நவம்பர் 1 தமிழ்நாடு நாள்; இழந்ததை மீட்க இருப்பதை கொண்டாடுவோம்!

நவம்பர் 1 தமிழ்நாடு நாள்; இழந்ததை மீட்க இருப்பதை கொண்டாடுவோம்!

1956  நவம்பர் மாதம் 1ம் தேதி மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள். ஆனால் அன்று தமிழ்நாட்டுக்கு இருந்த பெயர் சென்னை மாநிலம்.

நம்மிலிருந்து பிரிந்து சென்ற கர்நாடகா, கேரள, ஆந்திரமாநிலங்கள் இதே நாளை  கொண்டாடுகிறார்கள்.

நாம் கொண்டாட முடியுமா? பல பகுதிகளை இழந்திருக்கிறோம். ஆனாலும் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட 79 நாள் உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனார் 13/10/1956 ல் உயிர் பிரிந்த பிறகு 01/11/1956ல் தமிழ் பேசும் மக்களுக்காக ஒரு மாநிலம் உருவான போது அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட அன்றைய ஆட்சியாளர்களால் முடியவில்லை.

1967 ல் அண்ணா ஆட்சிக்கு வந்து தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டி இருந்தது.

அன்றைய திமுக நவம்பர் 11ம் நாளை தமிழக அமைப்பு நாளாக கொண்டாடும்படி கேட்டுக்  கொண்டது.  ஆனால் இன்று  வரை எந்த ஆட்சியாளரும் இந்த குழப்பங்களால் இதுவரை தமிழ்நாடுநாள் கொண்டாடவில்லை என்பதை மறுக்க முடியாது.

ஆனால் இன்றைய அதிமுக ஆட்சி நவம்பர் 1ம் நாளை தமிழ்நாடு நாள் ஆக அறிவித்து அரசு நிதி ஒதுக்கி விழா கொண்டாட முடிவு செய்து நிறைவேற்றி இருக்கிறது.

கொண்டாடுவோம். ஆனால் வரலாற்றை பேசி, கொண்டாடுவோம்.

இழந்த பகுதிகளை மீட்க முடியுமா என்பது வேறு. ஆனால் இழந்தோம் என்பதைக் கூடவா பேசக் கூடாது.

தியாகிகள் மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி.சங்கரலிங்கனார் நடத்திய போராட்டங்களை நினைவு கூறுவோம்.

ஆந்திரா மாநிலம் அமைய பொட்டி ஸ்ரீ ராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பிறகுதான் அங்கு போராட்டக் களம் உருவானது.

எனவே எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்று தமிழ்நாடு நாள் கொண்டாட வேண்டிய அவசியம் அதிகரித்து விட்டது.

தமிழையும் தமிழர் பண்பையும் தனித்துவத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் அதிகரித்துவிட்டன.

எனவே விழிப்புணர்வு மட்டுமே தமிழரையும் தமிழையும் காக்க முடியும். அதை உறுதிப்படுத்த தமிழ்நாடு நாளைக் கொண்டாடுவோம்.