Latest News

படிப்படியாக வருமா மதுவிலக்கு !! பொடிப்பொடியாக உதிருமா உறுதிமொழி??? மக்கள் போராட்டமே இறுதி வழி!!!

Share

டாஸ்மாக்கின்    500     கடைகளை மூடவும் இரண்டு மணி நேரம் குறைக்கவும் உத்தரவிட்ட ஜெயலலிதாவின் உண்மை முகம் உயர்நீதி மன்றத்தில் மதுவின் தீமைகள்  குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களை அமுல்படுத்த குழு அமைக்க தேவையில்லை என்று வாதிட்டபோது வெளிப்பட்டது.

மதுவிலக்கை அமுல்படுத்து வதில் தமிழக அரசுக்கு அக்கறை இருக்கும் பட்சத்தில் அப்படி ஒரு குழுவை அமைக்க ஏன் ஆட்சேபிக்க வேண்டும்?

10581 என்ற மக்கள் குறை தீர்க்கும் தொலைபேசி எண்  உபயோகத்தில் இல்லை என்று உயர்நீதிமன்றமே உறுதி செய்து கொண்டது.

உயர் நீதி மன்றம் தானாக முன்வந்து நீங்கள் அமைக்க விட்டால் நாங்கள் அமைப்போம் என்று சொன்னவுடன்  அரசு வழக்கறிஞர் நாங்களே அமைக்கிறோம் என்று உறுதி அளிக்க இரண்டு வாரத்தில்  குழு அடுத்த இரண்டு மாதத்தில் அறிக்கை என்று உத்தரவிடப் பட்டது.

இடையில் டாஸ்மாக் நிர்வாகம் கூடி மூட வேண்டிய 500  கடைகளை அடையாளம் கண்டு அறிக்கை தயாரித்திருப்பதாக செய்திகள் வருகின்றன.      மொத்தமுள்ள  28000   ஊழியர்களில்    2500 பேர் மட்டும் இப்போது மாற்று வேலைக்கு அனுப்பப் பட இருக்கிறார்கள்.

படிப்படியாக மதுவிலக்கு என்று ஜெயலலிதா சொன்னபோது காலக்கெடு எதுவும் சொல்லவில்லை.   அது அடுத்த ஐந்து ஆண்டுகளாகவும் இருக்கலாம்.

ஆண்டுக்கு 500  கடைகளை மூடினால் முழுவதும் மூட 11  ஆண்டுகள் வேண்டியிருக்கும்.

பிரச்சினை பெரிதானது எதனால்?     15000  கோடியாக இருந்த வருவாய்     30000 கோடியாக உயர்ந்தபோது   மதுவின் தாக்கம் பெரிதானது.

பீகாரில் முழு மதுவிலக்கு அமுல் படுத்தப் பட்ட பின் குற்றங்கள்  27 % குறைந்திருப்பதாக  நிதிஷ் குமார் கூறுகிறார்.       அங்கே படிப்படியாக என்றெல்லாம்  அவர் மாய்மாலம் செய்யவில்லை.

உண்மையிலேயே மதுவிலக்கு அமுல் படுத்தினால் என்ன விளைவுகள் எதிர் பார்க்கிறோமோ அது வர வேண்டும்.   அது என்ன?

டாஸ்மாக்  வருமானம் பாதியாக குறைய வேண்டும்.    அதுவே அளவுகோல்.     பின்பு முற்றாக நிற்க வேண்டும்.

அப்படி இல்லாமல் கடைகளை குறைக்கிறோம் நேரத்தை குறைக்கிறோம் என்று நாடகம் ஆடினால்  அதில் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

மாற்று வருவாய் பற்றி அரசு இப்போதே  திட்டமிட்டு வெளியிட்டால் அது நம்பகத் தன்மையை வளர்க்கும்.

நாடகமாடியே ஐந்து ஆண்டுகளை ஒட்டி விடுவார் ஜெயலலிதா என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு .

உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் குறிப்பிட்ட காலத்தில் அதாவது ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் காலக் கெடுவுக்குள் நான்  பூரண மதுவிலக்கை அமுல் படுத்துவேன் என்று ஜெயலலிதா அறிவிக்க வேண்டும்.

அப்படி அறிவிக்க தவறி  வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுக் கொண்டு ,    டாஸ்மாக்   வருமானத்தை தக்க  வைத்துக் கொண்டு , மக்களை  ஏமாற்றி  விடலாம் என்று திட்ட மிட்டால் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

ஓராண்டில் அமுல்படுத்து ? இல்லையேல் பதவி விலகு என்ற போராட்டத்தின் குரல் கேட்கும் நாள்   தொலைவில் இல்லை.

This website uses cookies.