தமிழில் தீர்ப்புகள் இனி வருமா?? மாநில நீதித்துறைகளை சிதைக்க பாஜக அரசு திட்டம்!

இந்தியன் ரெவின்யு சர்விஸ், இந்தியன் போலிஸ் சர்விஸ், போல இந்தியன் ஜுடிசியல் சர்விஸ் ஒன்றைக் கொண்டு வர பாஜக வின் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இப்போதுதான் மாவட்ட அளவில் தமிழில் தீர்ப்புகள் வருகின்றன. வழக்கு நடத்துவது சாட்சியம் விசாரிப்பது ஆவணங்கள் தாக்கல் செய்வது என்று அனைத்தும் தமிழில் நடப்பதால் பொதுமக்கள் ஓரளவு வழக்கின் தன்மைகளை புரிந்து கொண்டு வருகிறார்கள்.

உயர்நீதிமன்றத்திலும் தமிழில் எல்லாம் வரவேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தியன் ஜுடிசியல் சர்விஸ் என்ற ஒன்றை உருவாகி மாவட்ட நீதிபதிகள் முதற்கொண்டு நியமனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடுகிறது பாஜக அரசு. முன்பே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2009, 2013ல் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட திட்டம் அது.

இப்போது மீண்டும் அதை கொண்டுவர அவசியம் என்ன?

மாநில உரிமைகளை தட்டிப் பறிக்கும் வேலைகளில் தொடர்ந்து இறங்கி வருகிறது  பாஜக அரசு.

மாநில அரசுகள் வசம் உள்ள அதிகாரத்தை மத்திய அரசு தட்டிப் பறிக்க நினைக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி களுக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் அதிகார சண்டையை  முதலில் தீர்த்துக் கொள்ளட்டும்.

மிகக் கொடிய அதிகார பறிப்பு திட்டம் இது.

சாட்சி விசாரணை, ஆவண தாக்கல், வாக்குமூல பதிவுகள் போன்ற அனைத்து வகைகளிலும் மாநில மொழி குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கிறது. அதை மாற்றுவீர்களா?

வெளி மாநிலத்தவர் தேர்வு எழுதி இங்கு வந்து நீதி பரிபாலனம் செய்யப் போகிறார்களா?

ரயில்வேயில் நடந்த மோசடி போல அரியானா மாநிலத்தில் இருந்து தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்றதாக சான்று வாங்கி பணியில் சேர்ந்தார்களே அதைப் போன்ற மோசடிகள் தான் நடக்கும்.

உச்சநீதி மன்றங்கள் தவிர அனைத்து நீதி மன்றங்களும் பொதுப்பட்டியலில் உள்ளதால் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாநில அரசு தன் அதிகாரத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கக் கூடாது.

இன்னும் என்ன செய்வார்களோ என்று தினம் தினம் அச்சத்தை அதிகரித்துக் கொண்டே போகிறது பாஜக வின் மத்திய அரசு!!!

எங்கே கொண்டு போய் விடுமோ இந்த ஆதிக்க வெறி ?!

Share