சட்ட மன்றத்தை கலைத்த பாஜக முடிவால் மேலும் சிக்கலானது காஷ்மீர் பிரச்னை??!!

2020 ஆண்டு அக்டோபர் மாதம் வரை இருக்கும் காஷ்மீர் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் திடீர்  என்று பாஜக-வால் முடித்து வைக்கப் பட்டிருக்கிறது.

யாரவது இதை எதிர்த்து நீதிமன்றம் போகக் கூடும். நீதிமன்றம் முடிவை நிறுத்தி வைக்க அதிகம் வாய்ப்பும் உள்ளது.

ஏன் இந்த முடிவு.? எதிரிக் கட்சிகளான மெகபூபா முக்தியின் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரசும் ஒன்று சேரும் என்று  பாஜக எதிர்பார்த்திருக்கவே முடியாது. இந்த மூன்று கட்சிகளுக்கும் பெரும்பான்மை உள்ளது. ஆட்சி அமைக்கும் உரிமையை கோரி மெகபூபா கொடுத்த செய்தி பேக்ஸ் மெஷின் வேலை  செய்யாததால் தெரியவில்லை என்று ஆளுநர் கூறியிருப்பது நகைப்புக் குரியது.

பி டி பி – பாஜக கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலாக்கப் பட்டு இருக்கிறது.

காஷ்மீரை அடித்தளமாக கொண்ட இரண்டு கட்சிகள் ஒன்று சேர்ந்து  விட்டால் நிலைமையை மோசம் ஆக்கும் என்று மத்திய அரசு நினைத்தால் மிகவும் தவறு.  இப்போது மீண்டும் அவர்கள் ஒன்றிணைந்து வேலை செய்வதை எப்படி தடுப்பீர்கள்?

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களின்போது பொதுமக்கள் பங்களிப்பு அதிகம் ஆவது நல்ல சமிக்ஞை ஆக பார்க்கப் பட்டது.

எப்போது தேர்தல் நடத்தினாலும் இதே கூட்டணி தொடர்ந்தால் அப்போது பாஜக என்ன செய்ய முடியும்?

இந்திய ராணுவத்தினர் மீது கல்லெறிந்து தாக்கும் பொதுமக்கள் மிக அதிகமாக இருக்கும் இடம் காஷ்மீர்.

ஒரு ராணுவ வீரன் ஆயுதங்களுடன் தெருவில் நடந்து  செல்லும் போது பொதுமக்கள் கூடி நின்று கேலி பேசுவதும் சில இளைஞர்கள் அந்த ராணுவ வீரனை கையால் தள்ளி  சீண்டுவதும் சகிக்க முடியாத காட்சிகள். அந்த ராணுவ வீரன் மனம் என்ன பாடு பட்டிருக்கும்.? நாடு காக்க உயிரை பணயம் வைத்து ஆயுத போராட்டம் நடத்தும் அந்த வீரன் யாருக்காக போராடுகிரானோ அவர்களே அவனை அவமதிப்பது சகிக்க முடியாதது.

ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களை தன் வசம் கொண்டு வரும் நடவடிக்கைகளில் இறங்காமல் மக்களை தனிமைப் படுத்தும் முயற்சியிலேயே இறங்குவது சரியல்ல.

எத்தனை காலத்துக்கு இப்படி ராணுவத்தை குவித்து வைத்துக் கொண்டு அவர்களை கட்டுப் படுத்த முடியும்?

இந்த முடிவு மக்களை இன்னும் பிளவுபடுத்தவே உதவும்.

யார் சேர்ந்தாலும் ஆட்சி அமைக்கும் உரிமையை அவர்களுக்கு ஆளுநர் வழங்கி இருக்க  வேண்டும் .

மெகபூபா-பாஜக கூட்டணி ஏற்பாடே ஒரு பொருந்தாக்  கூட்டணி தான். அவர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு  மேலாக ஆட்சியில் இருந்து விட்டார்களே?

நீதிமன்றம் தலையிட்டு ஆளுநர் முடிவின் மீது ஒரு குட்டு வைத்துத்தான் மாற்று அரசு   அமைய  வேண்டும் என்றால் அதை யார் தடுக்க முடியும்?