்த உறுதியற்ற , இலக்கற்ற ,பற்றற்ற  பேச்சு வார்த்தைகள் பயன்படும்.

 

 

This website uses cookies.