தீக்குளிக்கும் தமிழர்கள்!! வெட்கமா? வேதனையா? நிதி கொடுத்து விளம்பரப் படுத்துவது சரியா? தவறா? ஜெயலலிதா வுக்கு ஒரு வேண்டுகோள்!!!!!

      நாடும் இனமும் மொழியும் பாதிக்கப் படும்போது செய்வதறியாத நிலையில் பலர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள்.    அவர்கள் ஈகிகள் எனப்படுவர்.  முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஈழப்போரின் இறுதியில் கொடூரமாக  தமிழர்கள்  கொல்லப்பட்ட நினைவைத் தாங்க முடியாமல் இருபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள்  உடலை நெருப்புக்கு இரையாக்கி  மாய்ந்தனர் .   அது வரலாற்றுக்கு  ஒரு பாடம்.  
         வைகோ தி மு க வில் இருந்து  நீக்கப்பட்டபோது தீக்குளித் தவர்களின்   ஆன்மா அவர் மீண்டும் திமுகவோடு கூட்டு வைத்தபோது துடித்திருக்காதா ?    
           ஜெயலலிதாவுக்கு சிறை தண்டணை என்றவுடன் பேருந்து கொளுத்தப் பட்டதில் இறந்த மூன்று மருத்துவ மாணவிகளின் கனவை சிதைத்து விட்டு இன்று வழக்கில் சிக்கி வாடுகிறார்களே அவர்கள் என்ன சாதித்து விட்டார்கள்?   அவர்களை தூண்டியது எது?
           ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி இறந்தபோது தீக்குளித்து இறந்தார்கள் என்று எழுநூருக்கும் மேல் பட்டியல் இட்டா ர்களே அவர்களது ஆன்மாக்கள் , இன்று அவர் மகன் ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் சிக்கினாலும் போராடிக் கொடுத்தான் இருக்கிறாரே தவிர , தற்கொலை செய்து கொள்ள வில்லை என்பதை பார்த்து தங்கள் செய்கையை எண்ணி நிச்சயம் வெட்கப் படும்.
        ஏன் சமீபத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்டபோது     மாரடைப்பிலும் தீக்குளித்தும் இறந்தார்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பட்டியலிட்டு அவர்கள் குடும்பத்துக்கு ரூபாய் மூன்று லட்சம் வீதம் நிவாரணம் கொடுத்தார்கள்.      அப்படிக் கொடுக்கும் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்வது தவறு என்று சொல்லி விட்டுத்தான் கொடுத்தார்கள்.           தொண்டர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் உரிமையும் கடமையும் கட்சிக்கு இருக்கிறது என்பதில் யாருக்கு கருத்து வேறுபாடு இல்லை.
       ஆனால்   மாறி மாறி வரும் அரசியல் காரணங்களுக்காக  தொண்டர்கள் தீக்குளிப்பது சரிதானா?     அது தமிழர் களுக்கு இழிவைத் தருவது ஆகாதா?    அந்த இழிவை  தவிர்க்கும் கடமை அரசியல் தலைவர்களுக்கு உண்டா? இல்லையா?
          இப்போது  ஜெயலலிதா கிரிமினல் வழக்கில் தண்டனைக்கு உள்ளாகி முதல் அமைச்சர் பதவியை இழந்து  நிற்கிறார்.  மேன் முறையீட்டில்  தண்டனை உறுதி செய்யப் படவோ விடுதலையாகவோ வாய்ப்பு இருக்கிறது .    அது சட்டத்தின் கையில்.
           சமீபத்தில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் இவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினர் நாகராஜன் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி இறந்ததால் , தனது ஆழ்ந்த வேதனையை பதிவு செய்து விட்டு குடும்பத்துக்கு மூன்று லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
          ஒருவேளை இவர் பெற்ற தண்டணை  உறுதி செய்யப் பட்டு இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாமல் போனால் அப்பாவி தொண்டர்கள் என்னென்ன முடிவுகளை எடுப்பார்களோ  என்று சிந்திக்கவே பயமாக இருக்கிறது.
           அதுஎன்ன  இறப்பவர்கள் எல்லாமே சாதாரண தொண்டர்களாக இருக்கிறார்கள்?       நகர செயலாளர் அளவுக்கு மேல் இருப்பவர்கள் யாருமே தீக்குளிப்பதில்லை?      அவர்களுக்கு இது நிரந்தரம் அல்ல என்பது தெரியும்.
            தலைவர்களே!!       தீக்குளித்தால்  அஞ்சலியை வெளிப்படையாகவும் நிவாரணத்தை மறைமுகமாகவும் செய்யுங்கள்!
            கட்சி  கண்டு கொள்ள வில்லையே என்று மற்ற தொண்டர்கள் கேள்வி கேட்பார்களே என்ற கவலை வேண்டாம்?       அதுதான் மாவட்ட கட்சி    தெரியப் படுத்திக் கொள்ளுமே?              
              இறந்தவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் செயல் கொடுமையானது.  
                நிவாரணங்களுக்காக  உயிரை விட்டார்கள் என்ற அவப் பெயர் யார் குடும்பத்திற்கும் வேண்டாம் !!!
                இந்த இழிவு அரசியல் கலாசாரத்தை கட்டுப் படுத்தும் கடமை மானமுள்ள  தலைவர்கள் அனைவருக்கும் இருக்கிறது.
               
       
     
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
Share