பொன்னமராவதி, பொன்பரப்பியில் சாதிய வன்முறையில் தடுமாறும் தமிழர் அடையாளம் ??!!

ponparappi
ponparappi

பொன்பரப்பி – இரண்டாவது முறையாக பிரபலப்படுகிறது.

முதல் முறை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தமிழரசன் வங்கியை கொள்ளையடிக்கும் போது பொதுமக்களாலேயே கல்லால் அடித்து கொல்லப்பட்டார்.

இப்போது பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவனின் பானை சின்னத்திற்கு வாக்களிக்க இருந்த குற்றத்திற்காக தலித் வீடுகள் இந்து முன்னணி யினர் – பாமக கூட்டு முயற்சியில் அடித்து நொறுக்கப் பட்டிருக்கின்றன. 

இரு தரப்பும் வழக்கு – சாலை மறியல்  போராட்டம் என்று இறங்கி விட்டார்கள்.    காவல் துறை வழக்கம் போல நடவடிக்கையில் சுணக்கம் காட்டி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி – யாரோ இரண்டு பேர் வெளிநாடு ஒன்றில் இருந்து வாட்ஸ் அப்பில் ஒரு சமுதாயத்தை குறித்து இழிவாக பேசுவது வைரலாக மாவட்டம் முழுதும் பரவி அவர்கள் சாலை மறியல் என்று இறங்க மறு தரப்பினர் மோதலுக்கு தயாராக காவல்துறை 144 தடை உத்தரவு போடும் வரை சென்றிருக்கிறது.

இங்கே முக்குலத்தோர்-முத்துராஜா வகுப்பினரிடையே மோதல் கூர் படுத்தப்படுகிறது. யாரோ இரண்டு பேர் பேசினால் அவன்தானே குற்றம் செய்கிறான். நடவடிக்கை எடுத்தால் பதற்றம் குறையும். காவல் துறை தான்  பொறுப்பு ஏற்று பதட்டத்தை தணிக்க வேண்டும். கால தாமதம் ஆனால் பிரச்னை மற்ற மாவட்டங்களுக்கும் பரவும் என்பது தெரியாதா?

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியை பாமக வினர் கைப்பற்றி வாக்குப் போட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டு.  தேர்தல் ஆணையம் மறுத்தாலும் போராட்டம் தொடர்கிறது.அன்புமணி ராமதாஸ் தேர்தலுக்கு முன் வாக்குச்சாவடியில் நாம்தான் இருப்போம் என்று உசுப்பேற்றி பேசியதுதான் பிரச்னைக்கு மூலம் என்கிறார்கள்.

வன்னியர் – தலித் ஒற்றுமைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தடையாக இருப்பது உண்மையா இல்லையா? திருமாவளவன் மட்டும்தான் தலித் மக்களின் அடையாளமா என்றால்  ராமதாஸ் மட்டும்தான் வன்னியரின் அடையாளம் என்பதை எப்படி ஏற்பது?

ஒற்றுமையை விதைக்க வேண்டிய நேரத்தில் பகைமையை விதைக்கிறார்கள்.    தேர்தல் இன்று வரும் நாளை  போகும். தொடர்ந்து ஒன்றாக வசிக்க வேண்டிய மக்களை சாதி, மதம் காட்டி பிரித்து வைப்பது என்ன கொடுமை?!

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதை விட காவல்துறை தலையிட்டு கடுமையான நடவடிக்கை களை குற்றம் செய்தவர்கள் மீது எடுத்தால்தான் அந்தப் பகுதிகளில் அமைதி திரும்பும். இல்லையென்றால் நீறு பூத்த நெருப்பாக வன்மம் புகைந்து கொண்டே இருக்கும். 

இன்னும் நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல்கள்  நடக்க வேண்டி இருக்கிறது.   இதுவரையே   பாராளுமன்ற தொகுதிக்கு  வாக்குக்கு ரூபாய் 200-300 யும்   சட்ட மன்ற தொகுதிகளுக்கு ரூபாய் 500, 1000, 4000 என்று கொடுக்கப் பட்டுவிட்டதால் இனி வர இருக்கிற நான்கு தொகுதிகளுக்கும் ரு 5000மும் அதற்கும் மேலும் கொடுக்கப் படலாம் என்கிற சூழ்நிலைதான் நிலவுகிறது.

அங்கும் மக்களை திசை திருப்ப சாதி கலவரங்களை தூண்டி வாக்குகள் வாங்கவும் திட்டமிடும் வாய்ப்புகள் அதிகம். எனவே காவல் துறை மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

தேர்தல் லாபத்திற்காக மக்களின் எதிர்காலத்தையே பாழாக்க தயங்காத அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு ஒதுக்க  வேண்டும் தமிழ்ச்சமுதாயம்.

சாதியை ஒழித்து தமிழனாய் ஒன்றிணைய வில்லையென்றால் தமிழன்னை நம்மை மன்னிக்கவே மாட்டாள். நமது அடையாளம் தமிழர் என்பது உண்மையானால் தமிழ் ஒன்றே தமிழர்களை ஒன்றிணைக்கும். சாதி மதங்கள் அல்லவே அல்ல. ஏனெனில் இரண்டுமே இடையில் வந்தவை.