Connect with us

உச்சநீதிமன்றம் போட்ட குண்டு; கள்ள உறவு குற்றமல்ல???!!!

சட்டம்

உச்சநீதிமன்றம் போட்ட குண்டு; கள்ள உறவு குற்றமல்ல???!!!

உச்சநீதிமன்றம் போட்ட குண்டு; கள்ள உறவு குற்றமல்ல???!!!

இந்திய தண்டனை சட்டம் பிரிவு  497, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 198 ஆகியவைகள் அரசியல் சட்டப்படி செல்லாது என இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது .  5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது

சொல்லப்போனால் இந்திய குடும்பங்களை சிதறடிக்கும்  ஒரு வெடிகுண்டை போன்ற சக்தி கொண்ட தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.    திருமணம் என்பது ஒரு அடிமைத்தனம்.    பெண்கள் ஆண்களுக்கு பாத்தியப் ப ட்டவர்கள் என்பதான ஒரு சமுதாயம் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.   தீபக் மிஸ்ரா , நாரிமன் கன்வில்கர் ,  சந்திரசூட் , இந்து மல்கோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் இந்திய சமுதாயத்தின் குடும்ப வாழ்க்கையை மிகவும் பாதிக்கும் அல்லது மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

திருமண பந்தத்தை மீறி வேறு ஆடவருடன் அல்லது பெண்டிருடன்  உடல் தொடர்பு வைத்துக்கொள்வது தண்டிக்கத்தக்க குற்றம் அல்ல.   ஆனால் அதன் காரணமாக பாதிக்கப்பட்டவர் விவாகரத்து கோரலாம் என்றும் அந்த தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. அதாவது சம்மதம் தெரிவிக்கும் இரண்டு வயதானவர்கள் தங்களுக்குள் பால் உறவு கொள்வது என்பது அவர்களது தனியுரிமை என்கிறது தீர்ப்பு.    அதாவது திருமண பந்தம் என்பது புனிதமானது என்ற கோட்பாட்டிற்கு இது வேட்டு வைக்கிறது . 

இந்து மல்கோத்ரா என்கின்ற ஒரு தனி பெண் நீதிபதி ‘ இது ஒரு சிவில் தவறு  மட்டுமே அதாவது தார்மீக ரீதியில் தவறு என்ற அளவில் மட்டுமே இருக்க முடியுமே தவிர தண்டிக்கப்பட தக்க குற்றமாக முடியாது ‘என்கிறார்.   நீதிபதி  சந்திரசூட் இன்னும் ஒரு படி மேலே போய் ‘ திருமண பந்தத்திற்கு உள்ளேயே விரும்புகிற நபரோடு உறவு கொள்வது என்பது கூட அவரவர் விருப்பம் என்கிறார்’.  சமுதாயம் எப்படி விரும்புகிறதோ அப்படியே சிந்திப்பதற்கு எந்த ஒரு ஆணும் பெண்ணும் நிர்ப்பந்திக்கப்பட முடியாது’  என்கிறார் நீதிபதி சந்திரசூட்.   

இது ஒரு காலனியாதிக்க சட்டம்.  அதற்கு தற்போதைய காலத்தில் இடமில்லை என்பதுதான் இந்த தீர்ப்பின்  மையம்.    மிகப்பெரிய விவாதங்களை இந்த தீர்ப்பு உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.    நாடகங்களில்,  சினிமாக்களில் எல்லாம் வரும் சம்பவங்கள் திருமண பந்தத்தின் புனிதத்தன்மையை சுற்றிச் சுற்றி தான் வரும்.    அதுவும் ‘ ஒரு நல்ல மனைவி’  என்ற தலைப்பில் நீதிபதி சந்திரசூட் அவர்கள் எழுதி இருக்கிற குறிப்புகள் சிந்திக்கத் தக்கவைதான்.    மனைவி என்பவள் அடங்கி நடக்க வேண்டும்.  குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும் சுய சிந்தனை கூடாது.  கட்டுப்பெட்டியாக வாழ வேண்டும் என்றெல்லாம் பெண்களுக்கு இருக்கிற கட்டுப்பாடுகளை அவர் சுட்டிக் காட்டி இவைகளை எப்படி நியாயப்படுத்த முடியும் எனவும் கேள்வி கேட்கிறார் .    காலம் காலமாக சுயமரியாதை உணர்வுகளை பரப்பியவர்கள் கூட இத்தனை பட்டவர்த்தனமாக ஏன் திருமணம் உறவுக்குள்ளேயே இருந்துகொண்டு பிறருடன் உடலுறவு கொள்ளக்கூடாது என்று கேட்டதில்லை?

எனவே இந்த தீர்ப்பு இப்படியே விடப்படுமா அல்லது இந்து மத தீவிரவாத அடிப்படையிலான யாராவது இன்னும் பெரிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு இது அனுப்பப்பட வேண்டும் என்று கேட்க போகிறார்களா என்பது தெரியவில்லை அதுவரை இன்றைய தீர்ப்பு தான் இறுதி.

இனி  கதை எழுதுபவர்கள் எல்லாம் தங்களது மனம் போன போக்கில் கதைகளை எழுதுவதற்கு இந்த தீர்ப்பு இடம் கொடுத்திருக்கிறது ஆதார் அட்டை தொடர்பான தீர்ப்பில் ஒரு தனி நீதிபதி தனது சிறுபான்மை தீர்ப்பை எழுதினார்.  ஆனால் இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்து தீர்ப்பை சொல்லியிருக்கிறார்கள்.

கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசப் ஷைன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்து இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு செல்லாது என அறிவிக்கக் கோரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் கிறிஸ்தவர் என்பதால் இந்து சமுதாயத்தில் அடிநாதமாக விளங்கக்கூடிய கணவன்-மனைவி பந்தத்தை உடைப்பதற்கு சதி செய்து இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார் என்று கூட குற்றம் சாட்டப்படலாம். 

இன்னும் எந்த வகையில் எல்லாம் இந்து மத தீவிரவாதிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.  ஆனால் பழமைவாதிகள் எந்த சீர்திருத்தத்தையும் எப்போதுமே தாங்களாக ஏற்றுக் கொண்டது இல்லை.  சட்டத்தின் கட்டாயத்தினால் தான் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.    இந்த தீர்ப்பு மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.   

அதே நேரத்தில் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தப்போகும் சமுதாய  மாற்றங்கள் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவில்தான் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in சட்டம்

To Top