இந்துக்களுக்கு எதிரான இந்து முன்னணியின் கோரிக்கை..?? நுழைவுக் கட்டணத்தை ரத்து செய் என்பது அர்ச்சகர்களுக்கு ஆதரவானது தானே..!!

           பக்தர்களே, உண்டியலில் காசு போடாதீர்,  அர்ச்சனை சீட்டு வாங்காதீர் , நுழைவுக் கட்டணம் செலுத்தாதீர்  , அர்ச்சகர்களிடம் மட்டும் தட்சிணை செலுத்துங்கள் என்று நேரடியாக சொல்லுவதற்கு பதிலாக , அரசே நுழைவுக்கட்டணம் வாங்காதே என்று இந்து முன்னணி போராட்டம் நடத்தி உள்ளது. 
             பக்திக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கிச் சொல்ல இந்து முன்னணி எந்த காலத்திலும் முன் வந்ததில்லை. 
             அப்படி சொல்ல முயன்றால்  99 %  நம்பிக்கைகள் அடிபட்டுப் போய் விடும் என்ற பயம்.      இன்று வருமானம் வரும்  அத்தனை கோயில்களும் பிராமணர் கட்டுப் பாட்டில்தான் இயங்கி வருகின்றன.    தமிழுக்கு அங்கே இடமில்லை.   சம்ஸ்க்ருதம் மட்டுமே அர்ச்சனை மொழி.   வழிபடும் தமிழர்கள் காதைப் பொத்திக் கொண்டு தேமே என்று நம்பிக்கையோடு வழிபட்டு விட்டு தட்சினையை   மட்டும் சிரத்தையோடு செலுத்தி விட்டு வருகிறார்கள். 
              அரசின் கட்டுப் பாட்டில் இந்து ஆலயங்கள் இருப்பதால் ஓரளவுக்கு பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு கோவில் நிர்வாகத்தில் பங்கு உள்ளது.    
            எனவேதான் அரசே ஆலயத்தை பிராமணர்களிடம் ஒப்படை என்பதற்கு பதிலாக , அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்று இந்து முன்னணி குரல் கொடுத்துக்  கொண்டிருக்கிறது. 
             பெரும்பான்மை மக்களை அவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாகவே அவர்களை அடக்கி  ஆளும் தந்திரத்தை இந்து முன்னணியை நடத்தும் பிராமணர்கள் சாமர்த்தியமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 
             ஆனால் அதற்கு பெரும்பான்மை இந்துக்கள் இரையாக வில்லை என்பதும்  அதற்கு  பெரியாரும் அண்ணாவும் விதைத்து வைத்த சுயமரியாதை உணர்வு தான் காரணம்  என்பதும் மறக்கக் கூடாத உண்மை. 
            சூழ்ச்சி ஒருபோதும் வெற்றி பெறாது.  
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)