ஒபிஎஸ் தாக்கல் செய்த உப்பு சப்பில்லாத பட்ஜெட் ?!

tamil-nadu-assembly-trust-vote-ops-eps
tamil-nadu-assembly-trust-vote-ops-eps

ஒபிஎஸ் தாக்கல் செய்த உப்பு சப்பில்லாத பட்ஜெட்

2019-2020 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஒபிஎஸ் இன்று தாக்கல் செய்தார்.

மோடி விவசாயிகளுக்கு அறிவித்த ஆண்டுக்கு ஆறாயிரம் போல தெலுங்கானா முதல்வர் கே சி ஆர் அறிவித்த தைப்போல ரைத்து பந்து திட்டத்தின் வழி  ஆண்டுக்கு எட்டாயிரம் போல ஓடிசாவின் நவீன் பட்நாயக்  அறிவித்த காலியா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு பத்தாயிரம் போல தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசு ஆயிரம் போல ஏதாவது அறிவிப்பார் என்று எதிர்ப்பார்த்த தமிழ் மக்களுக்கு அறிவிக்க இவர்களுக்கு ஒன்றும் கிடைக்க வில்லை என்பது ஏமாற்றம்தான்.

மத்திய அரசு தங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பங்கு பாக்கியை தரவில்லை என்று மட்டும் தெரிவித்து அதற்கு ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை.

தனியார் வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 143267 ஆக உயர்ந்திருக்கிறது என்று சொல்லி ஏதோ தனி நபர் ஆண்டுக்கு அவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அது ஒரு தனி நபர் ஆண்டுக்கு சேவை மற்றும் பொருள் வரி அளவுக்கு பயன் படுத்துகிறார் என்ற பொருள் தானே தவிர வருமானம் அல்ல. மொத்த உள்நாட்டு உற்பத்தியை மக்கள் தொகையை கழித்தால் வரும் தொகை ஒரு தனி நபர் வருமானமாக கணக்கிடப் படுகிறது. அது ஒரு மாயத் தோற்றம்தான்.

நிதிக் கமிஷன் பரிந்துரைக்கும் அளவுப்படி தமிழ்நாட்டுக்கு வருவது மத்திய வருவாயில் 4.023 % தான். ஆனால் மத்திய பிரதேசத்துக்கு 7.548% மும் மேற்கு வங்கத்துக்கு 7.324 % மும் இன்னும் பல மாநிலங்களுக்கு கூடுதல் அளவிலும் வழங்கப் படுகிறது. ஏன் இந்த பார பட்சம்?  இது பற்றி வாய் திறக்க  தமிழ் நாட்டு அரசு தயாராக இல்லை.

பல வகைகளிலும் மாநிலங்களை பலவீனப் படுத்தும் முயற்சியில் மத்திய அரசு  இறங்கி இருக்கிறது. அது பற்றி கவலைப் படும் அரசாகவும் இல்லை.

நீட்  தேர்வில் விலக்கு  அளிக்கும் சட்டம் ஒப்புதலுக்கு அனுப்பியது என்ன ஆனது என்று கேள்வி கூட கேட்க தயாராக  இல்லை.

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு   ரூபாய் 1800  ஆக நிர்ணயித்து விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது.  கரும்புக்கும் போதிய விலை இல்லை. கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை சீர்  செய்ய எந்த திட்டமும் இல்லை.

வெறும் 2000 பம்பு செட்டுகளுக்கு 90% மானியத்துடன் சூரிய ஒளி மோட்டார்களை அமைக்க அறிவித்து இருப்பது பிரச்னையை  தீர்க்க உதவாது.

உரிமைகளுக்கு போராடும் சமுதாயத்தின் எந்த பிரிவையும் சமாதானப் படுத்தும் வகையில் அறிவிப்புகள் இல்லை.

எட்டாவது ஆண்டாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஒபிஎஸ் பழைய கணக்கை துகை மாற்றி புதிதாக அறிவித்திருக்கிறார்.

எந்த தொலைநோக்கு  பார்வையும் இல்லாத உப்பு சப்பில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்து கடமையை நிறைவேற்றி இருக்கும்  ஒபிஎஸ் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கண்டனங்களுக்கு  என்ன பதில்  சொல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.