Connect with us

சேது சமுத்திர கால்வாய்த்திட்டம் –எதிர்ப்பவர்கள் யார்? ஏன் எதிர்க்கிறார்கள் ?

Latest News

சேது சமுத்திர கால்வாய்த்திட்டம் –எதிர்ப்பவர்கள் யார்? ஏன் எதிர்க்கிறார்கள் ?

தமிழர்களின் கனவுத் திட்டம் என்று ஏதாவது இருக்குமானால் அது சேதுக்கால்வாய்த் திட்டம்தான் நூற்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனை முயற்சிகள்? சுதந்திரம் பெறுவதற்கு முன்னால்  ஒன்பது கமிட்டிகள்.  பெற்ற பின்பு ஐந்து கமிட்டிகள்.
அத்தனை கமிட்டிகளிலும் நிலவழிக் கால்வாய், சுற்றுச் சூழல் பாதிப்பு , மீனவர் நலன் , பொருளாதார மேம்பாடு , லாப வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் , மாற்று வழிப் பாதைகள் , என்று எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து முடிவுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
இரண்டாயிரத்து ஐந்தில் பிரதமர் தொடங்கி வைத்த பிறகு எண்ணூற்று ஐம்பது கோடி செலவழித்து விட்டாகிவிட்டது.  அதுவரை இலங்கை அரசும் கொழும்புவின் கப்பல் முதலாளி களும் மட்டுமே எதிர்த்து வந்த இந்த திட்டத்திற்கு இந்தியாவில் முதல் எதிர்ப்பை துவங்கியவர் சுப்பிரமணிய சாமி . அவர்தான் முதன் முதலாக இரண்டாயிரத்து ஒன்பதில்  உச்ச நீதி மன்றத்தில் ராமர் பாலத்தை சேதப் படுத்தி கால்வாய் திட்டம் அமுல் படுத்த கூடாது என்று வாதிட்டார். கொழும்பின் பண முதலைகள் சேதுத் திட்டத்தை முறியடிக்க இந்தியாவில் ஆதரவு திரட்டுகிறார்கள் என்று பேட்டி கொடுத்தவரும் இவர்தான்.
அதுவரை தமிழகத்தில் தி மு க , அ இ அ தி மு க, காங்கிரஸ், பா ஜ க , இடதுசாரிகள் என்று எல்லா கட்சிகளும் தங்கள் செயற்குழு பொதுக்குழு கூடினால் சேது சமுத்ர திட்டத்தை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றாமல் இருக்க மாட்டார்கள்.
சு சாமியின் குரலை பா ஜ க சுவீகரித்துக் கொண்டது.   திடீர் பல்டி அடித்து அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு மாறாக ராமர் பாலம் சேதப் படுத்தக் கூடாது ,திட்டமே கூடாது என்று குரல் கொடுக்க தொடங்கினார்கள்.
தமிழகத்தில் வேரூன்றாத நிலையில் இந்தியாவின் பிற மாநிலங்களில் அரசியல் செய்ய சரியான ஆயுதம் கிடைத்து விட்டதாக அந்தக் கட்சி சேதுவைக் காப்போம் என்று குரல் கொடுக்க தொடங்கி விட்டது.   அதன் தமிழ் மாநில கிளைக்கு தலைமையை எதிர்த்து மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் தைரியம் கிடையாது.
ராமர் பாலம் என்றதும் முதல்வர்  ஜெயலலிதாவும் சு சாமியின் வழியில் செல்ல தயாரானார்.   விளைவு உச்ச நீதி மன்றத்தில் மாநில அரசு திட்டமே வேண்டாம் என்று அவிடவிட்டு தாக்கல் செய்தது.     இந்தியாவிலேயே தன் மாநிலத்திற்கு கிடைக்க இருக்கும் மத்திய அரசின் திட்டத்தை வேண்டாம் என்று மறுத்த ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். 
திடீர் என்று மீனவர்களின் நலன் பாதிக்கப் படும் என்று குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.   மாநில அரசின் பின்புலம் இருப்பதாக கேள்விகள் !
அதுவும் தி மு க தலைவர் கலைஞர் சேதுத்திட்டத்தை நிறைவேற்ற மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டங்களை அறிவித்ததும் தூண்டி விடப் பட்ட மீனவர் அமைப்புகளின் பேரால் சுவரொட்டிகள் வெளிவந்தன.
முதலில் அது ராமர் பாலமா ஆதாம் பாலமா என்பதே முடிவு செய்யப் படவில்லை தனுஷ்கோடி பக்கம் ஒன்றும் கோடியக்கரை பக்கம் ஒன்றும் என்று இரண்டு மணல் திட்டுகள் இருக்கின்றன. இவற்றில் எனது ராமர் பாலம் ? முக்கியமாக மணல் திட்டுகளை முழுவதுமாக யாரும் அழிக்கப் போவதில்லை.   முப்பது மீட்டர் அகலம் உள்ள பகுதி மட்டுமே அதுவும் குறிப்பிட்ட நீளத்திற்கு மட்டுமே திட்டுப்பகுதி பயன்படுத்தப் பட உள்ளது.
அதனால் பக்தர்கள் எவரும் மற்ற மணல் திட்டுப் பகுதியை பாலமாக பாவித்து வணங்குவதை யாரும் தடுக்கப் போவதில்லை.
மத்திய அரசின் கொள்கை முடிவை உச்ச நீதி மன்றம் அமுல் படுத்த தேவையான உத்தரவை பிறப்பிக்கும் என்று தமிழர்கள் எதிர் பார்க்கிறார்கள். .
ராமரின் பேரைச் சொல்லி தமிழகம் வளம் பெறுவதை தடுப்பவர்களை ராமரே மன்னிக்க மாட்டார்.
திட்டத்திற்கு ராமர் பேரை வைப்பதில் கூட தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றுகூட கலைஞர் அறிவித்துவிட்டார்.
திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக மத்திய அமைச்சர்கள் வாசனும் நாராயணசாமியும் அறிவித்து இருக்கிறார்கள்.
சிங்களர்களின் குரலை  எதிரொலிக்க தமிழகத்தில் இத்தனை பேர்களா?
எல்லா சதிகளையும் முறியடித்து சேதுத் திட்டம் நிறைவேற உச்ச நீதி மன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருப்போம் .
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top