இந்திய அரசியல்

வன்முறைக்கு வித்திடும் முகமது ஷெரிப், பாஜக நாராயணன், ஆளுநர் சத்ய பால் மாலிக்??!!

Share

கருத்து வேறுபாடுகள் எத்தனை இருந்த போதும் அவற்றை ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வெல்வதுதான் நீதி.

ஆனால் சிலர் வன்முறைக்கு வித்திடும் பேச்சுக்களால் ஜனநாயகத்திற்கே சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக பேச்சாளார் முகமது ஷெரிப் ‘நாங்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் பேசுவதாக இருந்தால் முத்தலாக் சட்டம் கொண்டு வந்தவுடனேயே பிரதமர் மோடியின் தலையை எடுத்திருப்போம். உள்துறை மந்திரி அமித் ஷா உயிரோடு இருந்திருக்க மாட்டார்.’ என்று பேசியிருக்கிறார். உடனே அந்த  கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அவரை கண்டித்து பொறுப்பில் இருந்து  நீக்கியுள்ளார். கட்சியில் இருந்தே நீக்கியிருக்க வேண்டும். அவர் அரசியலில் இருப்பதற்கே அருகதை அற்றவர்.

இன்று புதிய தலைமுறை தொலைகாட்சியில் அருணனுடன் கலந்து கொண்ட பாஜக நாராயணன், வைரமுத்து தலையை வெட்டுவதாக நயினார் நாகேந்திரன் பேசியது தவறில்லை என்கிறார். அவர் வணங்கும் ஒருவரை வேசி என்று எழுதினால் என்ன செய்வீர்கள் என்றும் கேட்கிறார். அப்படி எழுதவில்லை என்று மறுத்ததை பேச விடாமல் தடுக்கிறார். ஏன் வழக்கு போட வேண்டியதுதானே என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாமா? அப்படி ஒருவர் ஆராய்ச்சி செய்து  எழுதியதை மேற்கொள் காட்டியது எப்படி குற்றம் ஆகும் என்ற கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை. ஒன்று விளக்கம் சொல்வதை கேள். இல்லையா சட்டப்படி நடவடிக்கை எடு. தண்டனை கொடு. அல்லது நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு பிறகாவது திருந்து. நான் அறிவை பயன்படுதாதவரை தூண்டி விட்டு தலையை எடுக்க சொல்வேன் என்கிறாரா?

காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் பொறுப்பான பதவியில்  இருப்பவர். அவர் கூறியதாக இன்று சி என் என் டிவியில் ஒரு செய்தி வெளியாயிற்று. அவர் சொல்கிறார். இனி காங்கிரஸ்காரர்களை 370 ஆதரவாளர்கள் என்றே அழையுங்கள்.  அவர்கள் அவர்களை ஷூவால் அடிப்பார்கள்  என்று பேசியிருக்கிறார். அப்படி பேசியிருந்தால் அது எப்படி சரியாகும். மக்களை வன்முறைக்கு தூண்டுவதாக ஆகாதா? அதை ஒரு அரசியல் சட்ட பொறுப்பு வகிக்கும் ஆளுநர் பேசலாமா? மற்றவர் பேசினால் வழக்கு? ஆளுநர் பேசினால்?

சட்டம் ஆளும் கட்சிக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரே மாதிரி இருக்கவேண்டும்.

சர்வாதிகாரத்தை நோக்கி நாடு பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

This website uses cookies.