மதம்

தமிழில் பிரபந்தம் பாட இடைக்கால தடை; ஏனிந்த நாடகம்?

Share

தமிழ்நாட்டில் வைணவர்களிடையே வடகலை- தென்கலை  சண்டையை பெரிதாக்கி மகிழ்வார்கள் சிலர்.

இந்த சண்டை மூலம் யாரை ஏமாற்ற முனைகிறார்கள் என்பதே கேள்வி?

“மீ டூ” புகழ் சின்மயி சொல்வதுபோல் நாங்கள் அய்யங்கார் என்பதை “High Engaar” எனபெருமையாக அவர்கள் நினைத்துக் கொள்வதை யாரும் தடுக்கவில்லை.

ஆனால் அய்யங்கார்கள் அய்யர்கள் இருவருமே பார்ப்பனர்கள். நாம் பிராமணர்கள் என்று அழைப்பது இல்லை. ஏன் என்றால் அப்படி அழைத்தால் மற்ற எல்லாரையும் சத்திரிய, வைசிய சூத்திர, பஞ்சமர்கள் என்ற வர்ணப் பிரிவினையை ஒப்புகொண்டதைப்போல் ஆகிவிடும். வர்ணப் பிரிவினையை மறுப்பவர்கள் அவர்களை பார்ப்பனர்கள் என்றுதான் அழைக்க வேண்டியுள்ளது. வேண்டுமானால் அந்தணர்கள் என்று அழைக்கலாம்.. நிற்க.

வைணவ மரபில் அய்யங்கார் களுக்கு எப்படி சுவாமிக்கு கைங்கர்யம் செய்யும் உரிமை கிடைத்தது?

சைவ மரபில் அய்யர்களும் வைணவ மரபில் அய்யங்கார்களும் கைங்கர்யம் செய்யும் உரிமையை கபளீகரம் செய்து கொண்டனர்.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆச்சார்யா வேதாந்த தேசிகரின் தமிழ் பிரபந்தங்களை பாடக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

நீதிபதி எஸ். வைத்தியநாதன் இந்த தடையை கொடுத்திருக்கிறார்.

வடகலை- தென்கலை அய்யங்கார்கள் இடையே வேதம் பாடுவதா ப்ரபந்தம் படுவதா  என்ற பூசல்.

வ்டகலையை சேர்ந்த சுரேஷ் என்பவர் பிரபந்தம் பாட உரிமை கேட்டு நீதிமன்றம் செல்கிறார். குறிப்பாக செப்டம்பர் 21 ம் தேதி பாட அனுமதிக்க வேண்டும் என்பது கோரிக்கை. விசாரணைக்கு வந்தபோது தனி நீதி பதி ஒருவர் பிரபந்தம் பாடலாம் என வாய் மொழியாக உத்தரவிடுகிறார்.

அந்த தேதிக்கு பின்னரும் பிரபந்தம் பாடப்படுவதை நிறுத்தக் கோரி தென்கலையை சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் நீதிமன்றம் செல்ல அப்போதுதான் நீதிபதி வைத்தியநாதன் இந்த தடையை விதிக்கிறார்.

தடையையும் கொடுத்து விட்டு” கோவில் என்பது எல்லாரும் வழிபடும் இடம். உலகம் உள்ளவரை இந்த வடகலை தென்கலை இடையிலான கருத்து வேறுபாட்டுக்கு தீர்வு வராது. மனித குலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

இவர்களுக்குள் சண்டை இடுவதை பெரிதாக்கி இரண்டு முக்கிய விடயங்களை விவாதத்துக்கு வர விடாமல் செய்திருக்கிறார்கள்.

அங்கே சுவாமிக்கு கைங்கர்யம் செய்யும் உரிமையை மற்ற சாதிக்காரர் களுக்கும் பகிர்ந்து தர வேண்டும். கருவறையில் தமிழ் இடம் பெறுவதை  உறுதி செய்ய வேண்டும். இந்த இரண்டும் தான் முக்கிய உரிமை பிரச்னைகள். பெரும்பான்மை பக்தர்களான தமிழர்கள் பிரச்னை.

வடகலை தென்கலை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்களா?

அய்யர் அய்யங்கார்கள் பிராமண சங்கத்தில் சேர்ந்துதானே இருக்கிறீர்கள்?

போலியான பிளவுகளை ஏற்படுத்தி அங்கும் கூட தமிழுக்கு எதிராக சதி  செய்கிறீர்கள் என்றால் உங்களை யார் நம்புவார்கள்?

மதத்தில் புரட்சி செய்த மகான் என்று ஸ்ரீ ராமானுஜர் பற்றி  தொடர் எழுதியவர் கலைஞர்.

ஏனென்றால் ராமானுஜர் ஸ்தாபித்த விசிஷ்டாத் வைதம் இறைவனை எந்த ஆன்மாவும் இடையறாத பக்தியினால் அடையலாம் என்றது.

மத்வரின் த்வைத சித்தாந்தம் போல சில ஆன்மாக்கள் நிரந்தர நரகத்தில் உழலும் என்பதை அவர் ஏற்கவில்லை.

சங்கரரின் அத்வைதம் கூட இரண்டல்ல ஒன்று என்றே கூறி ஆத்மனும் பிரம்மனும் ஒன்றே என்றே கூறியது.

எல்லாம் ஒன்று என்று எழுதி வைத்து விட்டு நடைமுறையில் சாதி பாகுபாடு காட்டி பெரும்பான்மை மக்களை வெளியே நிறுத்தி வைத்திருப்பது என்ன நியாயம் என்ற கேள்வி கேட்கப் படாமலே செய்து விட்டார்கள்.

உங்கள் சண்டை பெரிதல்ல. அவசியமும் அல்ல.

எந்தக் கோவிலாக இருந்தாலும் ஆண்டு தமிழ் ஆட்சி  செய்ய வேண்டும்.  தமிழர்  கருவறையில் இடம் பெற வேண்டும். அதுவே இன்றைய தேவை.

இந்த கோரிக்கை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. எல்லா மாநிலங்களிலும் அந்த மாநில  மொழிகள் அர்ச்சனையில் இடம் பெற வேண்டும். அந்தந்த மாநில அனைத்து சாதி மக்கள் கருவறையில் இடம் பெற வேண்டும். அதுவே உண்மையான இறை வழிபாடாக விளங்கும்.

This website uses cookies.