ராதாபுரம்; வாக்கு எண்ணிக்கை வழக்கில் மறுக்கப்படும் நீதி??!!

radhapuram election
radhapuram election

தாமதிக்கபடும் நீதி மறுக்கப்பட்ட நீதியே!

2016 ல் நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கில் முடிவு தெரிவதற்குள் ஐந்து ஆண்டுகள் கடந்து விடும் போல் தெரிகிறது.

ராதாபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை வழக்கில் இனி திமுகவின் அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டாலும் அவருக்கு இழக்கப் பட்ட அநீதிக்கு எப்படி ஈடு செய்ய முடியும்?

இந்த தாமதத்திற்கு யார் பொறுப்பு?

அதிமுகவின் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லும் என்றே அறிவித்தாலும் அப்போதும் தமிழக அரசு குற்றவாளியாகத் தான் பார்க்கப் படும். ஏனென்றால் தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்றாகி விடும். அதாவது நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கெஜெட்டட் அதிகாரி என்ற  தமிழக அரசின் உத்தரவு,

நடுநிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர் கெஜெட்டட் அதிகாரி என்ற பெயரில் சான்றொப்பம் வழங்கியது தான் பிரச்னை. அவரை அதிகாரமுள்ளவர் என்று அறிவித்தது தமிழக அரசு. அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ளாமல் 203  தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் முடிவை அறிவித்தார். இன்று உயர்நீதி மன்ற நீதிபதி அவர் அதிகாரமுள்ளவர் என்று அறிவித்து அந்த வாக்குகளையும் சேர்த்து எண்ணி முடிவை அறிவிக்க உத்தரவிட்டார். இதுதான் இப்போது உச்சநீதிமன்ற பரிசீலனையில் இருக்கிறது.

அதை சேர்த்தால் வெறும்  49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இன்பதுரை தோற்றவராக அறிவிக்கப் படுவார்.

மேலும் மூன்று சுற்று வாக்குகளையும் மறு எண்ணிக்கை  செய்ய வேண்டும் என்பது அப்பாவுவின் கோரிக்கை.

வேறு பல அம்சங்களில் ஒரு தேர்தல் வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருந்தால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இந்த வழக்கில் வாக்கு எண்ணிக்கை மட்டுமே முக்கிய கேள்வி. மூன்று சுற்று வாக்கு மறு எண்ணிக்கையும் கூட வேறு சாட்சியம் தேவைப் படாத பிரச்னை.

இந்த் வழக்கு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நிலுவையில் இருந்தது நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க வைத்து விடும்.

சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்தும் கூட இன்னும் கால தாமதம் ஏற்படுவது சரியல்ல.

வழக்குகளை நாள்தோறும் நடத்தி வந்திருந்தால் இந்த தாமதம் ஏற்பட்டிருக்காது. 

தீர்ப்பு வருவதற்குள் சம்பத்தப் பட்ட உறுப்பினர் தனது பதவி காலத்தை நிறைவு செய்து விடுவார் என்பதுதான் இதுநாள்வரை நிலைமை, அந்த நிலை தொடரக் கூடாது.

உச்சநீதிமன்றம் விரைவாக இந்த பிரச்னையை விசாரித்து முடிக்கும் என்று நம்பி இருப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை.