எல்லோரும் பாதுகாப்புக்கு கத்தி வைத்துக்கொள்ள வேண்டுமா? சுவாதி , வினுப்ரியா ,நந்தினி மரணங்கள் காட்டும் வழி???!!!

Share

பேஸ் புக்கில் வந்த ஆபாச படத்தை போலீசார் நீக்கியிருந்தால் ஆசிரியை வினுப்ரியா தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.   இறந்து மூன்று மணி நேரத்தில் அந்தப் படத்தை நீக்கிய போலீசாரை முன்பே செயல்படாமல் செய்தது எது?   பணமா?   மெத்தனமா???

சுவாதி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை செய்யப்  பட்டு போலீசால் விரைந்து செயல் பட்டு ராம்குமாரை கைது செய்ய முடிந்தது.   அதற்குள் எத்தனை விமர்சனங்கள்.    பிராமண பெண் கொலைஎன்றால் மெத்தனமா என்று ஒய் ஜி மகேந்திரன் கேள்வி எழுப்ப வேறு யார் சம்பத்தப் பட்டிருக்கலாம் என்பதற்கு விரிவான விசாரணை வேண்டும் என்று தலித் உணர்வோடு டாக்டர் கிருஸ்ணசாமி திருமாவளவன் போன்றவர்கள் கருத்து சொல்ல கொலையில் கூட சாதி முன்னுக்கு வந்த அவலம் சந்திக்கு வந்தது.       கிருஷ்ணமூர்த்தி என்ற வக்கீல் ராம்குமார் குற்றவாளி அல்ல என்று ஜாமீன் மனு போட அரசு வக்கீல் யார் சொல்லி இவர் மனு போட்டார் என்ற கேள்வி எழுப்பியவுடன் அவர் வாபஸ் வாங்க வக்கீல்கள் தானாகவே ஜாமீன் மனு  போடுவார்கள் என்ற உண்மை வெளியே வந்தது.

ஏ டி எம்மில் பணம் எடுக்க சென்ற தன்னிடம்  இருந்து பணத்தை பறிக்க முயன்ற குற்றவாளியை துரத்தி சென்று இடையில் ஒருவர் இறக்க தானும் கல்லில் மோதி இறந்தார்  ஆசிரியை நந்தினி.    காரணம் அங்கு இருந்த மதுக்கடை .    அதை நீக்கக் கோரி மக்கள் போராடி பயன் இல்லாத நிலையில் இந்த கொடூரம்.

குற்றவாளியை பிடிக்க முயன்று வெட்டுப் பட்டு இறந்த காவலருக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாயை இழப்புத் துகையாக அவரது குடும்பத்துக்கு வழங்கியது.      பாராட்டு.    இதே கடமை உணர்வுடன் செயல்பட்டு உயிரை இழந்த நந்தினி போன்ற பொது மக்களுக்கு என்ன ஈடு  ,யார் கொடுப்பது. ?

சென்னை கொலை நகரமாக மாறி வருகிறது.   வீட்டில் தனியே இருக்கும் பெண்களிடம் சங்கிலியை பறிக்கிறார்கள்.    உடனடியாக அரசு தக்க நடவடிக்கைகளை எடுத்து தடுக்கா விட்டால் பொதுமக்களே தங்கள் பாதுகாப்புக்கு அவரவரும் கத்தி வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும்.    சட்ட ஒழுங்கு கெடும்.

பல போராட்டங்களை சந்தித்த தமிழக அரசு அரசே எங்களை காப்பாற்று இல்லையேல் பதவி விலகு என்ற போராட்டத்தை  பொதுமக்களிடமிருந்து எதிர்  கொள்ள வேண்டி வரும்.

எம் ஜி ஆர் ஒரு காலத்தில் இதே போன்று எல்லாரும் கத்தி வைத்துக்  கொள்ளுங்கள் என்று சொன்னார். எதற்காக ஏன் சொன்னார் என்பதை தாண்டி அத்தகைய சூழல் இப்போது வந்து விட்டதா என்ற கேள்விக்கு ஆளும் கட்சி பதில் சொல்லியே ஆக வேண்டும்.

This website uses cookies.