தமிழ்ப் பாடத்திட்டத்தில் படித்தால் இனி வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு உறுதி; உயர் நீதிமன்றம்

tamil-students
tamil-students

ஓர் நல்ல செய்தி.

சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

தமிழ்ப் பாடத்திட்டத்தில் படித்தால் வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் அமுலில் உள்ளது.

ஆனால் இதை பயன்படுத்தி நாங்கள் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்றதால் எங்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகையை பெற உரிமை உண்டு என்று சிலர் கோரியதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இந்த கேள்விக்கு விடை காண வேண்டி வந்தது.

நீதிபதிகள் சுப்பையா, சி வி கார்த்திகேயன், சி எஸ் சரவணன் கொண்ட அமர்வு தெளிவாக பள்ளி முதல் கல்லூரி வரை முழுமையாக தமிழ் வழியிலேயே பயின்றவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு என தீர்ப்பளித்திருக்கிறது.

அதற்கு அந்த கல்வி நிறுவனங்கள் அந்த மாணவர் தமிழ் வழியில்தான் படித்தார் என்று சான்று வழங்க வேண்டும். இதனால் இனி வேறு மாநிலங்களில் இருந்து நாங்கள் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்று விட்டோம் என்றோ ஆங்கில வழியில்  படித்தவர்கள் நாங்கள் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்று விட்டோம் என்றோ இட ஒதுக்கீடு கோர முடியாது .

இதனால் தமிழில் பாடத்திட்டத்தில் சேரலாம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை பெருகும்.

கடந்த ஆண்டு 320 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் தாங்கள் தமிழில் தேர்வு எழுதியதாக 3 பேர் உரிமை கோரி மறுக்கப்பட்டதால் அவர்கள் தொடர்ந்த வழக்கில்தான் இந்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

எந்த சமூக நீதி திட்டத்தையும் யாராவது நாலுபேர் கெடுக்க முனைவதை இது காட்டுகிறது.

இந்த இட ஒதுக்கீட்டை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

தமிழ்ப் பாடத்திட்டத்தில் படிப்போர்க்கு இன்னும் என்னென்ன சலுகைகளை அளிக்கலாம் என்று ஆராய்ந்து பார்த்து அவற்றை வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.

இந்தி திணிப்பையும் எதிர்ப்போம். தமிழ் வழிக் கல்வியையும் ஊக்குவிப்போம் என்பதே சரியான பாதை.