தனக்கு தானே குழி தோண்டிக்கொண்ட பாஜக-வின் தேர்தல் அறிக்கை..

bjp
bjp

இவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையை சுத்தமாக துடைத்து விட்டது பாஜக வின் தேர்தல் அறிக்கை.

கூட்டுத் தலைமையை ஒழித்து விட்ட நரேந்திர மோடி இப்போது அதன் மீதான நம்பிக்கையையும் ஒழித்துவிட்டார்.

நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்ளவே முடியாத சனாதன கருத்துக்களை மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறது பாஜக.

அரசியல் சட்டத்தின் 370 மற்றும் 35 A பிரிவுகள் மாற்றப்பட்டு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை பறிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக. அதை மீண்டும் உறுதி படுத்தி இருக்கிறது தேர்தல் அறிக்கை.

பொதுசிவில்சட்டம் கொண்டு வருவோம் என்கிறது அறிக்கை. தனிவாழ்க்கையில் கூட தங்கள் மதப்படியான உரிமைகளை மக்கள்  இழக்க வேண்டும் என்கிறது. குழப்பத்தையும் எதிர்ப்பையும் தான் இது ஏற்படுத்தும்.

அனைத்து பள்ளிகளிலும் சமஸ்க்ரிதம் கற்பித்தல் விரிவாக்கம் செய்யப்படும் பிரபலப் படுத்தப் படும். சமஸ்கிருத ஆராய்ச்சியை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஆராய்சியாளர்கள் மற்றும் புலவர்கள் 100 பேருக்கு பாணினி பெயரில் பண நல்கையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்படும் என்கிறது அறிக்கை. என் மற்ற மொழிகள் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்பட கூடாதா அதற்கு உரிய தகுதி மற்ற மொழிகளுக்கு இல்லையா என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.    சமஸ்கிருதம் வழக்கொழிந்துபோய் மற்ற எல்லா மொழிகளிலும் இரண்டறக் கலந்து விட்டது. அதைத் தனிமைப் படுத்தி தனி உருவம் கொடுக்கும் வேலை வேண்டாத வேலை. அதில்  முனைப்பாக இருக்கிறது பாஜக. மற்ற மொழிக்காரர்கள் மத்தியில் வெறுப்பை வளர்க்கும் வேலை இது.

வேலை வாய்ப்புக்கு எந்த வாக்குறுதியும் இல்லை.

அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு விலக்கு, இந்தி மொழி திணிப்பு நிறுத்தம், கேபிள் கட்டண குறைப்பு, தமிழ் வளர்ச்சி திட்டங்கள் என இருந்தவற்றிற்கு மாறாக பாஜக தேர்தல் அறிக்கை இருப்பதை யாரும் விளக்குவதற்கு முன் வரவில்லை.

    இந்தியாவை ஒற்றைக் கலாச்சார நாடாக மாற்றிடத் துடிக்கும் வெறிதான் பாஜக வின் தேர்தல் அறிக்கையில் தெரிகிறது. 

இவர்கள் கையில் நாடு போனால் என்னவாகும் மாநில உரிமைகள் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

நல்லவேளை தேர்தலுக்கு முன்பாகவே தங்களை அடையாளப் படுத்திக் கொண்டார்களே.

ஆங்கிலதிலும் இந்தியிலும் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கை  மற்ற மாநில மக்களுக்கு அவரவர் மொழிகளில் தரப்பட தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து தங்களை நன்றாக மீண்டும் அடையாள படுத்திக்கொண்டிருகிறது பாஜக .

மொத்தத்தில் தனக்கு தானே குழி தோண்டிக் கொண்டு விட்டது பாஜக தனது தேர்தல் அறிக்கை மூலமாகவே??!!