தமிழக அரசியல்

சிவி சண்முகத்தை அவமதித்த பாஜக தலைமை??!!

Share

எவ்வளவு அடித்தாலும் தாங்குவாண்டா என்ற வடிவேலுவின் காமெடியை மிஞ்சி விட்டது அதிமுகவை அவமானப்படுத்தும் பாஜகவின் செயல்.

துணை முதல்வர் ஒபிஎஸ்-ஐ பார்க்க முடியாது என்று வாசலில் காத்திருந்தவரை திருப்பி அனுப்பிய நிர்மலா சீதாராமன் இன்று நிதி அமைச்சர். கேட்டதற்கு ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்று அண்ணா சொன்னார் என்று தத்துவம் பேசினார் ஒபிஎஸ். அத்தோடு சரி. சாதாரண ராஜ்ய சபா எம்பி யான மைத்ரேயனை சந்தித்த நிர்மலா தன்னை அவமானப்படுத்தியதை  ஒபிஎஸ் எப்படி விழுங்கினாரோ அப்படியே இன்று சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் ராஜ்ய சபா உறுப்பினர் நவநீதகிரிஷ்ணனும் விழுங்கி இருக்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய பாஜக பாதி அரசியல் கட்சிகள் புறக்கணித்த நிலையில் வந்திருந்த கட்சிகளை அரவணைக்காமல் குறிப்பாக அதிமுகவை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன?

இது என்ன அரசு சம்பந்தப்பட்ட கூட்டமா? விதிமுறைகள் இடம் தர வில்லை என கூற?    

அதிமுகவின் சார்பாக இருவரும் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்த அதிமுக தலைமையும் இந்த அவமானத்தை கண்டு கொள்ளவில்லை.

மீசையில் மண் ஒட்டாத குறையாக அமைச்சர் ஜெயக்குமார் இங்கே வியாக்கியானம் தருகிறார் அது ஒன்றும் பெரிதல்ல சாதாரணமான ஒன்றுதான் என்று. திமுகவின் டிஅர் பாலு இருந்தும் கலந்து கொள்ளவில்லை என்றும் சொல்கிறார். திமுக புறக்கணித்து விட்டது. எனவே அனுமதிக்கவில்லை என்ற பிரச்னை எழவில்லை.

ஒரு கூட்டணி கட்சியை இப்படி அவமானப்படுத்தலாமா என்றால் ஆடிட்டர் குருமூர்த்தி ஆர் கே நகரில் அதிமுக தோற்றபோது விமர்சித்த ‘ஆண்மையற்றவர்கள்’ என்ற ஆணவக் குரல் தான் நினைவுக்கு வருகிறது.

என்னதான் இருந்தாலும் தமிழ்நாட்டு அமைச்சரை அவமதித்தது நம்மையே அவமானப்படுத்தியது போல் இருக்கிறது.

This website uses cookies.