Connect with us

மாட்டிறைச்சித் தடை ; இன்னும் என்னவெல்லாம் செய்யும் இந்துத்துவ வெறி?!

Latest News

மாட்டிறைச்சித் தடை ; இன்னும் என்னவெல்லாம் செய்யும் இந்துத்துவ வெறி?!

மாட்டு சந்தையை நெறிப் படுத்துகிறோம் என்ற சாக்கில் மாட்டு இறைச்சியை உண்பவர்களின் உரிமையை பறிக்க மோடியின் மத்திய அரசு முடிவெடுத்து அறிவித்திருப்பதுதான் இன்னும் இவர்கள் என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் பாதிக்கப் போவது பெரும்பாலும் தலித்துகளும் கிறிஸ்தவ முஸ்லிம்களும்தான்.

ஒரு  முஸ்லிம் உறுப்பினர் கூட இல்லாமல்    எங்களால் மத்தியில் ஆட்சியில் அமர முடியும் என்று பா ஜ க நிருபித்து விட்டது.      ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட இல்லாமல் உ பி யில் ஆட்சியில் அமர முடியும் என்பதையும் நிருபித்து ஆகிவிட்டது.      ஏன் இனி முஸ்லிம்களை  பற்றி கவலை கொள்ள வேண்டும் ?   அவர்கள் ஆதரவு தேவை இல்லை கிடைக்காது என்றான பிறகு அவர்களின் எதிர்ப்பை பா  ஜ க இனி கண்டு கொள்ளாது.

இந்துத்துவ சாம்ராஜ்யத்தை        நிறுவ  முயலும் ஆர் எஸ் எஸ் சின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் என்ற கனவில் மிதக்கிறார்கள் அவர்கள்.       அகில இந்திய ரீதியில் காங்கிரஸ் பலவீன மடைந்து விட்டது.    இடது சாரிகள் வலுவில்லாதவர்கள்.    அணி   சேர்த்தெல்லாம்    இனி தோற்கடிக்க முடியாது என்ற அகங்காரம் பா ஜ க விற்கு.

தமிழ் நாட்டிலேயே இரு அ தி மு க பிரிவையும் கைக்குள் கொண்டு வந்தாகி விட்டது.     ரஜினியை தனி கட்சி ஆரம்பிக்க வைத்து தமிழ் கைக்கூலிகளையும் கோடரிக் காம்புகளையும் துணை சேர்த்து திராவிட பாரம்பரியத்தை சரித்து விடலாம் என்று பா ஜ க திட்டமிட்டு விட்டது.

சாதிகளால் பிரிந்து கிடக்கும் தமிழ் சமுதாயம் இந்த சவாலை எப்படி எதிர் கொள்ளப்  போகிறது?

எதிர்ப்பு வரும் என்று தெரிந்தே  எடுத்த முடிவு இது.        அடக்கி விடலாம் என்ற வெறியும் இதில் உள்ளடக்கம்.

ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்தில் ஆடு கோழி பலியிடுவதை தடுக்க சட்டம் கொண்டு வந்து அதனால் எழுந்த எதிர்ப்பலைகளை கண்டு சட்டத்தை திரும்ப பெற்றவர்தான்.

இந்த முடிவுக்குப் பின் இருப்பது ஜீவ காருண்மயமா  அல்லது   இஸ்லாமிய எதிர்ப்பா?

ஜீவ காருண்யம் என்றால் மீன், கோழி , ஆடுகளை மக்கள் உணவாக கொள்வதை அரசால் தடுக்க முடியுமா?

உலகில் சைவ உணவை கட்டாயமாக்க முடியுமா?    பன்றி, நாய் பூனை, எலி, தவளை, பாம்பு , என்று  பல உயிரினங்கள் மனிதர்களுக்கு உணவாக ஆகின்றன.      இவற்றை சட்டம் போட்டு தடுக்க முடியுமா?

கொல்லாமை உயர்வானது என்பதில் ஐயம்  இல்லை.    ஆதி காலம் தொட்டு மனிதன் மிருக இறைச்சியை உணவாக கொண்டு இருக்கிறான்.     அதை சட்டம் போட்டு தடுக்க முடியாது.

மாட்டு சந்தைகள் இனி மதிப்பிழக்கும்.    பாதிக்கப் படப போவது விவசாயிகள்தான்         பயன் முடிந்த மாடுகளை விற்று தன் தேவைகளை பூர்த்தி செய்து வந்தவர்கள் இனி அவைகளை வைத்து காப்பாற்றவும் முடியாமல் விற்கவும் முடியாமல் சிரமப் படுவார்கள்.

வேடிக்கை என்னவென்றால் மாடு வெட்டும் கூடங்களை அரசு தடை செய்ய வில்லை.     மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வில்லை.    இதில்  ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் பெரு முதலாளிகளே!

கோவில்களில் பலியிடவும் கூடாது என்ற உத்தரவும் மத ரீதியிலானது.      இத்தனைக்கும் வேத காலத்தில் பசு மாமிசம் உண்ணப் பட்டது என்பது நிருபிக்கப் பட்டுள்ளது. எனவே மத ரீதியில் கூட இதற்கு துணை கிடைக்குமா என்பது சந்தேகமே!

மாடுகள் கன்றுகள் எருமைகள் ஒட்டகங்கள் என்று தடைப் பட்டியலில் இடம் பெற்றும் மிருகங்களின் பட்டியல் நாளை நீளலாம்.

கால் நடைகள் மாநிலப் பட்டியலில் இருக்கும்போது மத்திய அரசு சுற்றுச் சூழல் அமைச்சகம் மூலம் மாநில  உரிமைகளில் கை வைத்திருக்கிறது.

மாநிலங்களில் வலுவான தலைமைகள் இருந்தால் இவைகள்  குறையும்.

மேலோட்டமாக பார்த்தால் இது மாட்டிறைச்சித் தடை .    ஆராய்ந்தால் பார்ப்பன சதி.      பார்பனரல்லாத  இந்துக்கள் பெரும்பாலும் மாட்டு இறைச்சி சாப்பிடுவதில்லை.     ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் ஏன் சாப்பிடுகிறார்கள் என்றும் கேட்பதில்லை.        ஆனால் மேல்சாதி பார்பனர்களுக்கு மட்டும்தான் இது உறுத்தலாக  இருக்கிறது.  எனவே சதி செய்து சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.     இது நிலைக்காது.     நீதிமன்ற ஆய்விலும் நிற்காது. சட்டத்துக்கு புறம்பான எதுவும் நீதி மன்ற அங்கீகாரம் பெறாது.

நிலைக்காது என்றாலும்  மத வெறியர்களை   அடையாளம்  காண இந்த சட்டம் உதவும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top