வைகோ, சீமான் போன்றோரை குறி வைக்கிறதா என்ஐஏ??!!

seeman-vaiko
seeman-vaiko

மிசா, தடா, பொடா என்று பல ஆள் தூக்கி சட்டங்களை பார்த்திருக்கிறோம். அவைகள் எல்லாம் கடந்த காலங்கள் ஆகிவிட்டன என்று நிம்மதியாக இருக்கும் நேரத்தில் வந்திருக்கிறது தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் சிறப்பு அதிகாரங்கள்.

பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்ட இந்த சட்டம் இனி என்ன செய்யப் போகிறதோ என்ற அச்சம் பலரையும் ஆட்டிபடைக்க தொடங்கிவிட்டது.

தடா 1995ல் அற்றுப் போக விடப்பட்டது. பொடா 2004 ல் திரும்பப் பெறப்பட்டது.

இப்போது என்ஐஏ வின் அதிகாரம் விரிவாக்கம் செய்யப்பட்டு மனித உடல் பாகங்களை விற்பனை செய்வது,கள்ள நோட்டுகள், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை உற்பத்தி செய்தல் விற்பது, கணினி பயங்கரவாதம், வெடிபொருட்கள் குற்றகள் சட்டம் பற்றிஎல்லாம் இனி இந்த முகமை விசாரணை செய்யும்.

பயங்கரவாதத்தை வேரறுப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை.

அதுவும் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு இந்தியாவிலும் தொடர்பு இருக்கிறது என்ற செய்திகள் நமக்கு அச்சத்தை தோற்றுவிக்கின்றன.

பயங்கரவாதத்திற்கு மதம்  இனம் என்றெல்லாம் பாகுபாடு இல்லை. அவர்களை மனிதர்களாகவே கருத முடியாது. ஒருவகையில் மூளைசலவை செய்யப்பட்ட மனித உருவில் நடமாடும் யந்திரங்கள். ஒருவித நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் அவர்களை சிகிச்சை செய்து குணப்படுத்துவதுதான் மனிதாபிமானம்.

ஆனால் அதற்காக கண்டுபிடிப்பதில் மெத்தனமாக இருந்து விலை கொடுக்க முடியாது.

யாரையும் பழி வாங்க தவறாக இந்த சட்டத்தை  தவறாக பயன்படுத்த மாட்டோம் என்று அமித் ஷா உறுதியளித்திருக்கிறார். அவரது உறுதி எல்லாம் நம்பத் தகுந்ததா என்பதே கேள்விக்குறி. ஆனால் வேறுவழி? அதனால்தான் திமுக உள்பட எல்லா கட்சிகளும் ஆதரவளித்து மக்களவையில் வெறும் ஆறுபேர் எதிர்த்து வாக்களிக்க நிறைவேறி இருக்கிறது.

முன்ப பொடாவை ஆதரித்து பேசிய வைகோ அதே பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 537 நாட்கள் சிறையில் இருந்தார். 

அந்த நிலை இன்று ஆதரித்திருக்கும் திமுகவுக்கும் வராது என்று யாராவது உறுதியளிக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். என்றாலும் நம்பிக்கையுடன் இருப்பதாக ஆ ராசா பேட்டியளித்திருக்கிறார்.

முமுக தலைவர் ஜவாஹிருல்லா கூட திமுகவின் இந்த நிலைபாடு குறைபாடு உடையது என்று விமர்சித்திருந்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டியது. அதில் உடன்பட்டே ஆக வேண்டும். எனவே அதை  ஒழிக்கும் முயற்சிக்கும் ஆதரவு அளித்தே ஆக வேண்டும். தவறாக பயன் படுத்தினால் ஒற்றுமையாக நின்று எதிர்க்க வேண்டியதுதான்.