Connect with us

மெரினாவில் அண்ணாவுக்கருகில் இடம் பிடித்தார் கலைஞர் !

Karunanidhi

தமிழக அரசியல்

மெரினாவில் அண்ணாவுக்கருகில் இடம் பிடித்தார் கலைஞர் !

கடைசியில் தொண்டர்களின் நம்பிக்கையை தகர்த்து விட்டு ஆகஸ்டு 7 ம் தேதி மாலை   6.10 க்கு கலைஞர் மறைந்தார் என்ற செய்தியை காவேரி மருத்துவமனை வெளியிட்டது.

தமிழகம் அடுத்த நொடி அசைவற்றுப் போனது.

மறுநாள் காலை முதல் ராஜாஜி ஹாலை நோக்கி தொண்டர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிய ஆரம்பித்தாலும் எந்த அசம்பாவிதமும் நடக்க வில்லை.

மாநில முதல்வர்கள் முதற்கொண்டு பிரதமர் வரை அனைத்துக் கட்சித் தலைவர்களும் அகில இந்திய அளவில் கலைஞரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு தங்கள் மரியாதையை செலுத்தினார்கள்.

நானும் அவருக்கு எனது அஞ்சலியை  ராஜாஜி ஹால் சென்று செலுத்தி விட்டு வந்தேன்.

எடப்பாடியின் அரசு  மெரினாவில் இடம்  கொடுக்க முடியாது என்றும் காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும் செய்தி வெளியிட பிரச்னையை நீதிமன்றம் கொண்டு என்றது திமுக.

பா ஜ க சொல்லி இந்த மறுப்பை அ தி மு க அரசு தெரிவித்ததா அல்லது தானே முடிவெடுத்ததா என்பது ஒருபுறம் இருக்க இந்த பிரச்னையில் எடப்பாடி அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு இருக்கலாம் என்பதுதான் பொது மக்கள் கருத்து.

பகுத்தறிவு வாதிகள் இங்கே கோலோச்சுவது பா ஜ க வுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.   ஆனால் தங்களை திராவிட இயக்க கட்சி என்று கூறிக் கொண்டு பெரியாரையும் அண்ணாவையும் படம் போட்டு காட்டுகிறவர்கள் கொஞ்சமாவது பகுத்தறிவு கொள்கைக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டாமா?   ஆம்.  கலைஞருக்கு  மெரினாவில் இடம் கொடுக்க ஆதரவு அளிப்பதே  அவர்கள் பகுத்தறிவு கொள்கைக்கு ஆதரவாளர்கள் என்பதற்கு ஆதாரமாக இருந்திருக்கும்.

ஜெயலலிதா சமாதியை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் அந்த வழக்குகள் திரும்ப பெறப் பட்டன.

நீதிமன்றம் அனுமதி  அளிக்க பிரச்னை தீர்க்கப் பட்டு கலைஞருக்கு அண்ணா சமாதி அருகேயே இடம் ஒதுக்கப் பட்டு அங்கே வைக்கப் பட்டார் கலைஞர்.

நீதிமன்றம் தலையிட்டு இருக்கா விட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டிருக்குமோ?

‘    ஓய்வறியாமல் உழைத்தவன் இதோ இங்கே  ஓய்வெடுக்கிறான் ‘ என்ற வாசகங்கள் பொறிக்கப் பட்ட சந்தன பேழையில் ஓய்வெடுக்கப் பட்டார் கலைஞர்.

ஆக அண்ணாவுக்குப் பின்புறம் கலைஞர்   எம்ஜியாருக்கு பின்னால் ஜெயலலிதா என்று நான்கு பேரும்  இப்போது மெரினாவில் உறங்குகிறார்கள்.

கலைஞர் இல்லாமல் இனி தி முக இயங்கினாலும் அவரது தாக்கம் இல்லாமல் இயங்க முடியாது.

6863   நாட்கள் கலைஞரும்

5239  நாட்கள் ஜெயலலிதாவும்

3634  நாட்கள் எம்ஜியாரும்

3432  நாட்கள் காமராஜரும்

முதல் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்கள்.    ஆக அதிக நாட்கள் முதல் அமைச்சர் ஆக பணி புரிந்தவர் கலைஞர்தான்.

ஒன்று மட்டும் உறுதி.

மறைந்தும் அவர்தான்  உந்து சக்தியாக நின்று

திமுகவை ஆட்டுவிக்கப் போகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top