Connect with us

திருமுருகன் காந்தி சிறையில் இருந்து உயிருடன் திரும்பினார்?

thirumurugan-gandhi

தமிழக அரசியல்

திருமுருகன் காந்தி சிறையில் இருந்து உயிருடன் திரும்பினார்?

திருமுருகன் காந்தி சிறையில் இருந்து உயிருடன் திரும்புவாரா என்ற கேள்வி அவரது ஆதரவாளர்களால் எழுப்பப் பட்டு வந்தது.

தமிழ் உணர்வாளர்கள் போராட்டக்காரர்கள் அடக்கு முறைக்கு ஆளாகி பல வழிகளிலும் சித்திரவதைக்கு ஆளாவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.    ஆனால் இவையெல்லாம் செய்திகளாக மக்களுக்கு கொண்டு செல்லப் படுகின்றனவா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

அவருக்கு சிறையில் கொடுக்கப்படும் உணவில் ஏதோ கலந்து கொடுக்கிறார்கள்.  அதனால் அவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகிறார் என்று அவரது  இயக்கத்தினர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

அவரை முழுவதுமாக மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்குகிறார் களா ?   ஏன் அவரை தனிமை சிறையில் வைக்க வேண்டும்?   அத்துணை அளவு அவர் பயங்கரவாதியா?    மனித உரிமை பாதுகாப்புக்காக ஐ நா வில் அவர் பேசியது மட்டும்தான் குற்றம் என்றால் அது மிகப்பெரிய கொடுமை.    அரசியல் அமைப்புக்கு உட்பட்டு போராடுவது குற்றமா?  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப் பட்டவர்கள் பற்றி ஐ நா வில் பேசியது எப்படி தேச விரோதம் ஆகும்?

தமிழ் ஊடகங்கள் விலை போய்விட்டனவா?    காவல்துறையின் அத்துமீறல்களை எத்தனை ஊடகங்கள் மக்களுக்கு கொண்டு சென்றிருக்கின்றன?     நீதிமன்றங்கள் இல்லை என்றால் பல தமிழ் உணர்வாளர்கள் போராட்டக்காரர்கள் இன்று உயிருடன் இருக்கவே முடியாது என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா?    தமிழ் ஊடகங்கள் இதில் காட்டும் பாராமுகம் தான்  நம்மை மிகவும் வருத்துகிறது.    இன்றைக்கு இருக்கிற அரசு அதிமுக அரசு அல்ல என்பதும் பாரதிய ஜனதா கட்சி யின்  பொம்மை அரசு என்பதும்  எல்லோருக்கும் தெரியும்.    ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பாரதிய ஜனதாவின் சித்தாந்தத்திற்கு எதிராக பேசுபவர்கள் எழுதுபவர்கள் பிரச்சாரம் செய்பவர்கள் அத்தனை பேரையும் சித்திரவதை செய்து அடக்கும் முயற்சியில் மாநில அரசு தானாக செய்கிறது என்று யாரும் நம்பவில்லை.    தங்கள் ஆட்சி அமைவதற்கு தடையாக இருப்பவர்களை அகற்றும் முயற்சியில் யார் இருக்கமுடியும்?

இ பி எஸ் – ஓ பி எஸ் – சே குவாரா –பிடல் காஸ்ட்ரோ போன்றவர்கள் என்று பேசி ஜெயக்குமார் இந்த ஆட்சியின் இருப்போர்களின் தரத்தை வெளிப்படுத்தி விட்டார்.    போராளிகளை இத்தனை இழிவு படுத்தியிருக்க வேண்டாம்.

திருமுருகன் காந்தி  மீது 30 வழக்குகளா?     அவரை சிறையில் சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டுகள்  பற்றிய உண்மைகளை தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களுக்கு ஏன் முழுமையாக கொண்டுசெல்லவில்லை?   சட்டத்தை பயன்படுத்தி அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக பாசிச கொள்கைகளுக்கு வலு தேடுவோர் தாங்களாக திருந்துவார்கள் என்று ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது .    மக்களின் விழிப்புணர்வால்  தேர்தலில் வெற்றி பெற முடியாது என்கின்ற ஒரு அச்ச உணர்வு மட்டும்தான் அவர்களை திருத்த முடியும்.

அந்த வகையில் திருமுருகன் காந்தி மட்டுமல்ல  போராடும் மாணவ-மாணவிகள் அத்தனை பேருக்கும் இந்த அரசு காவல்துறையை கையில் போட்டுக்கொண்டு இழைக்கும் அநீதிகள் பற்றிய செய்திகள் மக்களுக்கு வலுவாக பிரச்சாரம் செய்யப் பட்டால் தான் ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமாவது அச்சம் வரும்.

இல்லையேல் பாசிச ஆட்சியாளர்களுக்கு ஊடகங்கள் விலை போய் விட்டன என்ற கருத்துதான் வலுப்பெறும்.     திருமுருகன் காந்தி உயிருடன் வெளியே வருவாரா என்று  சிலர் அச்சம் தெரிவிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம்  அவருடைய பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு  பாரதிய ஜனதா எதிர்ப்பு , ஏழை மக்களின் உரிமை பாதுகாப்பு ஆகிய குரல்கள்தான் .

இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போதே அவர் வேலூர் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப் பட்டார் என்று செய்தி வந்திருக்கிறது.  நல்லது. சிறை அனுபவங்களை அவர் நேரிடையாக பேசலாம்.

ஊடகங்கள் திருந்துமா ? காவல் துறை உங்கள் நண்பனாக மாறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top