தமிழக அரசியல்

அன்புமணியால் சாதிக்கட்சி முத்திரையை உடைக்க முடிந்ததா???

Share

டாக்டர் ராமதாசும் சரி அன்புமணியும் சரி பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சாதிக்கு அப்பாற்பட்டது என்று நிரூபிக்க பாடாய்ப் பட்டார்கள்.     முடிந்ததா?

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை பக்கத்தில்  வைத்துக் கொண்டு மற்ற எல்லா சாதியினரும் எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் யார் வருவார்கள்.

எல்லா தனித் தொகுதிகளிலும் வேட்பாளர்களை  பா ம க சார்பில் நிறுத்தினீர்கள்.  பாராட்டு.     அந்த மக்கள்  ஒட்டு போட்டார்களா?   ஏற்றுக் கொண்டார்களா?

எல்லா சாதி வேட்பாளர்களையும்  நிறுத்தினீர்கள் .     எந்த சாதியும் உங்களை நம்ப வில்லையே?

பணத்தை நம்பாமல் செயல் திட்டங்களை முன் நிறுத்தினோம் என்றீர்கள்.  சரி. நீங்கள் செலவு செய்த நூற்றுக்கணக்கான கோடிகள் உங்களுக்கு எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்ததே?   மக்களுக்கு விளக்கம் அளித்தீர்களா?

கடைசி வரை எங்களுக்கு யாரும் தேவையில்லை என்று  நீங்கள் பேசியது நம்பிக்கையா அகங்காரமா?

நடந்தது ஒரு தேர்தல்  யுத்தம்.     அதில்  நியாய அநியாயங்கள் பேசிக் கொண்டு எதில் வெல்ல விரும்புகிறீர்கள்.?   இங்கு வெற்றி   தோல்வி மட்டுமே கணக்கிடப்படும்.

நீங்களும் பணம் கொடுத்து வெல்ல முயற்சி செய்யுங்கள் என்று சொல்ல வில்லை.

தெரிந்தே தோற்க முயற்சித்தது ஏன் என்பதே கேள்வி.

உங்களால்  தி மு க வின் வெற்றியை தடுக்க முடிந்திருக்கிறது.     யார் வந்தால் என்ன என்று நீங்கள சொல்வீர்களே ஆனால் உங்களுக்கும் பணம் வாங்கிக்கொண்டு விஜயகாந்தை தி மு க பக்கம் செல்லாமல் பார்த்துக்  கொண்டதாக குற்றம் சாட்டப்படும் வைகோவுக்கும் என்ன வேறுபாடு?

யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவே மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறீர்களா?

உங்கள் அணுகுமுறையில் மாற்றம் வருமா  வராதா ?

வடக்கு மாவட்டங்களை தவிர உங்களுக்கு தமிழகத்தில் எங்கும் சுயேச்சைகளுக்கு இருக்கும் மரியாதைதான் என்று தெரிந்த பின் என்ன செய்யப் போகிறீர்கள்?

தோல்விக்கான  காரணங்களை ஆராய்ந்து பார்க்கவே மாட்டீர்களா?

குறைந்த பட்சம் சீமானோடும் திருமாவளவனோடும் கிருஷ்ணசாமி     யோடும்  இதர ஒத்த கருத்தை கொண்ட  தமிழர் தலைவர்களோடும் நீங்கள் ஒத்துப்  போக முடியுமா என்று ஆராய்ந்து பாருங்கள்.!

யாருமே வேண்டாம் நானே தலைவன் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் வரலாறு உங்களை மன்னிக்கவே மன்னிக்காது.

This website uses cookies.