இந்து – சேலத்தில் வன்னியர் -தலித் மோதலில் தடுக்கப் பட்ட கோவில் குடமுழுக்கு!!! வெல்லப்போவது மதமா? சாதியா?

                சைலாம்பிகை- சைலகிரீச்வரர் – வரதராஜா பெருமாள் கோவில்கள்   21 கிராமங்களை சேர்ந்த வன்னியர்களுக்கு சொந்தமானது என்றும் தாங்கள் மூன்று கோடி செலவு செய்து கட்டிய கோவிலில் குடமுழுக்கு நடத்தும்போது தலித்துகள் வரக்கூடாது என்று ஒரு தரப்பும் நாங்கள் கேட்பது வழிபாட்டு உரிமைதான் என்பதால் நாங்கள் நீதிமன்றம் சென்றாவது அந்த உரிமையை நிலை நாட்டுவோம் என்றும் மறு தரப்பும் வாதிட்டு வந்த நிலையில் கோவில் பூட்டப் பட்டு ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டு கலவர சூழ்நிலையை அதிகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

                 வன்னியர்களுக்கோ தாங்கள் அறங்காவலர்கள் என்பதிலும் நிர்வாகப் பொறுப்பு தங்களிடம் இருந்தால் போதும் என்பதிலும் இருக்கும் அக்கறை கும்பாபிஷேகம் தமிழிலா அல்லது வட மொழியிலா என்பதிலோ கருவறையில் தமிழா வடமொழியா என்பதிலோ எந்தக் கவலையும் இல்லை.   
                 அதை யார் செய்தாலும் எப்படி செய்தாலும் ஆட்சேபனை தெரிவிக்காதவர்கள் அந்த சாமியை யார் கும்பிடுவது என்பதில் சாதி பார்த்து உரிமை மறுப்பது என்ன நியாயம்?   அதில் என்ன பகுத்தறிவு, இனமானம், சுயமரியாதை இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.
               இரண்டு பெரும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில்தான் என்ன பொருள் இருக்கிறது. ? 
                அ.தி.மு.க.-பா.ம.க. என்று கட்சி வித்தியாசம் இல்லாமல் இதில் மட்டும் ஒன்று பட்டு நிற்கிறார்கள்.  தமிழர் ஒற்றுமையில் அக்கறை காட்டும் மருத்துவர் ராமதாஸ் இந்த பிரச்சினையில் காவல் துறை அதிகாரிகள் மீது குற்றம் காண்பது ஏமாற்றம் அளிக்கிறது. 
                அரசியலை தனியாகவும் மதம் -மதம் சார்ந்த சாதி தொடர்பான பிரச்சினைகளையும் பகுத்துப் பார்த்து இணக்கமான முடிவை எடுக்க அந்தந்த சாதிகளை சேர்ந்த அறிவாளிகள் முன்வந்தால் தவிர தமிழர் ஒற்றுமை என்பது கானல் நீராகவே போகும்!!!!

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)