Connect with us

ராமானுஜர் பெயரைச் சொல்லி ஏமாற்றும் வைணவர்கள்? ஏமாறும் தமிழர்கள்?

மதம்

ராமானுஜர் பெயரைச் சொல்லி ஏமாற்றும் வைணவர்கள்? ஏமாறும் தமிழர்கள்?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப் பட்டோருக்காக போராடியவர் ராமானுஜர் என்று ஆழ்வார்கள் ஆய்வு மையம் விழாவில் ஆர்.எம்.வீரப்பன் பேசியிருக்கிறார்.

இவர் தலைவர். நிறுவன செயலாளர் ஜெகத்ரட்சகன். தளராத வைணவ பக்தி உள்ளவர் ஜெகத்ரட்சகன். வன்னிய குல சத்திரிய வகுப்பை சேர்ந்தவர்கள் வைணவர்கள். அரசியல் கட்சி கொள்கை எப்படி இருந்த போதும் தான் சார்ந்த வைணவ சம்பிரதாயத்தை மதித்து ஆழ்வார் மையத்தை இருவரும் நடத்தி வருகிறார்கள்.

தமிழ் வேதம் என்னும் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆழ்வார்கள் புகழை பறை சாற்றும் படைப்பு. தமிழ் ஒருவனுக்கு கைவர வேண்டும் என்றால் அவனுக்கு நாலாயிரம் பாடத் தெரிய வேண்டும் என்பது பாரதிதாசன் கருத்து. 

ஆண்டாள் தந்த திருப்பாவை தமிழ்த்தாயின் அணிகலன்.

ராமானுஜர் தொடரை எழுதிய கலைஞர் அதற்கு மதத்தில் புரட்சி செய்த மகான் என்று தலைப்பு விளக்கம் கொடுத்தார். அதாவது ராமானுஜரின் கருத்தில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ ராமானுஜர் தன் மதத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகளை நீக்க போராடினார் என்பதுதான் அவருக்கு தனிச்சிறப்பு என்பதை விளக்கத்தான் அவர் அந்த தொலைக் காட்சி தொடருக்கு வசனம் எழுதினார்.

ராமானுஜர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உச்சரிக்கவும் வழிபாடு செய்யவும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். ஏனென்றால் அவர் ஏற்றுக் கொண்ட விசிட்டாத்வைதம் Qualified Non-Dualism  தத்துவம் இறைவன் வேறு மனித ஜீவன் வேறு என்பது தவறு என்பது தான்.

கி பி 1017-1137 வரை கோலோச்சிய ராமானுஜரின் செல்வாக்கு அவருக்குப்பின்  வடகலை-தென்கலை என்று பிரிந்தது. இறைவன் தன் காக்கும் கடமையை செய்வான் ஜீவன்தான் குரங்குக் குட்டியைப் போல் இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பது வடகலை, இறைவன் தன் காக்கும் கடமையை பூனைக்குட்டி தன் குட்டியை கவ்விக் கொள்வதைப் போல் செய்வான் அதற்கு ஜீவன் ஏதும் செய்யத் தேவையில்லை என்பது தென்கலை.

வைணவர்கள் எல்லாருக்கும் வழிபடும் உரிமை உண்டு என்று சொன்ன ராமானுஜரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா? வழிபடும் உரிமை என்பது எட்டத்தில் இருந்து கும்பிடுவது மட்டும் அல்ல. இறைவனுக்கு சேவையை தன் கரங்களால்  செய்யும் உரிமை உட்பட என்பதுதான்.

ஆனால் இவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நடைமுறையில் இயங்கும் வைணவம் என்பது என்ன?

பார்ப்பனர்கள் வைணவர்கள் என்றும் சைவர்கள் என்றும் பிரிந்து இருந்தாலும் மற்றவர்களை ஒதுக்கி வைப்பதில் மட்டும் ஓன்றாக இருக்கிறார்களே எப்படி? 

வைணவம் பார்ப்பனீயத்தை அங்கீகரிக்கிறதா? இறைப்பணி செய்யும் வேலையில் மற்றவர்களை பார்ப்பனர்கள் ஏன் சேர்த்துக் கொள்வதில்லை?

சாதியை வைணவம் எப்படி ஏற்றுக் கொள்கிறது?

பிரபந்தங்களை எல்லா சாதிக்காரர்களும் இயற்றி இருக்கிறார்கள் என்பது மட்டுமே எல்லாரும் சமம் என்பதை வைணவம் ஏற்றுக் கொள்கிறது என்பதற்கு சான்றாகுமா?

மையம் நடத்தும் தமிழர்கள் தாங்களும் ஏமாந்து மற்ற தமிழர்களையும் ஏமாற்றிக்  கொண்டிருக்கிறார்கள்.

தமிழை வைணவர்கள் வளர்த்தார்கள் என்பது உண்மையாகவே இருக்கட்டும். தமிழர்களை வளர்த்தார்களா? தமிழனை அடிமை கொள் தமிழை வளர் என்று வைணவம் சொன்னதா?

ஆய்வு மையம் முதலில் இதை ஆய்வு செய்யட்டும்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top