சுவர் ஏறிக் குதித்து ப சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ ??!!

pa-chidambaram
pa-chidambaram

இன்று நடந்தது வரலாற்றில் ஒரு திருப்பு முனை .

முன்ஜாமீன் மனு  உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது நாளை மறுநாள் அது விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் இன்று ப சிதம்பரத்தை அவர் வீட்டு சுவரின்  ஏறிக் குதித்து கைது செய்திருக்கிறது சிபிஐ.

உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை ஏழு மாதங்கள் கழித்து தள்ளுபடி செய்கிறது. நிறுத்தி வைக்க மறுக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அவரது மனு டெக்னிகல் காரணங்களை சொல்லி திரும்பக் கொடுக்கப் படுகிறது. வேறு மனு தாக்கல் செய்த பின் தலைமை நீதிபதி அதை நாளை மறுநாள் விசாரிக்க உத்தரவிடுகிறார். இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி சிபிஐ கைது செய்யும் என்பதால் ப சிதம்பரம்  காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கிறார். வீட்டுக்கு போகிறார். வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்  படுகிறார்.

நீதிமன்ற வாரன்ட் அடிப்படையில்தான் கைது  என்று சிபிஐ சொல்கிறது. எந்த நீதிமன்றம் வாரன்ட் கொடுத்தது என்பது நாளைதான் தெரியும்.

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பீடுநடை போட துவங்கி விட்டது என்பது தெளிவாக தெரிகிறது.

இனி எல்லாரையும் இப்படித்தான் அச்சுறுத்துவார்கள் என்பதும் தெளிவாகி விட்டது. முன்னாள் உள்துறை அமைச்சர் மூத்த வழக்கறிஞருக்கே இந்த கதி என்றால் சாமானியர் கதி? இந்த அச்சத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கைது போல்தான் தெரிகிறது.

காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவில் திமுகதான் முன்னெடுத்து ஒரு போராட்டத்தை நாளை டெல்லியில் நடத்துகிறது. நாளை அதற்கும் இப்படிப்பட்ட அச்சுறுத்தல் வரலாம்.

இனி ப சிதம்பரம் ஜாமீன் தான் கோரமுடியும். அதுவும் சிபிஐ காவல் கேட்கும்.  ஒரிருநாள் கொடுக்கப் படலாம். அதன்பின் ஜாமீன் தான் கோரலாம். கிடைக்கும்.  முன்ஜாமீன் மனு அவசியம் அற்றுப் போய்விட்டது.

உள்ளே வைக்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமே தவிர அவரை வழக்கில் தண்டிக்க முடியுமா என்பது கேள்வி?

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் எதுவும் சொல்ல முடியாது.

வழக்கின் தன்மை பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

மகளை கொன்ற வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி- பீட்டர் முகர்ஜி இருவரும் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் தான் இந்த வழக்கு தொடர்கிறது. அது எந்த அளவு நிலைக்கும் என்பது தெரியாது.

அதேபோல் ஒரு அமைச்சர் மட்டும் இதை செய்து விட முடியாது. அவருக்கு கீழே இருக்கும் ஐந்தாறு ஐஏஎஸ் அதிகாரிகள் கையெழுத்து போட்ட பின்தான் கடைசியில்  அமைச்சர் ஒப்புதல் இடுவார். எனவே அவர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகள் ஆவார்கள். அவர்கள் இல்லாமல் அமைச்சரை மட்டும் குற்றம் சுமத்தி விடமுடியாது.    அமைச்சர் வற்புறுத்தினார் என்று அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்களா?   அப்படி கொடுத்தாலும் கூட என்ன வற்புறுத்தினாலும் அது குற்றம் என்றால் அதை செய்தவர்கள் அவர்களும்தான். எனவே அவர்களை விட்டு விட முடியுமா?

என்ன இருந்தாலும் அவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறதா என்பதை சிபிஐ தான் விளக்க வேண்டும். அரசியல் தலையீடு காரணமாக நடந்த கைது என்றுதான் என்பதுதான் பொதுவான மக்கள் கருத்து.

இன்னும் விடை காண வேண்டிய பல கேள்விகள் இந்த வழக்கில் எழுகின்றன.    காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.