சினிமா – ஆமிர், ஷாருக் ,சல்மான் கான் பட போஸ்டர்களை கிழியுங்கள்! பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் சாத்வி பிராச்சி தூண்டுதல்!

              இந்து சக்திகள் மோடியை தூங்க விட மாட்டார்கள் என்பது நிச்சயம்.

                கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி தனது அரசின் மதம் முதலில் இந்தியா என்பதே என்றும் மத நூல் அரசியல் சாசனம் என்றும் பேசினார்.     மத துவேஷத்தை சகித்துக்கொள்ள மாட்டோம் என்றும் முழங்கினார்..

                 இந்துப் பெண்கள் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று  பேசிய அதே சாத்வி பிராச்சிதான்  மீண்டும் தனது  மத வெறிபேச்சை தொடர்ந்திருக்கிறார்..
                யாரோ ஒரு குழந்தை தான் ஹ்ரித்திக் ரோஷன், சல்மான் கான் ,ஆமிர் கான் , ஷாருக் கான் போல் வர வேண்டும் ஏனென்றால் அவர்கள் நன்றாக சண்டை போடுகிறார்கள் என்று சொன்னதாம்.    எனவே இவர்கள் வன்முறையை தூண்டுகிறார்கள் என்றும் எனவே இவர்கள் பட போஸ்டர்களை கிழியுங்கள் என்றும் பேசியிருக்கிறார்.    ஹ்ரித்திக் இந்து என்பதால் அவரை மட்டும் விட்டு விட்டார். 
                இப்படிப் பட்டவர்கள் பாராளு மன்ற உறுப்பினர்களாக இருந்தால் நாடு என்னாகும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடிய வில்லை. 
                இதுவரை அவர்கள் மீது எந்த விதமான வகுப்பு வாத குற்றச்சாட்டும் எழாத கலைஞர்களாக மட்டுமே அவர்கள் பார்க்கப் படுகிறார்கள். 
                 ஷாருக் கான் , ஆமிர் கான் இருவரும் இந்துப் பெண்களை  திருமணம் செய்து கொண்டு அவர்களை இந்துக்களாகவே வாழ அனுமதித் திருக்கிறார்கள். 
                  எப்படி இருந்தாலும் மதம் என்பது கலை உலகை பொறுத்த வரையில் தனிப்பட்ட ஒன்றாகவே இதுவரை இருக்கிறது. 
                 சமீபத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை பெற்ற பி.கே. என்ற ஆமிர் கானின் படம் சில இந்து சக்திகளால் மோசமாக விமர்சிக்கப் பட்டது. .  இத்தனைக்கும்  அந்த படத்தை பார்த்து எல்.கே. அத்வானி அவர்கள் மிகப் பிரமாதம் என்று பாராட்டுரை வழங்கி இருந்தார்.     ஏனென்றால் அந்த படத்தில் கடவுள் எந்த மதமும் இல்லை என்பதை மனதில் படும்படி காட்சிப் படுத்தி இருந்தார்கள். 
                மோடி அவர்களே ,சாத்விகளை கட்டுப் படுத்துங்கள். . தவறினால் அவர்கள் உங்களை தோற்கடித்து விடுவார்கள். 
                 அரவிந்த் கேஜ்ரிவால்கள் டெல்லியில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் காத்திருக்கிறார்கள். 

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)