அணுகுண்டை தீபாவளி வெடியுடன் ஒப்பிடும் மோடியின் அச்சம் தரும் மனநிலை ??!!

modi
modi

அணுகுண்டு – மனித குலத்துக்கு விளைத்த நாசத்தால் அதை கண்டு பிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே பின்னர் வருந்தினார் என்பது வரலாறு. உண்மையில் அணுகுண்டை கண்டுபிடித்தவர் ராபர்ட் ஒப்பென்ஹீமர் என்றாலும் ஐன்ஸ்டீன் பெயரே முதன்மைபடுத்தப் படுகிறது. நிற்க.

வாஜ்பாய் காலத்தில் போக்ரான் அணு சோதனை நடத்தி நமது வல்லமையை உலகுக்கு உணர்த்தி விட்டோம். மூன்று முறை நம்மிடம் அடிவாங்கி ராணுவ ரீதியில் இந்தியாவை ஒருபோதும் வெல்ல முடியாது என்பதை பாகிஸ்தான் உணர்ந்தே இருக்கிறது. பங்களா தேசம் பிறந்த போது 90000 பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் பிடியில் இருந்தனர். உலகநாடுகள் தலையீட்டில் விட்டோம். அப்போது அவர்களை விடாமல் காஷ்மீர் பிரச்னையை நிபந்தனை வைத்து தீர்த்திருக்க வேண்டும் என்கிறார் நமது பிரதமர்  மோடி. நல்ல வாய்ப்பை இந்திரா காந்தி நழுவ விட்டு விட்டாராம். நல்லவேளை இவர் அப்போது பிரதமராக இல்லை.

இன்று பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அணுஆயுதம். ஆனால் அவர்களுக்கும் தெரியும் அவர்கள்  அணு  ஆயுதத்தை எடுத்தால் இந்தியா வாவது இழப்புகளை தாங்கியும் வாழும். ஆனால் இந்தியா அணுகுண்டுகளால்  தாக்கினால்  பாகிஸ்தான் நாடே இருக்காது.    இருந்தாலும் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் எப்போதாவது தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்காவும் தேர்தல் வெற்றிக்காகவும் அணு ஆயுதத்தை பற்றி பீற்றிக் கொள்வது வழக்கம். அதற்கெல்லாம் எந்த இந்திய பிரதமரும் முறைகேடாக பதில் சொன்னது இல்லை.

ஆனால் வர வர மோடியின் பேச்சுக்கள் தரம் தாழ்ந்து கொண்டே போகிறது. ஒரு கட்சி தலைவராக அவர் எப்படி பேசினாலும் பரவாயில்லை. ஒரு பிரதமராக பொறுப்புடன் பேச வேண்டும்.

அபிநந்தன் விடுதலை தான் கொடுத்த மிரட்டலால் தான் நடந்தது என்கிறார். இப்படியெல்லாம் மிரட்டல் செய்யக்கூடாது என்றால் நான் எதற்கு பஜனை செய்யவா இருக்கிறேன் என்கிறார்? பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருந்தால் எங்களுக்கு என்ன?  நாங்கள் மட்டும் தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டுகளை பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்கிறார்.

உலக நாட்டுத் தலைவர்கள் நம்மை மதிப்பார்களா?   போர் வெறி கொண்ட நாடாக அல்லவா நாம் பார்க்கப் படுவோம்.

ஆனால் சீனாவை நோக்கி மட்டும் எந்த சவாலையும் மோடி விடுக்க மாட்டார்.

மோடி ஆதரவாளர்கள் புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆகா நமது மோடி எப்படி சவால் விடுக்கிறார் பாருங்கள் என்று??!   சவால் விடுவதும் சவடால் அடிப்பதுவமா பிரதமர் வேலை?

இவருக்கு பதிலை இம்ரான்கான் சொல்லவில்லை. காஷ்மீரின் மெகபூபா முக்தி சொன்னார், ‘பாகிஸ்தான் மட்டும் ஈத் பெருநாளுக்கு வெடிக்கவா அணுகுண்டு வைத்திருக்கிறது’ என்று.

இந்த வெறிப்   பேச்சுக்கள் இரு நாடுகளுக்கு இடையே இணக்கத்தை பேண உதவுமா?

எனவே  சிந்தனையாளர்கள், நல்லோர் அச்சமடையவே செய்வார்கள்.

ஒரு பிரதமர் வெறும் தலைவர் அல்ல. நாட்டின் எதிர்காலத்தின் பாதுகாவலர்.  அதனால்தான் தன்னை சௌகிதார், காவலாளி, என்று மோடி சொல்லிக் கொள்கிறார். ஆனால் நடத்தையில் நேர் மாறாக இருக்கிறது மோடியின் வார்த்தைகள். மக்களின் உணர்ச்சிகளை தூண்டி தன் தலைமையை ஏற்றுக் கொள்ளசெய்வதே அவரது இலக்கு.

சமாதான காலத்துக்கான பிரதமர் மோடி அல்ல. எப்போதும் சண்டையை எதிர் பார்க்கச் செய்து  அரசியல் வெற்றி பெற நினைக்கும் சாதாரண அரசியல்வாதி.

பிரதமர் தரத்தில் இருக்கிறதா நரேந்திர மோடியின் பேச்சுக்கள் என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

2014  ல்  ஹீரோவாக பார்க்கப் பட்டவர்  2019 ல் ஜீரோவாக ஆகிவிட்டார்.      பயனில்லை என்றால் இவரையும் அமித் ஷாவையும் தூரத்தில் வைத்து விடும் சங்கம்.    அத்வானி ஜோஷியை விட இவர்கள் எம்மாத்திரம்!

ஒன்று மட்டும் உறுதி. தேர்தல் முடிவுகள் எப்படியோ. இவர் மட்டும் பிரதமராக மீண்டும் ஆனால் இந்தியா பெயரளவுக்குத்தான் ஜனநாயக நாடாக நீடிக்கும்.    சர்வாதிகாரம் புது வடிவில் அரங்கேறும். அதையும் நியாயப் படுத்தும் ஆதிக்க சக்திகள்.

ஆம். உண்மையில் மோடியை நினைத்தால் அச்சமாகத்தான் இருக்கிறது.