விஜய் சேதுபதிக்கு எதிரான அர்த்தமற்ற போராட்டம்?

vijay-sethupathi
vijay-sethupathi

மொத்த விற்பனை செய்யும் பெரு நிறுவனம் மண்டி. அவர்கள் மளிகை பொருட்களை ஆன் லைனில் மொத்த விற்பனை செய்கிறார்கள்.

மொத்த விற்பனையை ஆன்லைனில் விற்பனை செய்வதை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அதில் அர்த்தம் உள்ளது. அதனால் சிறு குறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

21 லட்சம் வணிக குடும்பங்கள் தொழிலாளர்கள் வாழ்வு பெரிதும் பாதிக்கப்படும் என்றால் போராட்டம் நடத்தி ஆக வேண்டும் என்பதிலும் மாறுபட்ட கருத்து இல்லை.

ஆனால் அந்த பெரு நிறுவனம் தனது தொழிலை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஒரு நடவடிக்கை எடுத்து அதில் நடிகர் விஜய் சேதுபதியை பயன்படுத்தி இருக்கும்போது நீ ஏன் அதில் நடித்தாய் என்று கேட்டு அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்து வணிகர் சங்கம் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

காவல்துறைக்குத் தான் வேலை கொடுத்திருக்கிறார்கள். இதனால் அந்த நிறுவனம் தன் தொழிலை நிறுத்தி விடப்போகிறார்களா?

ஆன்லைனில் வணிகம் நடத்த அனுமதி வழங்கிய ஆட்சியாளர்களை சந்தித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வழி வகை காணாமல் இடையில் விளம்பரத்தில் வந்து போகிற நடிகருக்கு எதிராக போராட்டம் நடத்தி தங்கள் சக்தியை வணிகர்கள் வீணாக்க வேண்டாம்.

இன்று வீடு தேடி உணவு வழங்கும் ச்விக்கி உபேர் போன்ற வியாபாரிகளால் தங்கள் வணிகம் பாதிக்கப்படுகிறது என்று ஓட்டல்காரர்கள் எல்லாம் புலம்புகிறார்கள். அந்த வணிகத்தை தடை செய்ய முடியுமா?

பல ஓட்டல்கள் வியாபாரம் இன்றி மூடப்பட்டு வருகின்றன.

நவீன கால டிஜிட்டல் வணிகம் பாரம்பரிய நிறுவனங்களை புரட்டி போட்டு வருகிறது. அவைகளை சமாளிக்க புதிய உத்திகளை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

ஒரு விளம்பரத்தை நிறுத்தினால் வணிகம் நின்று விடும் என்ற நிலைமை இல்லையே? இவர் இல்லாவிட்டால் இன்னொருவர் தோன்றப் போகிறார். உங்களுக்கு பிரச்னை விஜய் செதுபதியா? ஆன்லைன் வர்த்தகமா? 

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து போராடுங்கள். விஜய்சேதுபதியை விட்டுவிடுங்கள்.